Last Updated : 08 Nov, 2015 11:07 AM

 

Published : 08 Nov 2015 11:07 AM
Last Updated : 08 Nov 2015 11:07 AM

தமிழுக்கு ஓர் இருக்கை

உலகில் சிறந்த பல்கலைக்கழகம் எது என்று கேட்டால் கல்வியாளர்களின் பதில் அனேகமாக ‘ஹார்வேர்ட்’ என்பதாகத்தான் இருக்கும். 380 ஆண்டுகளாக இயங்கிவரும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் அந்த அளவுக்குப் பல விதங்களிலும் சிறப்புப் பெற்றது. இத்தகைய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஓர் இருக்கை (Chair) உருவாக்கப்பட்டால் அது தமிழுக்கான கவுரமாகத்தானே இருக்க முடியும்? ஆனால் அது அத்தனை எளிதாக நடக்கக்கூடிய காரியமல்ல. 6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 39 கோடி) செலவுபிடிக்கக்கூடிய மாபெரும் சவால் அது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் சாகசத்தில் துணிந்து இறங்கியிருக்கிறார்கள் அமெரிக்க வாழ் தமிழர்களான சம்பந்தமும் (69) ஜானகிராமனும் (65).

இருவரும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர் (சுமார் மூன்றேகால் கோடி ரூபாய்) கொடுத்து இதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள். இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்டு இவர்களது முயற்சிக்குத் தனது ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்திருக்கிறது. ஹார்வேர்ட் பல்கலைக்கழக கலை மற்றும் மானுடவியல் துறையின் டீன் டயானா சோரென்சென் இவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த முயற்சியைப் பாராட்டியிருக்கிறார்.

மொழி மீது மாறாத அக்கறை

ஜானகிராமன், சம்பந்தம் இருவரும் 1960களில் அமெரிக்கா சென்றவர்கள். இருவருமே மருத்துவர்கள். கடுமையாகப் போராடி வாழ்க்கையில் உயர்ந்தவர்கள். வாழ்க்கையில் உயர்நிலைக்குச் சென்ற இவர்கள், தங்கள் வேர்களை மறக்கவில்லை. குறிப்பாகத் தாய்மொழியை. அமெரிக்காவுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்ட இந்தியர்கள் பலரும் தங்கள் பண்பாட்டு வேர்களை அங்கே புதுப்பித்துக்கொள்வது புதிதல்ல. கோவில், வழிபாடு, பண்டிகைகள் எனப் பண்பாட்டில் அதிக அக்கறை காட்டுவது சகஜம். ஆனால் இவர்கள் காட்டும் அக்கறை பிரதானமாக மொழியின் மீது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் ஜானகிராமனின் நெருங்கிய உறவினர். ஆனால் நெடுஞ்செழியனைப் பார்த்து ஜானகிராமனுக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்படவில்லை. தமிழ் மீது ஈடுபாடு வந்தது. சம்பந்தமின் பின்புலத்தில் நெடுஞ்செழியனைப் போன்ற ஆளுமையின் தாக்கம் இல்லை என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சியால் அறுபதுகளில் தமிழகம் முழுவதும் பரவியிருந்த மொழி உணர்வு இவரையும் பற்றிக்கொண்டது.

அமெரிக்காவிலேயே தங்கிவிட்டாலும் தமிழுடனான தொடர்பை இவர்கள் துண்டித்துக்கொள்ளவில்லை. புற்றுநோய் சிகிச்சை நிபுணரான ஜானகிராமன், நோய் முற்றிக் கையறு நிலையில் இருக்கும் நோயாளிகளிடம், புராணங்களில் தான் படித்த தத்துவக் கதைகளை அவர்களுக்குச் சொல்லி ஆற்றுப்படுத்துவார். திருக்குறளில் உள்ள கருத்துகளைச் சொல்வார்.

“பெரிய ஓட்டல்களில் தங்கும்போது அங்கே இலவசமாக பைபிள் பிரதியைக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். மிகப் பிரமாதமான முறையில் அந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கும். அதுபோலவே திருக்குறளைத் தந்தால் என்ன என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது” என்று நினைவுகூரும் சம்பந்தம், மேற்கொண்டு தாங்கள் செய்த முயற்சியை விவரித்தார். ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் ஆங்கிலம் என்று திருக்குறளை அச்சிட்டு இலவசமாக வினியோகித்திருக்கிறார்கள். அழகான அச்சமைப்பு, உயர் தரமான காகிதம் ஆகியவை கொண்ட திருக்குறள் நூலை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு அமெரிக்கர்கள் மத்தியில் இவர்கள் வினியோகித்திருக்கிறார்கள்.

