Published : 18 Apr 2017 10:35 AM
Last Updated : 18 Apr 2017 10:35 AM

கடவுளின் நாக்கு 41: எச்சில் கோபம்!

நெருக்கடியான சூழ்நிலையில் எந்தப் பொருளையும் ஆயுதமாகப் பயன் படுத்தக்கூடியவன் மனிதன். கல் தான் உலகின் முதல் ஆயுதம். கற் காலத்தில் கல்லை பயன்படுத்தி கற் கோடாரிகளை உருவாக்கியிருக்கிறார் கள். கல்லை உரசி நெருப்பு பற்ற வைத் திருக்கிறார்கள். இரும்பு கண்டுபிடிக் கப்பட்ட பிறகு புதிய புதிய ஆயுதங் கள் உருவாக ஆரம்பித்தன. சீனர்கள் வெடிமருந்தை ஆயுதமாகப் பயன் படுத்தத் தொடங்கியது வரலாற்றின் போக்கையே உருமாற்றியது.

இன்று அணுகுண்டு முதல் ரசாயனப் புகை வரை அச்சமூட்டும் பல நூறு ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. ’சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ’உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?’ என கலைவாணர் கேட்கும் கேள்விக்கு, ’நயவஞ்சகரின் நாக்கு’ என பதில் சொல்வார் எம்.ஜி.ஆர். அது முற்றிலும் உண்மை!

நாக்கு மென்மையானது. ஆனால், அதில் இருந்து வெளிப்படும் சொற்கள் மென்மை யானவை இல்லை. அதிலும் கோபத்தில் ஒருவரை நோக்கி வீசப்படும் சொற்கள் வலிமையான ஆயுதமாகவே உருமாறிவிடுகிறது.

கோபத்தைக் கையாளத் தெரிய வில்லை என்பதுதான் பலருக்கும் பிரச்சினை. அது போலவே யாரிடம் கோபம் கொள்ளவேண்டும் என்றும் தெரி வது இல்லை. பெரும்பான்மையினரின் கோபம் வீட்டில்தான் அரங்கேறுகிறது. இன்னும் சிலர் எதற்கு கோபம் கொள்கிறார்கள் என்று அறியாமலே வெடிக்கிறார்கள். எளிய மனிதர்கள் கோபம் கொண்டாலும், அதைக் காட்ட முடிவதில்லை. மனதுக்குள்ளாகவே அடக்கிக் கொள்கிறார்கள்.

சிலருக்கு கோபம் வரும்போது எவ் வளவு முட்டாள்தனமாக நடந்துகொள் வார்கள் என அவர்களுக்கே தெரிவ தில்லை. ரொம்பவும் கோபப்படுகிறவர் களுடன் யாரும் பழக மாட்டார்கள். பலரும் யாராவது கோபப்படுத்தினால், சட்டென வார்த்தைகளைக் கொட்டி விடுகிறார்கள்.

கோபத்தின் முக்கிய காரணி வெறுப்பே. ஒரு மனிதனின் வெற்றிக் குத் தடையாக இருப்பதில் மிக முக்கிய மானது கோபம். கோபம் கொள்வதால் நமது சிந்தனையும், கவனமும் சிதறடிக் கப்படுகின்றன. கோபம் வராவிட்டால் சுயமரியாதை உள்ள மனிதனாக வாழ முடியாது. கோபத்தை வெளிக் காட்டக் கூடாது என்று முயற்சிக்கும்போதும், அவனை சமூகம் பலவீனமானவன் என கேலி செய்வதுடன், அவமதிக்கவும் தொடங்குகிறது. கோபம் வலிமையான தொரு ஆயுதம்! அதை முறையாகக் கையாள நமக்கு தெரிய வேண்டும்.

நைஜீரியாவில் ஒரு பழங்கதை உண்டு. ஒரு வணிகனின் கடைக்கு ஒரு பிச்சைக்காரி தனது குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வருகிறாள். அவளுக்குப் பிச்சை போட மனமில்லாத வியாபாரி அவளை அங்கிருந்து துரத்துகிறான். அவள் கடையை விட்டு போக மறுக் கிறாள். கோபமடைந்து அவளை நோக்கி காறித் துப்புகிறான். அந்த எச்சில் அவளது குழந்தைகள் மீது தெறிக்கிறது. அவள் கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விடுகிறாள்.

இரவு வியாபாரி வீட்டுக்குப் போகி றான். உறங்குகிறான். காலையில் எழுந்த போது ஒரே தாகமாக இருக்கிறது. தண் ணீர் குடிக்கிறான். அப்படியும் தாகம் தீர வில்லை. கொஞ்ச நேரத்தில் அவனது நாக்கு உலர்ந்து போய்விடுகிறது. எவ் வளவு தண்ணீர் குடித்தாலும் நாக்கில் ஈரமே இல்லை. அந்தப் பிச்சைக்காரி ஏதோ சாபம் கொடுத்துவிட்டாள் என நினைத்துப் பயந்துபோன வியாபாரி, அவளைத் தேடி அழைத்துவரும்படி ஆளை அனுப்பினான்.

