Last Updated : 22 Mar, 2016 10:48 AM

 

Published : 22 Mar 2016 10:48 AM
Last Updated : 22 Mar 2016 10:48 AM

கதாநதி 10: ஆதவன் - மனதை மொழிபெயர்த்த கதையாளர்!

நகரம் சார்ந்த படித்த இளைஞர்களின் ஆசை, நிராசை, லட்சியம், வெறுமை, எதிரி யார் என்று அறியாத கற்பனை கோபம், பிறர் மீதான அலட்சியம் ஆகியவைகளை ஆதவன் அளவுக்கு மிக உயர் தரத்தில் எழுதியவர் இல்லை. ஆதவனின் சிறுகதைகளும், ‘காகித மலர்கள்’ நாவல் போன்ற படைப்புகளும் தனித்துவம் கொண்டவை. ‘முதலில் இரவு வரும்’ என்ற தொகுதிக்கு 1987-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர் ஆதவன்!

‘ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்’ என்ற ஆதவன் கதையைப் பார்ப்போம்:

நாகராஜன் முடி வெட்டிக் கொள்ளத் தெருவில் கால் வைக்கிறார். ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் சீறிப் பாய்ந்து செல்கிறான். அவருக்குப் படபடப்பு குறைய சில நிமிடங்கள் பிடித்தன. அந்த இளைஞன் மீது அவருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது. சலூனில் நாலைந்து பேர் காத்திருக்கிறார்கள். ஓர் இளைஞன் முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இன்னொருவன் சினிமாப் பத் திரிகையைப் பார்த்துக் கொண்டிருக் கிறான். அவன் கையில் சிகரெட் புகைகிறது. அந்த முள்ளங்கி பையனும் சிகரெட் பையனும் நிச்சயம் ரவுடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். சீறிப் பாய்ந்த அந்த மோட்டார் சைக்கிள் பையன் கோஷ்டி.

அங்கு இருந்த ஒரு தினசரியை எடுத்து அவர் வாசிக்கத் தொடங்கினார். அவர் மனைவி கல்யாணி இருந்தவரை முடிவெட்டிக்கொள்ளும் நாளை ஒரு விழாவாகக் கொண்டாடுவாள். அன்று ஸ்பெஷலாக ஏதாவது பலகாரம் செய்வாள். வீடு போனால், இன்னொரு அரை காபி, எண்ணெய், வெந்நீர் எல்லாம் தயாராக இருக்கும். கல்யாணி அவரை ரொம்பத்தான் சீராட்டியிருக்கிறாள்.

பசித்தது. வீட்டில் பிரட் இல்லை. பிரட் தொழிற்சாலையில் ஸ்டிரைக். அவர் மருமகள் தயா உப்புமா பண்ணியிருந் தாள். கேவலம் உப்புமாவைக் கூட மோசமாகப் பண்ணமுடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறாள் அவள். (உப்புமாவை ஒழிக்க இந்த நாட்டில் யாரும் இல்லையே)

அவர் மகன் பல்கலைக்கழகத்தில் லெக்சரர். அவர் மருமகளும் கூட லெக் சரர்தான். ஒரு குப்பைப் பத்திரிகையில் தலைப்புச் செய்திகளை யும் காசாரத் தலையங்கத்தையும் படித்துவிட்டு, அக்கருத்துக்களைத் தன் கருத்துகளாக அந்நாள் முழுக்கப் பேசித் திரிபவள்.

அவர் முடி வெட்டிக்கொள்ள அழைக்கப்பட்டார். இந்த நாவிதர் 35 வயதுக்காரர்தான். இவரைக் கண்டுபிடிக்கத்தான் எத்தனை அலைச் சல்? அவர் விரல்கள் தலையிலும் கழுத்திலும் முகத்திலும் தடவுவதில், ஒரு கண்ணியமும் மரியாதையும் தெரிகின்றன. வெளியே சென்றிருந்த அந்த வெள்ளரிப் பையன் திரும்பி வருகிறான். சலூன்காரரைப் பார்த்து, ‘‘நீ என்னப்பா, எனக்கு அப்புறம் வந்தவர்கெல்லாம் பண்ணுகிறாய்? நீ என்ன கிழடுகளுக்குத்தான் கடை திறக்கிறாயா?’’ என்று கிண்டலாகப் பேசுகிறான். இன்னுமொரு பையன், நாவிதரைக் குறித்து அவரது ஆண்மையைச் சந்தேகிக்கும் வார்த்தைகளை வீசினான்.

