Published : 05 Jul 2017 11:18 AM
Last Updated : 05 Jul 2017 11:18 AM

திசையில்லாப் பயணம் 13: எது தர்மம்?

‘Intellectual’ என்ற ஆங்கிலச் சொல்லை ‘அறிவு ஜீவி’ என்று இக்காலத்தில் மொழியாக்கம் செய்து கூறுகிறார்கள். ஆபத்து! தனித் தமிழில் சொல்ல வேண்டுமென்றால், ‘அறிவு சீவி’யாகிவிடும்! ‘சான்றோர்’ என்று குறளில் வழங்கும் சொல்லே ‘intellectual’ஐ குறிக்கக் கூடாது? ஷேக்ஸ்பியர் ‘அறிவு ஜீவியா?’ என்று ஒருவர் என்னைக் கேட்டபோது என் மனதில் இக்கேள்வி எழுந்தது.

‘‘முதலில் ஷேக்ஸ்பியரை அறிவு ஜீவி என்று இக்காலச் சொல் மரபு கொண்டு சித்தரிப்பதே தவறு. ஷேக்ஸ்பியர் மக்கள் கவிஞன். அவன் காலத்தில், அவன் நாடகங்களை சாதாரண மக்களும் கண்டு களித்தார்கள். ஷேக்ஸ்பியர் நடை முறைகளைச் சித்தரித்தானே தவிர, யாரையும் பற்றித் தீர்ப்பு வழங்கவில்லை. மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல; மதிப் பீடுகளைப் பற்றியும் தன் அபிப்பிராய மாக அவன் எதுவும் சொல்ல வில்லை. அவன் படைத்த நாடக மாந்தர்கள், அவர்கள் பண்புக்கேற்ப பேசுகிறார்கள். அவ்வளவுதான்’’ என்றேன் நான்.

அவர்கள் போன பிறகு அந்த மாணவி எழுப்பிய கேள்வி என்னைச் சிந்திக்கத் தூண்டியது.

புரூட்டஸ் நாட்டின் மீதுள்ள பற்றினால், ஜூலியஸ் சீஸர் அரசனாவதைத் தடுக்க அவனைக் கொன்றதாகக் கூறுகிறான். ‘‘சீஸர் என் நெருங்கிய நண்பன்தான், ஆனால் நான் ரோமை, சீஸரைக் காட் டிலும் இன்னும் அதிகம் நேசிக்கிறேன்!’’ என்கிறான் அவன். இங்கு இரண்டு மதிப் பீடுகளுக்கு இடையே மோதல். நட்பா அல் லது நாட்டு நலமா? அவனைக் கொலை காரன் என்று முதலில் குறிப்பிடும் மார்க் ஆண்டனி, நாடகத்தின் கடைசியில், ‘‘நாட்டு நலம் மிக்க இவனல்லவோ மனிதன்!’’ என்று பாராட்டிக் கூறுகிறான். கதை மாந்தர்கள் பேசுகின்றார்களே யன்றி, நாடக ஆசிரியன் எதுவும் சொல்ல வில்லை. இந்நாடகத்தைப் படிக் கின்றவர்களுக்கு, அவரவர் பண் புக்கு ஏற்ப எது சரி என்று அவர்களுக்குப் படுகின்றதோ அதுதான் சரி என்பதுபோல இருந்துவிடு கிறான் படைப்பாளி. தீர்ப்பு வழங்குவது கலைஞனின் பொறுப்பன்று.

ராமாயணத்தில் சகோதரர்களில் வீடணன், அண்ணன் ராவணனை விட்டு நீங்கி ராமனைச் சார்கிறான். பிறர் மனையை நயப்பது போன்ற தவறைச் செய்த அண்ணனுக்காகப் போராடுவது தவறு என்று அவன் நினைக்கிறான். ஆனால், அவனுடைய இன்னொரு சகோதரன் கும்பகருணன், ‘அண்ணன் செய்திருப்பது தவறாக இருந் தாலும், அவனை விட்டு நீங்கி அவனுடைய பகைவனிடம் அடைக் கலம் புகுதல் தர்மமில்லை’ என்று கருதுகிறான்.

வால்மீகியின் கும்பகருணனைக் காட்டிலும், கம்பனின் கும்பகருணன் ‘குணம் என்ற குன்றேறி’ நிற்கிறான். அவன் தன்னை ராமனிடம் அழைத்துப் போக வந்த வீடணனிடம் கூறுகிறான்: ‘‘உன்னைப் பொறுத்தவரையில் நீ செய் தது சரி. நீ எப்பொழுதுமே ராவணனின் அதர்மப் போர்களில் பங்குகொண்டது இல்லை. இப்போது உன்னை அவன் கொல்ல முயன்றபோது, நீ தப்பித்து வந்து ராமனைச் சார்ந்து நிற்கிறாய். ஆனால், நானோ எப்போதுமே அவனுடன் எல்லாப் போர்களிலும் பங்குகொண்டு விட்டு, இப்போது அவன் தோற்றுவிடப் போகிறான் என்கிற நிலையில் அவ னைக் கைவிட்டு வருவது அதர்மம். நீ உன் கர்மத்தைச் செய், நான் என் கர்மத்தைச் செய்கிறேன். ‘நீர்க் கோல வாழ்வு நச்சி நெடிதுநாள் வளர்த்தப் பின்னைப், போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர்க் கொடாது அங்குப் போகேன்’ என்பது அவன் திருவாக்கு.

