Published : 21 Mar 2017 10:23 AM
Last Updated : 21 Mar 2017 10:23 AM

கடவுளின் நாக்கு 37: வாழ்வின் வியப்பு!

எதிர்பாராமல் எந்த விஷயம் நடந் தாலும் நாம் வியப்படைகிறோம். எப்படி நடந்தது என புரியாமல் திகைத்துப் போகிறோம். எதிர்பாராத சந்திப்பு, எதிர்பாராத கடிதம், எதிர் பாராமல் கிடைக்கும் பணம் அல்லது பதவி, வெற்றிகள் என எல்லா விஷயங்களும் சந்தோஷம் தருகின்றன.

எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போய்விடுவதும் எதிர்பார்க்காமல் ஒன்று நடந்தேறிவிடுவதும் புதிரே. நம் விருப்பம் மட்டுமே ஒரு செயலை வெற்றிபெறச் செய்வது இல்லை. ஒரு செயல் வெற்றியடைய எதிர்பாராமல் ஒன்று நடக்க வேண்டியிருக்கிறது. அது என்னவென்று யாராலும் முன்னறிந்து சொல்ல முடியாது.

சில தருணங்களில் இனி நடக்காது என நாம் கைவிட்ட விஷயங்கள் ஏதோவொரு விந்தையால் சட்டென நடந்து முடிந்துவிடுகின்றன. வாழ்வின் வியப்பே அதன் போக்கை நாம் முடிவு செய்ய முடியாது என்பதுதானே!

பிரபல ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தர்க்கோவ்ஸ்கி ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார். புதிய திரைப்படம் ஒன்றின் ஸ்கிரிப்ட்டை முடித்து வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தார் அவர். நினைத்ததைப் போல தயாரிப்பாளர் எவருமே கிடைக்க வில்லை. விரக்தியில் ஒரு வாடகை டாக்ஸியில் பயணிக்கும்போது தனது புதிய படத்தின் திரைக்கதைப் பிரதியைத் தவறவிட்டுவிட்டார். அந்த டாக்ஸியின் நம்பர் தெரியாது. அவரிடம் இருந்தது திரைக்கதையில் ஒரே ஒரு பிரதி மட்டும் தான். அது தொலைந்து போனதால் முழு திரைக்கதையையும் திரும்பவும் எழுத வேண்டிய நிலைமை. எல்லாக் காட்சிகளும் அவரது நினைவிலும் இல்லை. திகைப்பும் குழப்பமுமாக செய்வதறியாமல் தடுமாறிப் போனார்.

இவ்வளவு பெரிய மாஸ்கோ நகரில் எந்த டாக்ஸியில் தவறவிட்டோம்? எப்படி அதைக் கண்டுபிடிப்பது என மன உளைச் சல்தான் மிஞ்சியது. அவர் தவறவிட்ட அந்தத் திரைக்கதைப் பிரதியில் அவரது பெயரோ, முகவரியோ எதுவுமே கிடையாது. ஆகவே, டாக்ஸி டிரைவர் அதனைக் கண்டெடுத்தால் கூட இவ ரைத் தேடிவந்து ஒப்படைக்க முடியாது.

இனி, அந்தத் திரைக்கதைப் பிரதி கிடைக்கவே கிடைக்காது என முடிவு செய்துகொண்டு, மாலையில் ஒரு வீதி வழியாக சோர்வுடன் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு டாக்ஸி ஆந்த்ரேய் தர்க்கோவ்ஸ்கியின் அருகில் வந்து நின்றது.

டாக்ஸி ஓட்டுநர் கீழே இறங்கி வந்து ‘‘உங்கள் திரைக்கதையை எனது டாக்ஸி யில் தவறவிட்டுவிட்டீர்கள்’’ என நீட்டினார்.

‘‘எப்படி இது என்னுடைய ஸ்கிரிப்ட் என கண்டுபிடித்தீர்கள்?’’ எனக் கேட்ட தற்கு ’’உங்களைப் பார்த்தால் திரைப்பட இயக்குநர் போல தோன்றினீர்கள். எனது டாக்ஸியில் வரும்போது ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவே இல்லை. ஏதோ சிந் தித்தபடியே வந்துகொண்டிருந்தீர்கள்!’’ எனச் சொல்லி சிரித்தார் டாக்ஸி ஓட்டுநர்.

நன்றி தெரிவித்த தார்க்கோவ்ஸ்கி இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என நினைத்த விஷயம் எதிர்பாராமல் கைக்கு வந்து சேருகிறது என்றால், நிச் சயம் தனது முயற்சி வெற்றிபெறும் என நம்பினார். அவர் நினைத்தபடியே ‘ஆந்த்ரே ரூபலேவ்’ என்ற படத்தை இயக் கினார். அப்படம் பெரும் புகழ்பெற்று பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றது.

வாழ்வின் சுவாரஸ்யங்களில் ஒன்று எதிர்பாராமை. யார், யாரை எப்போது சந்தித்துக் கொள்வார்கள். நட்புகொள் வார்கள். காதலிப்பார்கள். பிரிந்து போவார்கள்? ஒரு மனிதன் எப்போது வாழ்வில் முன்னேறுவான்? எப்போது வீழ்ச்சியடைவான்? சாவு எப்படி, எப் போது நேரும் என்று நீளும் எதிர்பாரா மையின் பட்டியல் முடிவற்றது.

தமிழக நாட்டுப்புறக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

பஞ்ச காலத்தில் ஒரு விவசாயி மிகவும் கஷ்டப்பட்டான். ஒருவேளை கஞ்சிக்குக் கூட வழியில்லை. குடும்பத்தினர் பட்டினி யில் வாடினார்கள். வேலைத் தேடிப் போய் பிழைக்கவும் வழியில்லை. பேசா மல் தூக்கு போட்டு செத்துப் போய் விடலாம் என நினைத்து பாழடைந்த ஒரு மண்டபத்துக்குச் சென்றான்.