நாகராஜனுக்குப் பொறுக்க முடிய வில்லை. அவர் கோபம், நாவிதருக்குச் சாதகமாக இருக்கும் என்று தோன்றவில்லை. அவருக்கு உடல் பலமும் இல்லை. மனம் குமைந்து தெருவில் இறங்குகிறார். பயங்கர சத்தத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பையன் இவரை இடித்துவிடுவது போல் கடந்து போகிறான். வீடு சேர்ந்து குளித்து சாப்பிட்டுவிட்டு, உறங்கி எழுகிறார். இன்று காபி பரவாயில்லை. காபிகூட சகிக்க முடியாமல் ஆகிக் கொண்டிருக்கிறது.

முன்னறையில் பேச்சுச் சத்தம் கேட்கிறது. பழக்கமான குரல்கள். இதெல்லாம் ஒரு வகை ‘சோஷியல் கேதரிங்’ வாழ்வில் முன்னேற்றப் போகும் படிக்கட்டு. ஆனால், சொல்லப் படவேண்டிய சொல், அன்புச் சந்திப்பு. வந்திருப்பவர் புரொஃபசர் மோட்வானியும் அவர் பெண்டாட்டியும்.

நேற்றுகூட மோட்வானியோடு நாகராஜன் கருத்துரீதியாக மோதினார். ‘‘பல்கலை மூடப்பட்டிருக்கிறது. மாணவர் ரகளை செய்கிறார்கள்’’ என்றார் மோட்வானி நேற்று. நாகராஜன் எதிர்நிலை எடுத்தார். ‘‘மாணவர்களைப் பெரியவர்கள் புரிந்துகொள்ள விரும்பு வதில்லை’’ என்றார்.

நாகராஜன் டிராயிங் ரூமுக்கு வந்து விருந்தினர் முன் அமர்ந்தார். இப்போது புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. மோட்வானி அடுத்தபடியாக துணைவேந்தர் ஆக இருக்கிறார். இந்திய அரசியலில் இடது, வலது, நடு என்று எல்லா இடத்திலும் அவர் செல்வாக்கு வைத்திருந்தார். ஆகவே, அதை எந்தக் கணமும் மறக்கக் கூடாத இடத்தில் நாகராஜனின் மகனும் மருமகளும் இருந்தார்கள். இருவரும் பல்கலையில் ஆசிரியர்கள். அதோடு, அவர் மகன் தீசிஸ் ஒப்படைக்க வேண்டிய தருணம். அவனுக்கு வழிகாட்டியும் துறைத் தலைவரும் மோட்வானிதான்.

‘‘என்ன, யுனிவர்சிட்டியை எப்போது திறக்கப் போகிறார்கள்?’’ என்றார் நாகராஜன்.

‘‘என்னைக் கேட்டால் நான் வைஸ் சான்சிலர் அல்லவே’’ என்றார் மோட்வானி.

‘‘அட்லீஸ்ட் இதுவரை இல்லை’’ என்றார் தயா. அவர் மருமகள் ஆண்களுடைய ஈகோவுக்குத் தீனி போடுவதில் அதீத சாமர்த்தியம் கொண்டவள். மோட்வானி அமுத்த லாகப் புன்னகை புரிந்தார். திடீரென நாகராஜனுக்கு அவருடைய ஈகோவை புண்படுத்தும் ஆசை வந்தது.

‘‘எனக்கு மாணவர்களின் எதிர் காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது’’ என்றார் அவர்.

அவர் மகன் முகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நாகராஜன், ‘‘அரசியல்வாதிகளின் விளையாட்டுக் குச் சர்வகலாசாலையும் ஒரு நிலைக் களனாகிவிட்டதே’’ என்றார். பொடி வைத்த வாக்கியம்.

‘‘நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை’’ - மோட்வானி.

’’ஜெனரேஷன் கேப் இல்லையா?’’ என்றார் நாகராஜன் மிஸஸ் மோட் வானியைப் பார்த்து. அவள் அவர் பார்வையைத் தவிர்த்தாள். அண்மையில் அவள், பிரபலமான இடதுசாரிப் பத்திரிகை ஒன்றில், ‘மாணவர்கள் அலை வரிசையில் சிந்திக்கக் கூடிய இளம் லெக்சரர்கள் நிறைய வேண்டும்’’ என்று விலாசித் தள்ளியிருந்தாள். அவள் கவர்ச்சியில் கால் பங்குக் கூட இல்லாத மிஸ்டர் மோட்வானியைப் பார்க்கும்போது, அவளுடைய தாகம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

தயா உள்ளே இருந்து டிரிங்ஸ் ஊற்றிய தம்ளர்களுடன் வந்தாள்.

