Published : 14 Feb 2017 09:57 AM
Last Updated : 14 Feb 2017 09:57 AM

கடவுளின் நாக்கு 32: சந்தையின் தந்திரம்!

கதை சொல்லிகளால் போர்க்களத் தில் பட்டாளத்தின் முன் நின்று யுத் தத்தை நிறுத்தமுடியாது. ஆனால் போர் தொடங்குவதற்கு முன்பாக மக்க ளிடம் சென்று போர்வெறி ஏன் ஏற்படு கிறது? போரை யார் விரும்புகிறார்கள்? போரில் ஏன் பெண்கள் பாதிப்படை கிறார்கள் என்பது குறித்த கதைகளைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட முடியும். கதை சொல்லிகள் காலம் கால மாக இதையேதான் செய்துவருகிறார்கள் என்கிறார் புகழ்பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா அச்சுபே.

கதை சொல்லிகளின் ஆயுதம் சொற் கள். அதைக் கொண்டு அவர்கள் எதை யும் சாதிக்க கூடியவர்கள். மறைக்கப்பட்ட உண்மையை, மறந்துபோன நினைவு களைக் கதை சொல்லிகள் மீட்டு தரு கிறார்கள். கதைகள் வழியாக மறைக்கப் பட்ட ரகசியங்கள் வெளியேறுகின்றன.

கதைகளை மக்கள் நினைவுபடுத் திக்கொள்ள சில எளிய பிம்பங்களை, குறியீடுகளைக் கதை சொல்லிகள் உரு வாக்குகிறார்கள். முதலையின் முதுகில் குரங்கு அமர்ந்து செல்லும் சிற்பம் ஒன்றை தொல்லியல்துறை கண் டெடுத்துள்ளது. கதைகள் சிற்ப வடிவம் கொண்டதற்கான சாட்சி அது.

அஜந்தாவில் காணப்படும் ஓவியங் கள் எல்லாமே புத்த ஜாதகக் கதையி னையே விளக்குகின்றன. இப்படி கதை கள் ஓவியமாக, சிற்பமாக, பானைகள், தட்டுகளில் செய்யப்படும் அலங்கார மாக, துணியில் செய்யப்படும் பூ வேலைப்பாடுகளாக பல்வேறு விதங் களில் உருமாறுகின்றன.

நாகரிகம் அடைந்த சமூகம் என்பதன் அடையாளங்களில் ஒன்று, அங்கு காணப்படும் பல்வகைக் கதைகள். தேவதை கதைகளில் இடம்பெற்றுள்ள காடு எப்படிப்பட்டது? அங்கு என்னவித மான விலங்குகள், மரம் செடிகொடிகள், குகைகள், தட்பவெப்ப நிலை, பூக்கள், மற்றும் கனிம வளங்கள் காணப்படுகின் றன என்றொரு ஆய்வை சாரா மெய்ட் லண்ட் என்ற ஆய்வாளர் மேற் கொண்டார்.

குழந்தைகளுக்கு விளையாட்டாக சொல்லப்படுகிற தேவதை கதைகளின் பின்னனியில் அரிய பல உண்மைகள் புதைந்திருக்கின்றன என்றும், உண்மை யில் இந்தக் கதைகள் எல்லாம் இயற்கை குறித்த ஆவணத்தொகுப்பு என்றும், இதில் தொல்பழங்கால படிவங்கள் முதல் காட்டின் நுண்ணுயிரிகள் வரை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் சாரா மெய்ட்லண்ட் குறிப்பிடு கிறார். ஒரு தேசத்தில் எவ்வளவு சதவீதம் காடு இருந்தது என்பதை அங்குள்ள தேவதை கதைகளைக் கொண்டே அறிந்துவிட முடியும் என்கிறார் சாரா.

தேவதை கதைகளைத் தேடித் தொகுத்தவர்களில் முக்கியமானவர்கள் கிரிம் சகோதரர்கள். ஜெர்மனி எங்கும் தேடி இவர்கள் கதைகளைச் சேகரித்து எழுத்து வடிவம் கொடுத்தார்கள். ஜேக் கப், வில்ஹெம் என்ற அந்த இருவரின் முயற்சியே ‘சிண்ட்ரல்லா’ போன்ற புகழ்பெற்ற தேவதை கதைகள் அச்சேறு வதற்கு காரணமாக இருந்தன. வறுமை யான சூழலில் வாழ்ந்தபோதும் கிரிம் சகோதரர்கள் தங்களின் தீராத ஆர்வத் தின் காரணமாக தேடித் தேடிக் கதைகளை சேகரித்தார்கள். ஜேக்கப் நூலகராக பணியாற்றினார். அவரது உதவியை கொண்டு பல்கலைக்கழகத்தில் படித்தார் வில்ஹெம். இவர்கள் தொகுத்த தேவ தைக் கதைகள் நூற்றுக்கும் மேற் பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கிராமப்புறக் கதைகளைப் பொறுத்த வரை அந்தக் கதையை முதலில் சொன் னவர் யார் என்று கண்டறிய முடிவ தில்லை. சில நேரம் கதையை உரு வாக்கியவரேகூட தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு கதை சொல் லக்கூடும். வேறு எங்கேயே கேட்ட, யாரோ சொன்ன கதையைத் திரும்ப சொல்வதாக கேட்பவர்களை அவர்கள் நம்ப வைப்பார்கள். ஆகவே, நதிமூலம் ரிஷிமூலம் போல கதைமூலத்தையும் நாம் கண்டறிய முடிவதில்லை.

