Published : 26 Jul 2016 09:24 AM
Last Updated : 26 Jul 2016 09:24 AM

கடவுளின் நாக்கு 5: சிலந்திப் பெண்!

உலகின் முதல் மனிதன் ஆப் பிரிக்காவில்தான் தோன்றி னான். ஆகவே உலகின் தாய்வீடு என ஆப்பிரிக்கா அழைக்கப்படுகிறது. மனிதர்கள் மட்டுமில்லை; கதைகளும் ஆப்பிரிக்காவில் இருந்தே அதிகம் உருவாகியிருக்கின்றன.

ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் கதை களின் வழியே இளம்தலைமுறைக்கு வாழ்க்கை பாடங்களைக் கற்றுத் தரு கிறார்கள். ‘கூடிக் கதைகள் பேசுவது’ அவர்களின் பண்பாட்டு நடவடிக்கை.

‘புலியைப் படைத்ததற்காக கட வுளைத் திட்ட வேண்டாம். அதை சிறகு இல்லாமல் படைத்தற்காக நன்றி கூறுங் கள்’ என்றொரு ஆப்பிரிக்க பழமொழி இருக்கிறது. இதுதான் ஆப்பிரிக்கர்களின் மனம். அவர்கள் கஷ்டத்தைக் கண்டு துவண்டுபோய்விடுவது இல்லை. எதிர்கொண்டு போராடுகிறார்கள்.

ஆப்பிரிக்கக் கதைகளில் சிலந்தி ஒரு முக்கிய கதாபாத்திரம். ‘அனன்சி’ என்ற சிலந்தியைப் பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. சிலந்தியைத் தங்களின் வழிகாட்டியாகவே கருது கிறார்கள் அவர்கள். காரணம், வலை பின்னுவதற்கான நேரம் வரட்டும் என சிலந்தி காத்திருப்பதே இல்லை. தனக்கு சிறிய வலை போதும் எனவும் நினைப்பது இல்லை. மிகப் பெரிய வலையைப் பின்னுகிறது சிலந்தி.

எத்தனையோ முறை அறுந்து விழுந் தாலும் சிலந்தி தனது விடாமுயற்சியை எப்போதும் கைவிடுவதே இல்லை. அத்துடன் தன் வலை நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறையையும் காட்டுகிறது.

எல்லாவற்றையும்விட வலை பின்ன இன்னொரு சிலந்தியை அது ஒருபோதும் உதவிக்கு அழைப்பதே இல்லை. மேலும், வேறு சிலந்தியின் வலையைப் பார்த்து பொறாமை கொள் வதும் இல்லை. ஆகவே, சிலந்தியை ஆப்பிரிக்க மக்கள் ஞானியைப் போல கருதுகிறார்கள்!

‘நிக் க்ரீவ்ஸ்’ என்ற கதை சொல்லி தொகுத்த ‘சிங்கம் பறந்தபோது முதலிய ஆப் பிரிக்க கதைகள்’ என்ற புத்தகம் ‘பிரிஜிட்டா ஜெயசீலன்’ என்பவரால் தமி ழாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள் ளது. இந்நூலை ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ வெளியிட்டுள்ளார்கள். கட்டாயம் சிறார் கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

இந்தக் கதைத் தொகுப்பில் அங் கோனி, ஸ்வாஹிலி, புஷ்மேன், பட் டோங்கா, ஷோனா என்று பல்வேறு ஆப் பிரிக்க இன மக்களின் கதைகள் தொகுக் கப்பட்டுள்ளன. அதில், சாணத்தை உருட் டிக் கொண்டு செல்லும் ‘சாணி வண்டு’ பற்றி கானா மக்களிடம் வழங்கப்படும் ஒரு கதையும் இருக்கிறது.

அந்தக் காலத்தில் மழை பெய்ய வைக்கும் அதிசய சக்தி கொண்ட பச்சோந்தி ஒன்று இருந்தது. அதன் முதுகில் இரண்டு தட்டு தட்டி மந்திரச் சொல்லை உச்சரித்தால் உடனே மழை பெய்யும். ‘அனன்சி’ என்ற சிலந்தி பெருமழை வேண்டி பச்சோந்தியை ஓங்கி அடித்துவிட, பச்சோந்தி வலி தாங்க முடியாமல் செத்துப்போனது.

