Published : 05 Sep 2015 10:09 AM
Last Updated : 05 Sep 2015 10:09 AM

தமிழகப் பண்பாட்டில் காங்கேயக் காளைகள்

சங்க இலக்கியம், தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரச் சிற்பங்கள் என்று ஆரம்பித்து மணப்பாறை முறுக்கு, பத்தமடை பாய், காங்கேயம் காளை என்று நீண்டுகொண்டே செல்கின்றன தமிழ்ப் பண்பாட்டின் இன்றியமையாத அம்சங்கள். இவற்றுள் காங்கேயம் காளைகளைப் பற்றித் தகவல்பூர்வமாகவும் சுவாரசியமாகவும் ஒரு நூலை எழுதியிருக்கிறார் ந. குமாரவேலு. அவருடைய ‘காங்கேயக் காளை’ (தமிழகத்தின் பெருமை) என்ற நூலிலிருந்து சில பகுதிகள்….

காங்கேய மாட்டினத் தோற்றம்

காங்கேய மாடுகள் என கூறப்படும் மாட்டினம் ‘மேக்காட்டு மாடுகள்’ என்று அழைக்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன… காங்கேய மாடுகள் ‘கொங்கர் – ஆ’ அதாவது ‘கொங்கர் மாடு’, ‘கொங்க மாடு’ என்று தமிழிலும், கன்னடத்தில் ‘கங்க மாடு’ என்றும் அழைக்கப்பட்டது. சங்க கால கொங்கு நாணயங்கள் என்ற நூலில் கொங்கு மாடுகளைப் போன்ற உருவம் பொறித்த சேரர் கால நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் கண்டெடுக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவை கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை அறியவும்.

பொலிகாளை

இனச்சேர்க்கைக்கு விடப்படும் பொலிகாளையை பூச்சிக்காளை என்று அழைக்கின்றனர். பொலிகாளை பார்ப்பதற்கு மிடுக்காகவும் கம்பீரமாகவும் வீரியமாகவும் இருக்கும். காளைகளின் உடல் சாம்பல் நிறம் உடையது. தலை, கழுத்து, திமில், இடுப்பு, கணுக்கால் ஆகிய இடங்கள் கருமை சேர்ந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். இரண்டரை வயதிலேயே பொலிக்கும் தன்மைக்கு வந்துவிடுகிறது. என்றாலும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் முழுவதுமாக பொலிக்கு அனுமதிக்கப்படுகிறது… மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காளை மாற்றப்படுகிறது. அதன் மூலம் பிறந்த கிடேரியை பொலி செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. எட்டு வெட்டுப் பற்கள் கீழ்த்தாடையில் முளைத்துவிட்டால் ‘கடைசேர்ந்தது’ அல்லது ‘கடை மொளப்பு’ என்று கூறுகின்றனர். காளைகளின் வம்சாவளியைப் பெயர் வைத்து அழைக்கின்றனர்... பூச்சிக் காளைகள் செவலை அல்லது காரி நிறத்தில் இருந்தால் அவை அசல் காங்கேயமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

கடல் கடந்த காங்கேயம்

காங்கேய மாடுகள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு வேலைக்காக விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. காங்கேய மாடுகள் இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேயா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரேசில் நாட்டில் காங்கேய மாடுகள் சிறப்பாகப் பாது காக்கப்பட்டுவருகின்றன. பிரேசில் நாட்டின் தேசிய மரபு வள மையம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மலேயாவின் ரப்பர் தோட்டங்களுக்கும் அந்நாட்டு பசுக்களுடன் கலப்பினம் செய்யவும் காங்கேயங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்டன. ஒருமுறை சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தின் நிறுவனத் தலைவர் திரு. சிவசேனாபதியிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, பிரேசிலில் ஒரு பண்ணையில் நூற்றுக்கணக்கான காங்கேய மாடுகள் கலப்பு இல்லாமல் பராமரிக்கப்பட்டுவருவதாகவும், அங்கிருந்து சில காளைகளை இறக்குமதி செய்ய திட்டம் இடுவதாகவும் கூறினார்.

காங்கேய மாட்டினக் கிளைகள்

மணப்பாறை மாடுகள்:

இன்றைய கரூர் மாவட்டத்தின் மணப்பாறை என்ற ஊரில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய எருதுகளை விற்றும் வாங்கியும் சென்றனர். இச்சந்தையில் காங்கேயக் காளைகளும் விற்பனைக்கு வந்தன. இவ்வாறு விலைக்கு வந்த காங்கேயக் காளைகள் நல்ல விலை கிடைக்காவிட்டால் வியாபாரிகள் தங்கள் ஊரில் சில நாட்கள் வைத்து அடுத்த சந்தையில் விற்பர்… இப்படித் தங்கும் வேளையில் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் இனச்சேர்க்கை செய்துவிடுவதும் உண்டு. இப்படியாக உருவானதே மணப்பாறை மாடுகள் என்று சுப்பிரமணியம் 1947-ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்.

உம்பளச் சேரி

காவிரி ஆறு கடலில் கலக்கும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மற்றும் நாகையில் காணப்படும் சிறிய வகை உழவு மாடுகள் இவை… காங்கேயக் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்ததினால் உம்பளச் சேரி இனம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கன் (1909) காங்கேய மாட்டின் உடற்கூறுகள் தலை அமைப்பைத் தவிர மற்றாவை யாவும் உம்பளச் சேரி மாட்டில் காணப்படுவதாகக் கூறுகிறார்.

காங்கேயக் காளை (தமிழகத்தின் பெருமை)
முனைவர் ந. குமாரவேலு
விலை: ரூ. 80
வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600 098
தொலைபேசி: 044- 26251968

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x