Published : 01 Aug 2015 11:48 AM
Last Updated : 01 Aug 2015 11:48 AM

இளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்!

ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில்தான் எனக்கு வாசிப்பு வாய்த்தது. வாடகை நூலகத்துக்குச் செல்லும் பழக்கம் என் அண்ணனுக்கு உண்டு. அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் எனக்கு லஞ்சமாகப் புத்தகங்கள் கிடைக்கும். அப்படிக் கிடைத்த புத்தங்கள்தான் என் வாசிப்புக்கு வழிவகுத்தன. மாயாஜாலக் கதைகள், மந்திரத் தந்திரப் புத்தகங்கள் என்று தொடங்கிய பயணம், என் கல்லூரி பருவத்தில்தான் தீவிர வாசிப்புக்குள் நுழைந்தது. எக்காலத்துக்கும் ஏற்புடைய திருக்குறளில் தொடங்கி, சங்க இலக்கியங்கள், செவ்வியல் இலக்கியங்கள் என்று என் தேடல் நீண்டது.

என் வாசிப்பில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, நீல. பத்மநாபன் ஆகிய ஆளுமைகளுக்கு முக்கிய இடம் உண்டு. தற்போது ஜெயமோகனும் அழகிய பெரியவனும் என் வாசிப்புத் தளத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். சமகால மனிதர்களை, அவர்களது வாழ்வை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுவதில் அழகிய பெரியவன் வல்லவர். நற்றிணை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அவரது சிறுகதை தொகுப்புகள், அனைத்தையும் பற்றிப் பேசுகின்றன. ‘தீட்டு’ என்ற குறுநாவல், ஒரு பெண்ணின் வலியைப் பேசுகின்றது. பெண் மீது இந்தச் சமூகம் நிகழ்த்தும் வன்முறையையும் அத்துமீறலையும் படிக்கும்போது நம்மால் அசையாமல் இருக்க முடியாது.

ஜெயமோகனை எழுத்து யட்சன் என்றுதான் சொல்ல வேண்டும். மவுனங்களுக்கு இடையிலும் எழுதும் அவரது வல்லமையைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். இளங்கோவடிகளின் கண்ணகியை எனக்குத் தெரியும் என்றாலும் ஜெயமோகனின் ‘கொற்றவை’ நாவலில் வரும் கண்ணகியை நான் சிலாகிக்கிறேன். கவுந்தியடிகளை நீலியாகப் படைத்திருப்பது எழுத்தின் உச்சம். ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு கண்கள் என்பது எத்தனை அற்புதமான உணர்வு! நீலி மறைந்துபோவதை ஒரு பாறையில் பூ விழுவதுபோலச் சொல்லியிருப்பதைவிடவும் அற்புதமாக வெளிப்படுத்த முடியாது.

சில நூல்களைப் படித்த பிறகு, அடடா முடிந்துவிட்டதே என்று ஏக்கம் வருமில்லையா? ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதி, தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு மொழிபெயர்த்திருக்கும் ‘ஸ்பார்ட்டகஸ்’ புத்தகத்தைப் படித்த பிறகு நான் அப்படித்தான் உணர்ந்தேன். புரட்சியாளர்கள் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்படுவது எப்படி மரபாக மாறியது என்று மனித வரலாற்றையே நம் கண் முன் நிறுத்திவிடுகிற இந்தப் புத்தகத்தை நான் படித்தேன் என்று சொல்வதைவிட அதனுடனேயே நான் இருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

- பிருந்தா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x