இதை அறிந்த கடவுள் இறந்துபோன பச்சோந்தி உடலை ஒரு டப்பாவில் அடைத்து உருட்டிக் கொண்டிருக்க வேண்டும் என சிலந்திக்கு ஆணையிட் டார். மண்ணில் அந்த டப்பாவை உருட்டி உருட்டி சிலந்தி களைத்துப் போனது.

ஒரு நாள் அவ்வழியே ஒரு வண்டு வந்தது. அதனிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டது சிலந்தி. வண்டும் தான் உருட்டுவதாக ஒப்புக்கொண்டது. அடுத்த நொடியே வண்டினை ஏமாற்றி விட்டு சிலந்தி ஓடிவிட்டது. பாவம், அப் பாவி வண்டு அன்று முதல் அந்தச் சுமையை உருட்டிக்கொண்டே இருக் கிறது என கதை முடிகிறது. இப்படி சிலந்தியைப் பற்றி எல்லா நாடு களிலும் கதைகள் சொல்லப் படுகின்றன.

ஜப்பானில் ஒரு வாய்மொழிக் கதை இருக்கிறது.

அதில், ஒரு விவசாயி ஒரு நாள் பாம்பு உண்ண முயற்சித்த சிலந்தியைப் காப்பாற்றுகிறான். இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு அவனது வீடு தேடி ஒரு இளம்பெண் வந்து வேலை கேட்டாள்.

‘‘உனக்கு என்ன வேலை தெரியும்?’’ என விவசாயி கேட்கும்போது, ‘‘நன்றாக நெசவு நெய்வேன்…’’ என்கிறாள் அந்தப் பெண்.

அவள் மீது பரிதாபம் கொண்டு அவளுக்கு வேலை தருகிறான் விவசாயி. அவள் ஒரு தறியை உருவாக்கிக் கொண்டு இரவு, பகலாக நெசவு செய் கிறாள். அந்தப் பெண் நெய்துவந்த துணி யின் அழகைக் கண்டு வியந்துபோன விவசாயி அவளிடம், ‘‘எப்படி இதை நெய்தாய்?’’ எனக் கேட்டான்.

‘‘என்னிடம் எதையும் நீங்கள் கேட்கக் கூடாது. என் அனுமதில் இல்லாமல் என் அறைக்கும் வரக் கூடாது…’’ என்றாள்.

அவனும் அதை ஏற்றுக் கொண்டான். அவள் நெய்து தரும் விசித்திர ஆடைகளை விற்று நிறையப் பணம் சம்பாதித்தான் விவசாயி. அவனது வாழ்க்கை வளமானது.

ஒரு நாள் ஆர்வ மிகுதியால் ‘அறைக் குள் அவள் என்னதான் செய்கிறாள்’ என ஒளிந்திருந்து பார்த்தான். அதிர்ச்சி யாக இருந்தது அவனுக்கு. அவள் ஒரு சிலந்தியாக உருமாறி நெசவு செய்து கொண்டிருந்தாள்.

தன்னால் காப்பாற்றப்பட்ட சிலந்தி தனது நன்றிக் கடனைத் தீர்க்க பெண் ணாக உருமாறி வந்திருப்பதை அறிந்து கொள்கிறான். உண்மை தனக்குத் தெரி யும் என அவன் காட்டிக் கொள்ளவே இல்லை.

ஒருநாள் அவளுக்காக பஞ்சு வாங் கிக் கொண்டு வருவதற்காக, விவசாயி சந்தைக்கு சென்றான். பஞ்சுப் பொதி வாங்கிக்கொண்டு வரும்போது அசதி யில் ஓரிடத்தில் உறங்கிவிட்டான். அந்தப் பஞ்சுப் பொதியில் பாம்பு ஒன்று புகுந்துகொண்டது.

