Published : 02 May 2017 11:05 AM
Last Updated : 02 May 2017 11:05 AM

கடவுளின் நாக்கு 43: இரக்கத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்!

வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வெளியே ஒரு நபர் நின்றிருந்தார். 60 வயதுக்கும் மேலிருக் கும். மேல்சட்டை அணிந்திருக்கவில்லை. ஊதா நிற பட்டுச் சால்வை ஒன்றை உடலை மறைத்துப் போட்டிருந்தார். காவி நிற வேட்டி, நெற்றியில் பட்டையாக திருநீறு, கையில் பித்தளைக் காப்புடன் துணிப் பை ஒன்றை இடதுகையில் வைத்திருந்தார்.

அதில் இருந்து ஒரு திருமணப் பத்திரிகையை எடுத்து நீட்டி, ‘‘பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன். உங்களாலே முடிஞ்சதைக் கொடுங்க…’’ என மெதுவான குரலில் கேட்டார்.

அந்தப் பத்திரிகையைக் கையில் வாங்கிப் பார்த்தேன். பெண் பெயர் உமா. மாப்பிள்ளை பெயர் மோகன். திருமணம் நடக்கப் போகிற இடம் குன்றத்தூர் என அதில் விவரங்கள் இருந்தன.

இதே நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக எனது நண்பரின் குடியிருப்புக்கு வந்தபோது அங்கே நானிருந்தேன். இதே பணிவுடன் இதைப் போலவே ஒரு பத்திரிகையை நண்பனின் முன்னே நீட்டினார். அவனும் கல்யாண காரியமாக கேட்கிறாரே என, ஒரு 500 ரூபாயைக் கொடுத்தான். நன்றி தெரிவித்தபடியே திருமணப் பத்திரிகையை மறக்காமல் திரும்ப வாங்கிக் கொண்டார்.

அதே ஆள்தான் இப்போது வாசலில் நின்றிருந்தார். அவரிடம் எதுவும் தெரியாததைப் போல விசாரிக்க ஆரம்பித்தேன். அந்த ஆள் கடகடவென ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.

கேட்டு முடித்த பிறகு, உங்களை இரண்டு மாதம் முன்பாக தியாகராய நகரில் சந்தித்திருக்கிறேன். இது போல திருமணப் பத்திரிகை ஒன்றை கொடுத்தீர்கள். ஒரே வித்தியாசம், அப் போது பெண் பெயர் காயத்ரி என்றிருந்தது எனச் சொன்னேன்.

அவரது முகம் சட்டென்று மாறிவிட்டது. ‘‘நீங்க யாரையோ பாத்துட்டுச் சொல்றீங்க…’’ என்றார்.

‘‘இல்லை நீங்களேதான். சால்வை கூட மாறலை…’’ என்றேன்.

‘‘என்னை சந்தேகப்படுறீங்களா..’’ எனக் கேட்டார் அந்த நபர்.

‘’ஆமாம். ஏன் இப்படி ஃபிராடு வேலை பண்ணுறீங்க…’’ எனக் கேட்டேன்.

அந்த ஆள் என்னை முறைத்தபடியே இருந்தார். பிறகு, ‘‘இன்விடேஷனைக் குடுங்க’’ எனக் கேட்டார்.

‘‘இல்லை, எனக்கு வேணும்’’ என்றேன்

‘‘குடுறா…’’ என அந்த ஆள் குரலை உயர்த்தியதோடு, என் கையில் இருந்த பத்திரிகையை வெடுக்கெனப் பிடுங்கிய படியே படியிறங்கி வெளியே போக ஆரம்பித்தார். நிற்கச் சொல்வதற்குள் வெளியேறியிருந்தார் அவர். அந்த ஆள் தனி நபரில்லை. அவருடன் இரண்டு பேர் உடன் வந்திருந்தார்கள். அவர்களுடன் பைக்கில் ஏறிக் கிளம்பிப் போய்விட்டார்.

இந்த ஃபிராடினை முன்கூட்டி சந்தித்த காரணத்தால் பணம் தராமல் துரத்திவிட்டேன். ஆனால், இதை அறியாத எத் தனையோ பேர் ஏமாந்து போயிருப்பார்கள். மாநக ரில் புதிது புதிதாக ஃபிராடுகள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். மக்களிடம் கொஞ்சநஞ்சமிருக் கும் இரக்கத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இவர்களிடம் ஏமாந்து போன மக்கள் உண்மையில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் கூட செய்ய மாட்டார்கள். நம் காலத்தில் மிகப் பெரிய மோசடி, உதவி கேட்டு ஏமாற்றுவதே!

அறியாத ஊரில் தெரியாமல் ஏமாறுவது வேறு. ஆனால், வீடு தேடி வந்து நம்மை ஏமாற்றுகிறார் கள் என்றால் மோசடியின் உச்சத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றுதானே அர்த்தம்! தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மோசடிப் பேர் வழிகளைப் போல அதிகம் உபயோகம் செய்பவர்கள் யாருமே இல்லை. ஏமாற்றுக்காரர்கள் தனிநபர் களுமில்லை.

ஏமாற்றுவதை பெரும் சாகசம் போல காட்டுகின்றன திரைப்படங்கள். கதாநாயகன் விதவிதமான முறைகளில் ஏமாற்றுகிறான் என்பதை கைத்தட்டி ரசித்துக் கொண்டாடு கிறார்கள். இதே நபர்கள் தன் பொருளை யாராவது ஏமாற்றிப் பறிக்கும்போது சூப்பர் எனக் கைத்தட்டிக் கொண்டாடுவார் களா என்ன? குற்றங்கள் கொண்டாடப்படும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெரிதும் அச்சமூட்டுகிறது.

