Last Updated : 14 Oct, 2014 12:32 PM

 

Published : 14 Oct 2014 12:32 PM
Last Updated : 14 Oct 2014 12:32 PM

வழுக்கை விழுவது ஏன்?

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.

முடியின் வளர்ச்சி

முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.

முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.

ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.

இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.

தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

என்ன காரணம்?

வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்,,,, இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.

வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை மாற்ற முடியாது.

கடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.

சரி, ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை? இந்தச் சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது; அதீதமாகச் சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.

வழுக்கையைத் தடுக்க முடியுமா?

நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது. எனவே, இதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்.

தலைமுடிகளின் வேர்க் கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கையைத் தடுக்கலாம்.

வழுக்கை விழத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் மேன்மேலும் முடி கொட்டாது. ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவினால், ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவிவர வேண்டும்.

ஊட்டச்சத்து முக்கியம்!

சிறு வயதிலிருந்தே தலைமுடியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும். ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான எல்லாச் சத்துகளும் கிடைக்கும்.

என்ன சிகிச்சை?

பெரும்பாலும் பின்னந்தலையில் வழுக்கை விழாது. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சித் தலை வரைக்கும் வழுக்கை விழும். ஆகவே, பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுவதற்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) என்று பெயர்.

இதெல்லாம் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ‘விக்’!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x