யோசனை எப்படி உருவானது?

சம்பந்தம் மற்றும் ஜானகிராமனின் பொதுநண்பரான வைதேகி ஹெர்பர்ட் மூலமாகத் தான் ஹார்வர்டில் தமிழுக்கான இருக்கையை அமைக்கும் யோசனை இவர்களிடம் கருக்கொண்டது. சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் வைதேகி ஹெர்பர்ட் இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் மேற்கொண்டு விவாதித்து அதற்கான முயற்சியைத் தாங்களே முன்னெடுக்க வேண்டும் எனத் தீர்மானித்து அதற்கான விதையையும் ஊன்றிவிட்டார்கள். “ஆறில் ஒரு பங்கு தொகையை நாங்கள் கொடுத்திருக்கிறோம். வசதி படைத்த தமிழர்கள் இதில் பங்கெடுத்துக்கொள்ள முன்வந்தால் விரைவில் இந்தப் பணியை முடித்துவிடலாம்” என்று சொல்லும் ஜானகிராமன் செல்லும் இடமெல்லாம் தமிழர்களிடம் இதற்கான கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறுகிறார். இந்த இருக்கை அமைந்தால் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான ஆய்வுகளும், பாடங்களும் நடக்கும்.

“மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை” என்று அண்மையில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கூறியிருக்கிறார். சம்பந்தம், ஜானகிராமன் மேற்கொண்டுள்ள முயற்சியைப் பாராட்டியுள்ள அவர், தமிழக அரசு இதற்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பா.ம.க.வின் இளைஞரணிச் செயலர் அன்புமணி ராமதாஸும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஹார்வேர்டில் செய்யப்பட்ட ஆய்வுகள்தாம் யோகா என்னும் கலையின் பெருமைகளை உலகம் அறிய உதவின என்று கூறிய அவர், ஹார்வேர்டில் தமிழுக்கு இருக்கை அமைந்தால் தமிழ் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடைபெறவும் தமிழின் பெருமைகளை உலகம் அறியவும் அது உதவும் என்று கூறியிருக்கிறார். “100 கோடி செலவில் தமிழ்த் தாய்க்குச் சிலைவைக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. “தமிழ்த் தாய் சிலை அமைப்பது வரவேற்கப்பட வேண்டியது தான் என்றாலும், தமிழ்த் தாயை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்வதற்கான இந்த முயற்சி அதைவிட முக்கியம்” என்று அன்புமணி கூறியிருக்கிறார்.

உலகளாவிய அறிவுத் தளத்தில் தமிழை நிலைநிறுத்த உதவக்கூடிய முயற்சியைத் தொடங்கியுள்ள சம்பந்தமும் ஜானகிராமனும் தமிழகத் தமிழர்களிடமிருந்தும் இதற்கான பங்களிப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இருக்கை என்றால் என்ன?

பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட ஒரு துறை அல்லது மொழிக்கெனத் தனித் துறைகள் ஏற்படுத்தப்படுவதுண்டு. இருக்கை (Chair) என்பது வித்தியாசமானது. ஒரு துறை அல்லது புலம் என்தோடு இது இணைக்கப்பட்டுருக்கும் என்றாலும் அதற்கெனத் தனித்த அடையாளமும் உயர் கவுரவமும் இருக்கும். ஒரு மொழிக்கான இருக்கை என்பது அந்த மொழிக்கெனப் பிரத்யேகமாக ஒரு பேராசியரை நியமிப்பதாகும். அவர் தலைமையில் அம்மொழி சார்ந்த ஆய்வுகள் அங்கே நடைபெறும். மொழியைக் கற்றுத்தருவதற்கும், ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு இருக்கும். அறக்கட்டளைக் கொடை பெற்றே இத்தகைய இருக்கைகள் உருவாக்கப்படுகின்றன. அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பெயரிலும் இருக்கைகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட அறிவுப் புலத்துக்குப் பல்கலைக்கழகம் வழங்கும் அதிகபட்சமான மரியாதை என்று சொல்லலாம். பல்கலைக்கழகம் உள்ளவரை இந்த இருக்கையும் செயல்படும்

(sambandam47@yahoo.com, kvjanakiraman@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் இவர்களைத் தொடர்புகொள்ளலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x