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறை வேற்றிக்கொள்ள முடியாமல் எத்தனையோ பேர் உழைத்துப் போராடுகிறார்கள். ஒருவேளை உண்பதாக இருந்தாலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார் கள். வறுமையை, ஏமாற்றத்தைத் தாங்கிக்கொண்டு என்றாவது நல்லது நடந்துவிடும் என நம்பிக்கொண்டிருக் கிறார்கள். உலகம் இவர்களின் துயரைப் புரிந்துகொள்வதே இல்லை.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய ’தீக்குச்சி விற்கும் சிறுமி’ என்ற கதை இந்த உண்மையைத்தான் உலகுக்கு சொல்கிறது.

புதுவருஷம் பிறக்கப் போகும் நேரம். கொட்டும் பனியில் கால்செருப்புக் கூட இல்லாமல் ஒரு சிறுமி வீடு திரும்பிக்கொண் டிருந்தாள். அவள் தீக்குச்சி விற்பவள். அன்று ஒரு கட்டு தீக்குச்சியைக் கூட அவளால் விற்க முடியவில்லை. வெறும் காலோடு பனியில் நடப்பது சிரமமாக இருந்தது அவளுக்கு.

ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தாள். சின்னஞ்சிறிய அறை. அவளுக்குத் தாங்க முடியாத பசி. குளிரும் சேர்ந்து வேதனைப்படுத்தியது. நெருப்பில் குளிர் காய்ந்தால் இதமாக இருக்குமே என அச்சிறுமி ஒரு தீக்குச்சியை உரசினாள். வெளிச்சம் உருவானது. அதனுள் விதவிதமான கேக்குகள். உணவு வகைகள் உள்ள மேஜையொன்று அவளுடைய கண்ணுக்குத் தெரிந்தது. ஆசையாக அதையெடுத்து சாப்பிட முயற்சித்தாள். ஆனால், தீக்குச்சி அணைந்தவுடன் காட்சி மறைந்துவிட்டது.

உடனே இன்னொரு தீக்குச்சியை உரசினாள். அந்த ஒளிவட்டத்தினுள் கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்குகள் வானத்தை நோக்கி உயரச் சென்றுகொண்டிருந்தன. தீக்குச்சி அணைந்தவுடன் அந்தக் காட்சியும் மறைந்துபோனது.

ஆசையாக அடுத்த குச்சியை உரசினாள். அந்த ஒளிவட் டத்தில் அவளுடைய வயதான பாட்டி கனிவான பார்வையோடு நின்றிருந்தாள். எங்கே தீக்குச்சி அணைந்து போனால் பாட்டி மறைந்து போய்விடுவாளோ எனப் பயந்த சிறுமி கையில் இருந்த கட்டுத் தீக்குச்சிகளை ஒரே நேரத்தில் உரசினாள். வெயிலைக் காட்டிலும் பிரகாசமான ஒளிவட்டம் உரு வானது. அதில் பாட்டி பேரழகுடன் ஒளிர்ந்துகொண்டிருந் தாள். அவளை நோக்கி ஆசையோடு கையை நீட்டினாள் சிறுமி.

பாட்டி அந்த இளம் தேவதையைக் கைகளில் ஏந்திக் கொண்டாள். இருவரும் ஒளிவானத்தில் மிதந்து மறைந்தனர். பின்பு அந்தச் சிறுமிக்கு குளிரோ, பசியோ எதுவும் தெரியவில்லை. ஆம். அவள் இறந்து போயிருந்தாள்!

மறுநாள் இறந்து கிடந்த சிறுமியை வேடிக்கை பார்க்க வந்த எவருக்குமே அவள் தன் பாட்டியோடு ஒளிவானத்தில் புகுந்துபோனது தெரியாது. அந்த ஒளிவானத்தை அவர்கள் கனவிலும் கண்டதில்லை என, அந்தக் கதை முடிகிறது.

உலகமே புத்தாண்டு கொண்டாடும்போது எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறுமி பசியில், குளிரில் வாடி இறந்து போவதும் நடக்கவே செய்கிறது என்ற துயரத்தையே இந்தக் கதை சொல்கிறது.

சிறுமியின் ஆசைகளே தீக்குச்சி வெளிச்சத்தில் அவள் கண்முன்னே நிஜமாக தோன்றுகின்றன. வெளிச்சம் அவளை அரவணைத்துக்கொள்கிறது. அன்பு செலுத்த யாருமில்லாத சிறுமி முடிவில் பாட்டியோடு ஒளியில் கலந்துவிடுவது பெருஞ்சோகம்.

இச்சிறுமியைப் போல எத்தனையோ பேர் வறுமையில். பசியில், நோயில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்கிறோம் என சிலர் பொதுமக்களிடம் உதவி கேட்டு ஏமாற்றி, கொள்ளையடித்து சுகபோகங்களை அனுபவிப்பது பெருங்குற்றம்.

’மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்’ என்றார் எழுத்தாளர் ஜி.நாகராஜன். அது மறுக்க முடியாத உண்மையே!

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

இணைய வாசல்: >ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய சிறார் கதைகளை வாசிக்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x