Last Updated : 23 Apr, 2017 10:48 AM

 

Published : 23 Apr 2017 10:48 AM
Last Updated : 23 Apr 2017 10:48 AM

அஞ்சலி: சிற்பி எஸ்.நந்தகோபால் - இந்தியாவின் சிற்ப முகம்



சிற்பி எஸ்.நந்தகோபால்

(1946-2017)

மகாபாரதக் கதையில் ஒரு குழந்தை பிறக்கும்போதே கவச குண்டலங்களோடு பிறந்ததாக ஒரு செய்தி உண்டு. கவசங்கள் உலோகத் தகடுகளின் மூலம் உருவாக்கப்படுபவை மரத்திலோ பாறைகளிலோ செதுக்கப்பட்ட உருவங்களுக்கு மேல் உலோகத் தகடு கொண்டு அவ்வுருவங்கள் சிதையாமல் பொருத்தி அழகு செய்வதை இன்றும் நாம் கோவில்களில் காணலாம். செம்பு, பித்தளை, வெள்ளி, துத்தநாகம், தங்கம் சேர்ந்த ஐம்பொன் கலவைத் தகடுகளே பெரும்பாலும் பயன்பாட்டில் இருந்தன.

இந்தியாவில் மதராஸ் ஓவிய பாணியின் முன்னோடியான சிற்பி பி.வி. ஜானகிராம் உலோகத் தட்டுச் சிற்பங்களை உருவாக் கினார். பின்னர் கே.எம். கோபாலும் எஸ். நந்தகோபாலும் தொடர்ச்சியாக அவ்வூடகத்தைக் கையாண்டு உலகின் பல் வேறு ஓவிய, சிற்பப் பரப்புகளுக்குக் கொண்டு சென்றார்கள்.

நந்தகோபால் 1946-ம் வருடம் பெங்களூரில் கே.சி.எஸ். பணிக்கருக்கு மகனாகப் பிறந்தார். 1996-ல் இயற்பியல் பட்டமும் 1971-ல் நுண்கலைப் பட்டமும் பெற்று ஓவியம், சிற்பம் சார்ந்த துறையைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தார். புகழ்பெற்ற ஓவியக் கிராமமான சோழ மண்டலக் கலைக் கிராமத்தில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடக்கினார். நந்தகோபாலின் சிற்பங்கள் கோட்டோவியங்களை அடிப்படையாகக் கொண்டவை. அழுத்தமான கோடுகளைப் பிரதிபலிக்க அவர் உலோகக் குழாய்களைப் பயன்படுத்தினார். குழாய்களின் மீது தகடுகளைப் பழமையான பற்றவைப்பு முறையின் மூலம் ஒன்றிணைத்துத் தகடுகளின் மேற்பரப்பைப் பளபளப்பாக்கச் செய்வதற்காக மெருகூட்டி அதன் மேல் தொன்மையான எனாமல் பூச்சுகளின் மூலம் நிறங்களைச் சேர்த்துத் தனக்கான வடிவங்களை உருவாக்குவது அவருடைய பாணி.

உலோகச் சிற்பங்கள் இந்தியாவில் மூன்று விதமாக உருவாக்கப்பட்டன. 1. தகட்டுப் புடைப்புச் சிற்பம், 2. வார்ப்புச் சிற்பம், 3. செதுக்குதல் அல்லது வடித்து எடுத்தல். இம்மூன்று முறைகளில் வார்த்தெடுத்தல், தகட்டுப் புடைப்புச் சிற்ப வழிமுறைகள் உலோகத்துக்கான தனித்துவமான இயல்பைக் கொண்டிருப்பவை. வார்ப்பு முறையில் மதராஸ் கலை பாணியில் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி தகட்டுச் சிற்ப முறையில் பி.வி. ஜானகிராம், கே.எம். கோபால், எஸ். நந்தகோபால், பரமசிவம், கண்ணியப்பன் மரியா போன்றவர் களையும் இவ்வனைத்து முறைகளிலும் செய்து பார்த்தவர் சிற்பி தனபால். இப்படி வரிசைப்படுத்திப் பார்க்க, நீண்ட பாரம்பரியம் கொண்ட உலோகச் சிற்பத் துறையில் சென்னைக் கலைப் பாணியின் பங்களிப்பை உணரலாம்.