அங்கே ஒரு பூதம் குடியிருந்தது. அதைப் பற்றி அறிந்திருந்தபோதும், ‘சாகத்தானே போகிறோம். பூதம் நம்மை என்ன செய்துவிடப் போகிறது?’ என்று நினைத்துக்கொண்டு, தூக்குக் கயிற்றை மாட்டுவதற்கு ஓர் இடம் தேடினான். அப்போது ‘‘இங்கிருந்து போகிறாயா… இல்லை போடட்டுமா?’’ என்றொரு முரட்டு குரல் கேட்டது.

அவன் அதைக் கண்டுகொள்ள வில்லை. தூக்குக் கயிற்றை உயரமான இடத்தில் மாட்டினான். திரும்பவும், ‘‘போகிறாயா இல்லை… போடட்டுமா?’’ என்ற குரல் கேட்டது.

‘சே… இது என்ன இழவு! நானாக தூக்கி மாட்டி செத்தால் என்ன? பூதத்திடம் சிக்கி செத்தால் என்ன?’ என நினைத்தபடியே கோபத்துடன் சொன்னான்: ‘‘போடுறதா இருந்தா மொத்தமா போட்டுத் தீர்த்துவிடு!’’

மறுநிமிஷம் எங்கிருந்தோ பொல பொலவென தங்கக் கட்டிகள் மழை யாகக் கொட்ட ஆரம்பித்தன. அப்போது தான் புரிந்தது அந்தப் பூதம் தங்கத்தை காவல் காக்கிறது என்பது. இத்தனை ஆண்டு காலமாக தங்கத்தைப் போடவா, போடவா எனக் கேட்டுக் கொண்டேயிருந் துள்ளது. உண்மை தெரியாத பயத்தில் எவருமே போடச் சொல்லவே இல்லை. விவசாயி இப்போது மொத்தத்தையும் போடு என்றதும், அது வரையில் பாதுகாத்து வைத்திருந்த தங்கம் அனைத்தையும் போட்டுவிட்டது.

‘ஆஹா! தனக்கு இப்படி ஓர் அதிர்ஷ டமா!’ என நினைத்துக்கொண்டு அவன் தங்கத்தை சேகரித்துக் கொண்டுபோய் பணக்காரனாக வாழத் தொடங்கினான் என முடிகிறது அந்தக் கதை.

பூதம் தங்கம் தருமா எனத் தெரியாது. ஆனால், உங்களை அச்சுறுத்தும் விஷ யம்கூட உங்களுக்கு சாதகமாக முடியக் கூடும். அதில் இருந்தும் நீங்கள் பயனை அடையக் கூடும் என்பதை சுட்டிக்காட் டவே இக்கதைச் சொல்லப்படுகிறது.

பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லூயிஸ் ரே பாலம் மிக புராதனமானது. லிமா என்ற நகரின் வெளியில் இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைக்கப்பட் டுள்ள அந்தக் கயிற்றுப் பாலம் பழமை யானது. 1714-ம் ஆண்டு ஒரு நாள் இந்தப் பாலம் அறுந்து விழுந்து, பாலத்தைக் கடக்க முயன்ற 5 பேர் பள்ளத்தாக்கினுள் விழுந்து உயிரிழந்த னர். இதை மையமாகக் கொண்டு ‘தான்டர்ன் ஒயில்டர்’ என்ற எழுத்தாளர் ‘தி பிரிட்ஜ் ஆஃப் சென் லூயிஸ் ரே’ என்ற நாவலை எழுதியிருக்கிறார்.

பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போன ஐந்து பேருக்குள்ளும் ஏதாவது பொதுத் தன்மை, மறைமுகமான தொடர்பு இருக்கிறதா என்று ஜெனோபர் என்ற மதகுரு ஆராயத் தொடங்கினார்.

ஐந்து பேரின் வாழ்க்கைக்கும் சில பொதுத் தன்மைகள் இருப்பதை அவர் கண்டறிந்தார். இவர்களின் மரணத்தின் மூலம் கடவுள் உலகுக்கு ஒரு செய்தியை சொல்ல முயற்சிக்கிறார் என நம்புகிறார் ஜெனோபர். தனது கள ஆய்வினை விரிவாக தொகுத்து ஆர்ஷ் பிஷப்பிடம் சமர்ப்பிக்கிறார். அவரோ இது ஓர் அபத்த மான கற்பனை என புறந்தள்ளிவிடுகிறார்.

ஜெனோபர் கண்டறிந்த உண்மை என்பது எதிர்பாராமையினுள் சில ரக சியங்கள் ஒளிந்திருக்கின்றன. அவை மேல்பார்வைக்குப் புலப்படாது. ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் அதன் உண்மை யைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதே.

எந்தவொரு நிகழ்வும் காரணகாரிய மற்றதல்ல. அறிந்தும் அறியாமலும் பல்வேறு காரணிகள், பின்னல்கள் இணைந்தே ஒரு செயல் நடைபெறு கிறது என்பதையே நாவல் சுட்டிக்காட்டு கிறது. வாழ்வின் புதிர்களை அவிழ்த்துக் காட்டுவதும் புரிந்துகொள்ள வைப் பதும்தானே இலக்கியத்தின் வேலை.

இணைய வாசல்: தமிழக நாட்டுபுறக் கதைகளை வாசிக்க - >http://www.storytellinginstitute.org/85.pdf

- கதைகள் பேசும்... | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x