அதை அறியாமல் வீட்டுக்குப் போய் இளம்பெண்ணிடம் பஞ்சுப் பொதியை ஒப்படைத்தான் விவசாயி. அவளும் உற்சாகத்துடன் சிலந்தியாக உருமாறி பஞ்சை தனது வாயில் அடைத்துக் கொண்டு, அதில் இருந்து நூலை உருவாக்க முயற்சித்தாள்.

அப்போது பாம்பு பாய்ந்து அவளை கொல்ல முயன்றது. பயத்தில் சிலந்திப் பெண் தப்பி ஓடினாள். அவளது கஷ்டத் தைக் கண்ட சூரியன், அவளைக் காப் பாற்றி வானுலகுக்குக் கொண்டுச் சென்றது.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் வித மாக அவள் தன் வாயில் வைத்திருந்த பஞ்சைக் கொண்டு அழகான மேகங் களை உருவாக்கினாள். அப்படிதான் வானில் மேகங்கள் உருவாகின என்கிறது ஜப்பானியக் கதை.

உலகை வியப்பது கலையின் ஆதா ரச் செயல்களில் ஒன்று. குகையில் வசித்த காலத்தில் மனிதன் சூரியனையும், சந்திரனையும், காற்றையும், மழையை யும் கண்டு வியந்தான். பறவைகள், தாவ ரங்கள், விலங்குகள் என எல்லாவற்றை யும் நேசித்தான். குகை ஒவியங்களில் நாம் காணும் உருவங்கள் ஆதிமனிதனின் கற்பனைக்கு சான்று. ஆனால், கால மாற்றம் மனிதனை இயற்கை அழிப்பவ னாக, சுயநலத்துக்காக கலைகளை அழிப் பவனாக உருமாற்றியது அவலமே.

ஒக்ககூரா என்ற ஜப்பானிய கலை விமர்சகர் போதி தர்மரின் ஒவியம் ஒன் றைப் பற்றி தனது கட்டுரை ஒன்றில் குறிப் பிடுகிறார். விலை மதிப்பில்லாத அந்த ஓவியம் ஒசாகாவில் உள்ள அரண்மனை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. ஒருமுறை அரண்மனையில் தீ பற்றிய போது, ஓவி யத்தைக் காப்பாற்றுவதற்காக வீரர்கள் போராடினார்கள். பற்றி எரியும் நெருப் பின் ஊடே புகுந்த ஒருவன் நெருப்பில் இருந்து அந்த ஓவியத்தை எப்படி காப் பாற்றுவது எனத் தெரியாமல் ஓவியத்தை, அதன் சட்டத்தைவிட்டு கழற்றிச் சுருட்டி, தனது வயிற்றை கிழித்து அதன் உள்ளே ஓவியத்தை சொருகிக் கொண்டு விட்டான்.

நெருப்பு அரண்மனையை அழித்தது. அந்த வீரன் வெந்து கருகிய பிணமாகக் கிடந்தான். ஆனால், அவன் வயிற்றில் போதி தர்மரின் ஓவியம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. கலை பொக்கிஷத்தைக் காப்பாற்ற, தனது உயிரை அர்பணித்துவிட்டான் சாமுராய் என்று புகழாரம் சூட்டுகிறார் ஒக்ககூரா.

ஜப்பானியர்கள் கலையை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. ஓவியம், சிற்பம், சினிமா மட்டும் கலையில்லை; கதை சொல்வதும் ஒரு கலையே! ஓவியம் பயிலுவது போல, சினிமா பயிலுவது போல கதை சொல் வதற்கும் பயிற்சி தேவை. அதை கல்வி புலத்தில் நாம் பாடமாக வைக்க வேண் டும். கதை சொல்ல தெரிந்தவர்களை சிறப்பு ஆசிரியர்களாக நியமிக்க வேண் டும். கதை சொல்லும் திருவிழாக்களை நடத்த வேண்டும். அதுவே ஊடக பிம்பங்களில் இருந்து சிறார்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி.

- கதை பேசும்…

இணையவாசல்: >ஆப்பிரிக்க கதைகளை அறிந்துகொள்ள

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x