யார் செய்தது சரி? ‘இருத்தலியல்’ (Existential Question) கேள்வி இது. எது உயர்ந்தது? சகோதரப் பாசமா (நாட்டுப் பற்றா) அல்லது தான் தர்மம் என்று கொண்ட லட்சியத்துக்காக எதிரியுடன் சேர்ந்து போராடுவதா?

‘கொரியோலினஸ்’

என்ற ஷேக்ஸ் பியரின் அதிகம் பேசப்படாத ஒரு நாடகம். கொரியோலினஸ் ஒரு மாபெரும் ரோமா புரி வீரன். பிரபு வம்சம். அவனுக்கு பொதுஜனங்களைப் பிடிக்காது. ‘எலிக் கூட்டம்’ என்று அவர்களை வெறுக் கிறான். அப்படியொரு வெறுப்பு ஏற்பட என்ன காரணமென்றும் அவனுக்குத் தெரியவில்லை. பொதுஜனங்களும் அவனை வெறுக்கிறார்கள். காரணம், ரோமாபுரியில் பஞ்சம் ஏற்பட்டபோது, பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் அதிக தானியங்களை ஏழைகளுடன் பகிர வேண்டுமென்ற தீர்மானத்தை அவன் நிராகரித்துவிடுகிறான்.

அப்போது ரோமை எதிரிகள் தாக்கு கிறார்கள். கொரியோலினஸ் எதிகளோடு போரிட்டு நாட்டைக் காப்பாற்றுகிறான். எதிரிகளுடைய முக்கிய நகரத்தையும் கைப்பற்றிவிடுகிறான். பிரபுக்கள், அவனை ரோம் தலைவனாக (Consul) ஆக்க வேண்டுமென்று விரும்புகிறார் கள். ஆனால், பொதுமக்கள்தாம் அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே, அவனை மக்களிடம் சென்று அவன் போரில் பெற்ற 27 விழுப்புண் களைக் காட்டி அவர்களிடம் தன் விருப்பத்தைச் சொல்ல வேண்டுமென்று பிரபுக்களும், அவன் தாயும் மனைவியும் அவனைக் கெஞ்சுகிறார்கள். ‘எலி களுக்கு முன் காட்சிப் பொருளாக நான் இருக்க விரும்பவில்லை’என்று முதலில் மறுக்கும் அவன், பிறகு இசைகிறான்.

‘நாட்டைக் காத்த மாபெரும் வீரன்’ என்று அவனை மன்னித்து இப்போது கொண்டாடும் பொதுஜனங்களின் மனதை, ‘டிரிபூயூன்கள்’ எனப்படும் அவர்களுடைய தலைவர்கள் இருவர் கலைத்துவிடுகிறார்கள். அவனை நாட்டுத் துரோகி என்று குற்றம்சாட்டி, நாடு கடத்த வேண்டுமென்று தீர்மானம் போடுகிறார்கள். தேர்தலில் பொது ஜனங்களை நம்பியிருக்கும் பிரபுக் களும் இத்தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுவிடுகிறார்கள். வஞ்சிக்கப்பட்ட கொரியோலினஸ் எதிரிகளுடன் சேர்ந்து ரோம் மீது படையெடுக்கின்றான்.

ரோமாபுரியில் அவனுக்கு இணை யான வீரர்களே இல்லை. அவர்கள் அச்சமடைந்து, கொரியோலினஸ் தாயை யும், மனைவியையும் அவனிடம் சமாதானம் பேச தூது அனுப்புகிறார்கள். நாட்டுப்பற்று மிக்க தாய், மகன் சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று அவனிடம் சென்று மன்றாடுகிறாள். அவன் இதற்கு இசைந்தால், தங் களைக் கைவிட்டதற்காக எதிரிகள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், நாட்டைவிட மகன் உயிர் பெரி தன்று என அவள் நினைக்கிறாள். கொரியோலினஸ் அவள் வேண்டு கோளுக்கு இசைகிறான். அவனை எதிரிகள் கொன்றுவிடுகிறார்கள்.

இந்த நாடகம் பல மதிப்பீடுகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. நாட் டைக் காப்பாற்றியவனை, அவன் பொது ஜனங்களை விரும்பவில்லை என்பதற் காக நாடு கடத்தியது சரியா? மக்கள் ஏழைகளாகவும், கல்வி அறிவில்லாதவர் களாகவும் இருக்கிறார்கள் என்பதற் காக கொரியோலினஸ் அவர்களை வெறுத்தது சரியா? மகனுடைய உயிரைக் காட்டிலும் நாட்டு நலன் முக்கியமா? ஷேக்ஸ்பியர் எதற்கும் விடை கூறவில்லை. நாடகத்தைப் படிக்கிறவர்களும், பார்க்கிறவர்களும், அவரவர் பண்புகளுக்கு ஏற்ப விடை கொள்ளலாம். இதை artistic ambiguity என்பார்கள் விமர்சகர்கள்.

- பயணிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x