’சியர்ஸ்’ என்றபடி எல்லோரும் தம்ளர் எடுத்துக்கொண்டனர். நாக ராஜன் குடிப்பதில்லை. அவர் மருமகள் வெற்றிகரமாக அவரை ஓரம் கட்டிவிட்டாள். இப்போது மருமகள், முன்னாள் துணைவேந்தர் இருவரை கேலிசெய்து அவர் பேசுவதுபோல் அபிநயம் பிடித்தாள். அந்தத் துணைவேந்தர் பெரிய படிப்பாளி. நாகராஜனுக்கு அவர் மேல் மரியாதை உண்டு என்பது தயாவுக்கும் தெரியும்.

வெளியே வந்தார் நாகராஜன். அவர் பேர்த்தி அனு விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டு உரிமையாளர் எதை எதையோ பேசிக்கொண்டிருந்த போது அத்தகவலையும் சொன்னார். அந்தச் சலூன் உரிமையாளர் ஒரு இளைஞனால் கத்தியால் குத்தப்பட்டார் என்பதும் ஒரு தகவல். முள்ளங்கி வெட்டித் தின்ற அந்த இளைஞன்தான். தெருவில் பயங்கரமான ஓசையோடு அந்த இளைஞன் அவரை அதிரச் செய்தபடி விரைந்துகொண்டிருந் தான்.

‘தாத்தா வீட்டுக்குப் போகலாமா?’ என்றாள் அனு. அருகில் வந்து அவர் அந்தக் குழந்தையின் பரிசுத்த மான ஸ்பரிஸத்தால் தன்னைக் கழுவிக்கொள்ள விரும்பியவர் போல, அவளை அவசரமாகத் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்.

ஆதவன் நிகழ்ச்சிகளை, பேச்சுகளை மட்டும் எழுதுவதில்லை. அந்த வகையில் அவர் கதைகள் யதார்த்தம் போலத் தோன்றினாலும் அப்படி இல்லை. மனிதர்களின், உரையாடலின் பின்னிருந்து ஊக்குகிற, இயக்குகிற மனசை எழுதுகிறார். பொம்மலாட்டப் பாவையை இயக்குகிற கயிறு போன்று மனிதர்களை இயக்குகிற மனத் தூண்டுதலை எழுதுகிறார். மனதின் விசித்திர நடனத்தின் கலை வடிவமே அவர் கதைகள். முன்னாள் நின்று பேசும் மனிதர் பேச்சில் அல்ல - பேச விரும்பும் பேச்சை அல்லது மறைக்கும் பேச்சை எழுதியவர் ஆதவன்.

முத்தமிடப் போகும் அந்த இருவரும் முத்தமிட்டுக் கொள்ள முனையும் அந்த மூன்று நிமிஷ அமர கணத்தில், உலகம் ஒரு கணம் மூச்சை இழுத்து இதயத்துள் வைத்துக்கொண்டிருக்கும் அந்தப் பிரளயத்துக்கு முந்தைய பேரமைதி அல்லது பெரும் புயலுக்குப் பிந்தைய பெரும் அமைதியின்போது, அவன் இப்படிப் பேசுகிறான். பேச்சு தேவையே இல்லாத கணத்தில் அவன் இப்படி பேசுகிறான்.

‘‘நான் வழக்கமாக ஏறும் பஸ் ஸ்டாண்டில் ஒருவன் ஓடும் பஸ்ஸில் தொத்தி ஏறும்போது சறுக்கி விழுந்தான். பின்னால் வந்த பஸ் அவன் மேல் ஏறியது’’

எல்லாம் குலைந்து போயிற்று.

அவன் ஏன் அந்த அற்புதக் கணத்தில் மரணத்தைப் பற்றிப் பேசினான்? ஆதவனைக் கேட்டால் முத்தமும் மரணமும் ஒன்றுதான் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். உரையாடல்களைக் காது கேட்கும் போது, உரையாடலைக் கட்டமைக்கும் மனத்தின் கூத்தாட்டத்தை மொழி பெயர்த்த தனித்துவமான பெரும் கலைஞர் அவர்.

நிறைய தற்கொலை. திடீர்ச் சாவு, மரணம் பற்றி எழுதியவர் ஆதவன். சிருங்கேரி ஆற்றில் குளிக்க இறங்கியவர் சுழலில் சிக்கி 45 வயதில் மரணம் அடைந்தார்.

இந்திரா பார்த்தசாரதி தொகுத்த ஆதவனின் ‘ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்’ என்கிற சிறுகதைத் தொகுதியை நேஷ்னல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.

- நதி நகரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x