பிச்சைக்காரி யைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நாட்கள் கடந்து போனது. சொம்பு சொம்பாகத் தண்ணீர் குடித்தும் அவனது நாக்கில் ஈரமே இல்லை. ஆள் மெலிந்து ஒடுங்கிப் போனான்.

ஒருநாள் அதே பிச்சைக்காரியை வீதி யில் பார்த்தான். ஒடிப்போய் அவளிடம் மன்னிப்பு கேட்டு தன்னுடைய பிரச்சினை யைப் பற்றி அவளிடம் சொன்னான். அப்போது அந்தப் பிச்சைக்காரி சொன்னாள்: ‘‘உன் பிரச்சினை தீர ஒரேயொரு வழிதான் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள எல்லாப் பிச்சைக்காரர்களும் உன் மீது காறித் துப்ப வேண்டும். அப்படி செய்தால் சரியாகிவிடும்!’’ என்றாள்.

அவன் வேறுவழியில்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டான். மறுநாள் அந்த ஊரில் இருந்த அத்தனை பிச்சைக்காரர் களும் ஒன்றுதிரண்டு அவன் கடைக்கு முன்னால் வந்தார்கள். வியாபாரி கடை யின் முன்பு உட்கார்ந்துகொண்டான். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் அவன் முகத்தில் காறித் துப்பினார்கள். அவன் மீது எச்சில் வழிந்தோடியது. சில நிமிஷங்களில் வியாபாரியின் நாக்கில் ஈரம் சுரக்க ஆரம்பித்தது. அவன் நல மடைந்தான். அன்றோடு பிச்சைக்கார் களை நோக்கி காறித் துப்புவதை மக்கள் நிறுத்திக் கொண்டார்கள் என்று அந்தக் கதை முடிகிறது.

உண்மையில் பிச்சைக்காரியின் சாபம்தான் அவனது நாக்கை உலர செய்ததா? அவனது குற்றவுணர்ச்சியே அவனது நோயாக உருமாறுகிறது. ஆகவேதான் எச்சில் பட்டு அடைந்த அவமானம் எச்சில் வழியாகவே தீர்க்கப்படுகிறது.

மனசாட்சியின் உறுத்துதலே அவ னைப் பீடித்த நோய். அவன் மன்னிப்பு கேட்டு பிச்சைக்காரர்களின் எச்சிலை ஏற்றுக்கொள்வதன் மூலம் தவறில் இருந்து விடுபடுகிறான். கோபத்தில் உமிழப்படும் எச்சில் கூட சாபமாக மாறி விடும் என்பதை இக்கதை சுட்டிக் காட்டுகிறது

இது போன்ற சம்பவங்கள் இந்தியா விலும் நடந்திருக்கின்றன. ஆந்திராவில் வீட்டுக்கு வெள்ளை அடித்துக் கொண் டிருந்த ஒருவன் வெற்றிலை போட்டு எச்சில் துப்புகிறான். அது காற்றில் பறந்து வரி வசூலிக்க வந்த வெள்ளைக்கார அதிகாரி மீது விழுந்து விடுகிறது. அதற்கு தண்டனையாக வெள்ளை அடித்துக் கொண்டிருந்தவன் நாக்கு துண்டிக்கப்பட்டதாக கர்னல் லெயிட்டன் குறிப்பு கூறுகிறது.

தாசியின் வெற்றிலை எச்சில் கோயில் சுவரில் பட்டதற்காக அவளுக்கு சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது என்கிறது தமிழக வரலாறு. குழந்தைகளுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது போலவே எப்போது மவுனமாக இருக்க வேண்டும் என்பதற்கும் நாம் கற்றுத் தர வேண்டும். ’மவுனம் சம்மதம்’ என்பார்கள். அது உண்மையில்லை. எதிர்ப்பின் அடை யாளமாகவும் இருக்கக்கூடும்.

’கடிவாளம் இல்லாத குதிரையைச் செலுத்தமுடியாது’ என்பார்கள். கதை களும் ஒரு வகையில் கடிவாளமே. கதை கள் மனித வாழ்க்கையை நெறிப்படுத்த உதவி செய்கின்றன. ஒரு கதையின் வயது எவ்வளவு என அதை கேட்பவரால் கண்டறிய முடியாது. கதைகள் காலத்தின் ரேகைகள் படியாதவை. அவை என்றும் இளமையாக இருப்பதாலே காலந்தோறும் சொல்லப்பட்டும், கேட் கப்பட்டும் வருகின்றன.

இணைய வாசல்: >நைஜீரியப் பழங்கதைகளை அறிந்துகொள்ள

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x