அரபுக் கதை ஒன்று மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

கெய்ரோ நகரின் சந்தையில் ஒரு முதியவர் மாதுளம் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். ஒரு தினாருக்கு ஐந்து பழங்கள் என கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் யாரும் பழங்கள் வாங்க வரவே இல்லை. அதே நேரம் ஓர் இளைஞன் அதே சந்தையில் ஒரு தினாருக்கு ஆறு பழங்கள் என விற்றான். அவனிடம் உள்ள மொத்த பழங்களும் சில நிமிடங்களில் விற்றுப் போயின. முதியவரிடம் ஓர் ஆள் வந்து ’’உனக்கு வியாபார சூட்சுமம் தெரியவே இல்லை. அதோ அந்த இளைஞனிடம் கற்றுக் கொள்!’’ என அறிவுரை கூற, அதற்கு அந்த முதியவர் சொன்னார்: அந்த இளைஞன் என் மகன்தான். நான்தான் அப்படி ஒரு தினாருக்கு ஆறு பழங்களை விற்கும்படி கூறினேன். எப்போதும் போட்டி இருந்தால்தான் விற்பனை சூடு பிடிக்கும். யாரோ ஒருவன் நம்மோடு போட்டியிடுவதற்கு பதிலாக நாமே பொய்யாக ஒரு போட்டியை உருவாக்கிவிடலாம் என நடத்திய நாடகம் இது. ஒருவேளை நானே கூட ஒரு தினாருக்கு ஆறு பழங்கள் தருவதாக சொல்லியிருந்தால் நீங்கள் வாங்கியிருக்க மாட்டீர்கள்.

மக்களை ஏமாற்றுவது எளிது. விலை மலிவு எனக் கூறப்படுவது சந்தையின் தந்திரம். விற்காத பொருளையோ அல்லது கூடுதல் விலை வைத்து அதில் தள்ளுபடி தருவதையோ மறைக்கும் வழிமுறை அது. மக்கள் எதையும் ஆராய்வதே இல்லை. சந்தைக்கு வரும் புத்திசாலிகூட எங்கள் பேச்சில் எளிதாக ஏமாந்துவிடுவான்’’ என்றார் முதியவர்.

இந்தக் கதை சந்தையின் சூட்சுமத்தை மக்களுக்கு புரியவைக்கிறது. இதே தந்திரத்தைதான் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின் றன. ஒரே நிறுவனம்தான் பல்வேறு பெயர்களில் பற்பசை தயாரிக்கிறது. ஒரே நிறுவனம்தான் பல்வேறு நிறங்களில், ருசிகளில் குளிர்பானம் தயாரிக்கிறது. சிப்ஸ் விற்பனை செய்கிறது. கிடைக்கும் லாபம் யாவும் ஒரே நிறுவனத்துக்கே போய் சேருகிறது.

சலுகை விலையில் வாங்கி திறமையாக நடந்துகொண்டுவிட்டதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏமாற்றப்படுகிறார் கள். சலுகை என்பது உண்மையில் ஒரு தந்திரம். பரிசு தருகிறார்கள் என்பது வெறும் கவர்ச்சி. தரமான பொருளின் விலை பெரிதாக குறைவதே இல்லை.

இன்று நடைபெற்றுவரும் மிகப் பெரிய மோசடிகளில் ஒன்று பிளாஸ்டிக் முட்டை. பெரியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என பலரும் சாப்பிடும் முட்டையை செயற்கையாக பிளாஸ்டிக் கில் செய்து விற்பனை செய்துவருகிறார் கள். வெளியே பார்க்க எந்த வித்தியாச மும் தெரியாது. முட்டையை உடைத்தால் உள்ளே பிளாஸ்டிக் உரிந்து வருகிறது. உள்ளே இருக்கும் மஞ்சள் கரு செயற்கை யான வேதிப் பொருள். சாப்பிட்டால் நோய் வந்து விடும். இப்படி ஒரு மோச டியை ஏன் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் எவராவது இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறாரா?

எனவேதான் அரபிக் கதையை இப்போது நினைவூட்டவேண்டியிருக் கிறது.

சந்தையில் எதையும் கண்ணை மூடிக் கொண்டு வாங்காதீர்கள். மோசடி செய் பவர்கள் மீது புகார் கொடுங்கள். மோசடி களைப் பொதுவெளியில் அம்பலப் படுத்துங்கள்.

தேவதை கதைகளில் பலம் வாய்ந்த அரக்கனை எதிர்த்து சண்டையிட்டு வெல் பவன் சாமானியனே. தைரியமும், தியாக மும், அன்பும் இருப்பவனே வெல்கிறான் என்பதை அடையாளம் காட்டவே தேவதை கதைகள் உருவாக்கப்பட்டுள் ளன. இந்த உண்மையே அக்கதைகளை காலம் காலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

இணையவாசல்: >ஜப்பானிய கதைகளை வாசிக்க

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: wrtierramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x