Last Updated : 25 Sep, 2016 11:08 AM

 

Published : 25 Sep 2016 11:08 AM
Last Updated : 25 Sep 2016 11:08 AM

இடையறாது இயங்கிவந்த கலைஞன்

ஓவியர், சிற்பி தட்சிணாமூர்த்தி அஞ்சலி



ஊட்டி எம்.பாலாடாவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் பழங்குடிகள் அருங்காட்சியகத்தில், 2002-ம் ஆண்டில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓவியர் தட்சிணா மூர்த்தி, ஓவியர் சந்ரு இருவரது தலைமை யில் பழங்குடி மக்களின் முழு உருவச் சிலை, அவர்களின் பண்பாடு குறித்த ஓவியம் ஆகியவற்றை வரையும் பணியில் ஈடுபட்டிருந்தோம். எவ்வளவு பெரிய கேன்வாசாக இருந்தாலும் தட்சிணாமூர்த்தி அதிகபட்சமாக

இரண்டு மணிநேரத்தில் முடித்துவிடுவார்.

அங்கு சென்ற முதல் நாளிலேயே தனது ஓவியத்தை முடித்துவிட்டு அருங் காட்சியகம் அமைந்திருக்கும் குன்றின் மீது நின்றுகொண்டிருந்தார். என்னை அழைத்துக் குன்றின் சரிவில் இருக்கும் ஒரு பாறையைக் காண்பித்து, ‘இங்கே ஒரு புடைப்புச் சிற்பம் செய்யலாம் என்று இருக்கிறேன், எனக்கு ஒரு கட்டிங் மெஷினும் ஜங்ஷன் பெட்டியும் வேண்டும், அருங்காட்சியக மேலாளரிடம் சொல்லி ஏற்பாடு செய்’ என்றார். அன்று மாலை அவருக்கான பொருட்கள் வந்து சேர்ந்தன.

மறுநாள் மாலை எங்களை அந்தப் பாறைக்கு அழைத்துச் சென்றார். ‘எப்படி இருக்கு பாருங்க’ என்று காண்பித்தார். அந்தப் பாறை ஒரு அற்புதமான புடைப்புச் சிற்பத்தைத் தாங்கி நின்றது. ஒரே நாளில் முடிக்கப்பட்ட அந்தச் சிற்பம் தோடர்களின் சின்னமான மாட்டின் தலை. அருகில் தலை கோதி நிற்கும் தோடர் இனப் பெண். அழகான அந்தக் குன்றின் மீது ஒரு மாயக்காரனின் லாவகத் தோடும் வேகத்தோடும் தட்சிணா மூர்த்தியின் விரல்களின் தொடுதலில் மிதந்துகொண்டிருக்கிறது அந்தச் சிற்பம்.

இந்த வேகம், லாவகம், சோரா திருத்தல், ஊக்கப்படுத்துதல், மாண வர்கள் மீதான பரிவு, கொஞ்சம் கருணை, எளிமை, சாமானியருக்கான தோற்றம், பகிர்ந்துகொள்ளுதல், இயங்கிக் கொண்டே இருத்தல், இவைதான் தட்சிணாமூர்த்தி.

நாட்டார் கலை மரபின் தாக்கம்

சென்னை ஓவியக் கல்லூரிக்குள் இந்தியக் கலை மரபு குறித்த தத்துவார்த்த விவாதங்கள் நடந்துகொண்டிருந்த 1950-60களின் காலப் பொழுதில்தான் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இவர்கள்தான் கடந்த அரை நூற்றாண்டின் கலை ஆளுமைகள். அவர்களுள் தட்சிணாமூர்த்தி முக்கியமானவர். பின் புலமற்ற சாமானியர்களின் முதலாம் தலைமுறையின் படைப்புகளைச் சமூகம் எந்தக் கேள்வியுமின்றி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற தேவையும் அதன் அடிப்படை நியாயங்களும் இவர்களுக்கு ஒரு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். இங்கிருந்துதான் நாட்டார் கலை மரபு நவீன ஓவியத்தின் மீது ஆளுமை செய்யத் தொடங்கியது.

நாட்டார் கலை மரபு, நவீனம் இரண்டுக்கு மிடையே கூத்து, நாடகம், அய்யனாரின் குதிரை என்று பல விதமான கலைப் படைப்புகள் தோன்றிய காலத்தில்தான் நாம் அன்றாடம் பார்க்கும் சாமானிய மக்களின் முகங்கள், அவர்களின் அசைவுகள், உழைப்பு, உடல்மொழி ஆகியவற்றைச் சுடுமண் சிற்பமாகவும், பாறைச் சிற்பமாகவும் தட்சிணாமூர்த்தி பிறப்பித்துக்கொண்டிருந்தார். அதுவே அவருடைய வாழ்க்கை, படைப்பு ஆளுமை, இயக்கம் என்றாகிவந்தது.

தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்த தட்சிணாமூர்த்தியின் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. அவருடைய ஓவியங்களின், சிற்பங்களின் மாந்தர்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பார்கள். நம்மையும் இயக்கிக்கொண்டிருப்பார்கள்.



ஓவியரும் சிற்பியுமான சி.தட்சிணாமூர்த்தி, 1943-ல் குடியாத்தத்தில் பிறந்தவர். 1966-ல் சென்னை ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பிரிட்டனின் க்ராய்டன் வடிவமைப்பு மற்றும் அச்சுக் கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்து ஓவியம், சிற்பம் அச்சுக் கலை எனப் பல துறைகளிலும் செயல்பட்டார். மாநில (1963, 1965), தேசிய விருதுகளை (1986) வென்றவர். சென்னை ஓவியக் கல்லூரியில் சுடுமண் சிற்பத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மூன்று தினங்களுக்கு முன்பு (செப்டம்பர் 22) அவர் மரணமடைந்தார்.

பன்முகக் கலைஞர்

க.நடராஜன் - ஓவியர், சிற்பி, தட்சிணாமூர்த்தியின் மாணவர்.
ஆர்ட்ரீ எனும் சிற்பக்கலைக் கூடத்தை நடத்தி வருகிறார்.
தொடர்புக்கு: natsviolet@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x