சோழர் காலச் செப்புத் திருமேனிகள் நமக்குக் கிடைக்கும் தொன்மையான வடிவங்கள். அவற்றுள் சமயம் சார்ந்த கதைகளின் கதாபாத்திரங்களின் உருவங்களைக் காண முடியும். உதாரணமாக ரிஷபா ரூடரைச் சொல்லலாம். பிற்காலங்களில் கற்சிலைகளுக்கு மேல் தங்கத்தகடுகளைப் பதிக்கும் முறை இருந்ததற்கான சான்றுகளைப் பல கோயில்களில் இப்போதும் பார்க்க முடிகிறது. ஜானகிராம் போன்றவர்கள் இம்முறையைக் கைக்கொண்டு சிற்பங்களை வடித்தெடுத்தார்கள். இந்த முறைமையின் அடிப்படையிலேயே நந்தகோபாலின் பாணியும் தொடங்குகிறது. இந்திய புராண இதிகாசக் கதாபாத்திரங்களும் இயற்கை நிலப்பதிவுகளும் சூழலும்தான் நந்தகோபாலின் கருப்பொருள்கள்.

இந்தியப் புராணங்களில் ஹனுமன், கருடன் போன்ற மனிதனும் பறவையும் அல்லது மனிதனும் மிருகமும் இணைத்து உருவாக்கப்பட்ட புனைவுகளின் வழியில் உருவாகி நமக்குக் காணக் கிடைக்கும். பழமையான சிற்பக் காட்சிகளை எடுத்துக்கொண்டு அதன் வெளிப்பாட்டுத் தன்மையில் சுதந்திரத்துடன் செயல்பட்டு புதிய நவீன கலைப் படைப்புகளை உருவாக்கியதால் நந்தகோபால் தனித்துத் தெரிகிறார். நந்தகோபாலின் வடிவமைப்பு பிரம்மாண்டமானதாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் அதே வேளையில் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அமைந்திருக்கும். இந்தத் தன்மையே அவரை உலக அரங்கில் இந்தியாவுக்கான சிற்ப முகம் என்று சொல்லத் தோன்றுகிறது. ராவணன், கிருஷ்ணன் போன்ற உருவங்களின் புறத்தோற்ற அழகியலை எடுத்துக்கொண்டு அவற்றின் உள்ளார்ந்த பழமையான கதைகளைக் களைந்து புதிய சமகாலக் கதைகளைச் சிந்திக்கவைக்கிறார். இதுவே அவருடைய கலை வாழ்வின் வெற்றி என நான் கருதுகிறேன்.

இவரது சிற்பங்கள் முழுவதும் துளைகளிடப்பட்டிருப்பதை நாம் காண முடியும். பழங்காலச் சிந்தனை மரபில் சிலைகள் பின்னப்பட்டுவிட்டால் அவை வழிபாட்டுக்குரியவையல்ல என்று தூக்கி எறியப்பட்டுவிடும். இப்புனித பிம்பங்களைத் தகர்த்ததின் மூலம் நந்தகோபால் புதுயுகத்தின் சிந்தனை யாளர் என்று சொல்லலாம். கே.எம். கோபால் தாந்த்ரீக முறையில் தகட்டுச் சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார். அதே காலகட்டத்தில் ராமானுஜம் திராவிடக் கட்டடக் கலை மரபுகளை சினிமா செட்டுகளின் அதீதக் கற்பனைகளாகப் பாவித்துச் சித்திரங்களாகத் தீட்டியிருக்கிறார். நந்தகோபால் முற்றிலும் புதிய வழியில் நம்மைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறார்.

நந்தகோபால் இந்திய மரபுகளை நன்கு உள்வாங்கி, நவீன பாணியில் அவற்றை வெளிப்படுத்தி இந்தியச் சிற்பக் கலையின் வளர்ச்சிக்கும் சிற்பம் சார்ந்த கலாச்சார முன்நகர்வுக்கும் வழிவகுத்திருக்கிறார். மிகுந்த சிரமங்களுக் கிடையில் நடந்தேறியிருக்கும் பெரும் வெடிப்பாகத்தான் இதை நான் பார்க்கிறேன். அழகியல் கோட்பாடுகளில் உலக மொழியில் இந்தியத் தத்துவ மரபைப் புதிதாகத் தீர்மானித்துச் சென்றிருக்கிறார். வழி என்றும் இருப்பதுதான். நாம் செல்ல வேண்டிய இலக்கு வெகு தூரம் இருக்கிறது.

சீனிவாசன் நடராஜன், ஓவியர், ‘விடம்பனம்’ நாவலாசிரியர், தொடர்புக்கு: arunsriindia@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x