Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

வலிப்பு நோயை வென்றவர்கள்

வலிப்பு நோய் உள்ளவர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்வி "எனக்கு மட்டும் ஏன் டாக்டர் இந்த நோய் வந்திருக்கு?", என்று ஏதோ வாழ்வே முடிவுக்கு வந்துவிட்டதைப் போல விரக்தியின் உச்சத்துக்கே போய் விடுவார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான் – இது முற்றிலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஒரு நோய்; எல்லோரையும் போல உங்களுக்கும் ஒரு வளமான எதிர்காலம் இருக்கிறது என்பதுதான்!

சில வரலாற்று உண்மைகள்

வலிப்பு ஒரு சாபக்கேடோ, வாழ்வின் முடிவோ அல்ல. வலிப்புகளை மீறி வெற்றிகளைக் குவித்த சில சாதனையாளர்களை அறிந்தால், இது புரியும்!

# உலகையே வென்று ஆட்சி செய்த மாவீரன் அலெக்சாண்டர், போரிட்டுக்கொண்டிருந்த நேரத்தில்கூட வலிப்பு நோயால் அவதிப்பட்டதாக வரலாறு சொல்கிறது; வலிப்பு வெற்றிக்குத் தடை அல்ல!

# ஃபியோதர் தாஸ்தாவ்ஸ்கி – உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர் Idiot என்ற தன் நாவலில், மனதுக்கு சுகம் தரும் உணர்ச்சிகள் முன்னெச்சரிக்கையாக (Aura) ஏற்பட்டு, உடனே வலிப்பு வருவதாகக் குறிப்பிடுகிறார். அவரும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்தான்.

# நோபல் பரிசை உருவாக்கிய விஞ்ஞானி ஆல்ஃபிரெட் நோபல் ஒரு வலிப்பு நோயாளி என்பது பலருக்குத் தெரியாது. அவர் ‘டைனமைட்’ கண்டுபிடித்து உலகப் புகழ்பெற்றார்.

# ஹாலிவுட் திரையுலகிலும், நாடக உலகிலும் கொடிகட்டிப் பறந்த டான்னி குளோவர், தி மாட்ரிக்ஸ் (The Matrix) அறிவியல் பட வில்லன் நடிகர் ஹியுகோ வாலஸ் வீவிங், புகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், தலைசிறந்த தத்துவ ஞானி சாக்ரடீஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி கிரெய்க் என்று வலிப்பு நோயை வென்று, வாழ்ந்து காட்டியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது!

வலிப்பின் வகைகள்

நமது மூளையின் வெவ்வேறு பகுதிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால், வெவ்வேறு வகையான வலிப்புகள் தோன்றுகின்றன. இதனால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வலிப்பு, மற்ற வலிப்புகளில் இருந்து மாறுபடும்.

மூளையின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுபவை, நாம் அவ்வப்போதுக் காணும் பொதுவான (நினைவிழத்தல், கை கால் வெட்டி இழுத்தல், வாயில் நுரை தள்ளுதல் போன்றவற்றுடன் வரும்) வலிப்புகள் (Generalised or Grandmal type).

மூளையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் பாதிப்பால் மட்டும் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial or Focal Seizures). இது, ‘சிம்பிள்', ‘காம்ப்ளெக்ஸ்' என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. பகுதி வலிப்புகள்:

அ. சிம்பிள் பகுதி வலிப்புகள் (நினைவிழத்தல் இல்லை)

# தசைகள் மட்டும் துடிக்கும்

# உணர்ச்சிகள் மட்டும் (வாசனை, சுவையறிதல், காதுகளில் இரைச்சல் ஏற்படுதல் போன்றவை இதில் அடங்கும்)

# Autonomic symptoms (வியர்த்து விடுதல், தலை சுற்றல், வயிற்றில் வேதனை போன்றவை)

# மனநிலையில் மாற்றங்கள்

ஆ. காம்ப்ளெக்ஸ் பகுதி வலிப்புகள் (நினைவிழத்தல் உண்டு)

# சிம்பிள் பகுதி வலிப்பாகத் தொடங்கி, நினைவிழத்தல்வரை செல்லும்

# நினைவிழத்தல் மட்டும்.

இ. மற்ற வகைகள்

# சிம்பிள் பகுதி வலிப்பு, முழுவீச்சு வலிப்பாக மாறுதல்

# காம்ப்ளெக்ஸ் பகுதி வலிப்பு, முழு வீச்சு வலிப்பாக மாறுதல்

# சிம்பிள் மற்றும் காம்ப்ளெக்ஸ் பகுதி வலிப்புகள் முழுவீச்சு வலிப்பாக மாறுதல்.

2. முழுவீச்சான வலிப்புகள் (Generalised)

அ. பெடிட் மால் ஆப்ஸான்ஸ் (Absance) வலிப்புகள்

ஆ. மயோகுளோனிக் வலிப்புகள்

இ. குளோனிக் வலிப்புகள் (வெட்டி இழுத்தல்)

ஈ. டோனி வலிப்புகள் (விறைப்பான தசைகளுடன்)

உ. டோனிக்-குளோனிக் வலிப்புகள் (விறைப்பு, வெட்டி வெட்டி இழுத்தல்)

ஊ. ஏடோனிக் வலிப்புகள் (தசைகளில் விறைப்புத் தன்மை இன்றி, ‘துணி’ போல் சுணங்கி விழுதல்)

3.வகை பிரிக்க முடியாத வலிப்பு நோய்கள் (வலிப்பு சிண்ட்ரோம்கள்)

4.தொடர் வலிப்புகள் (இடையில் நினைவு திரும்பாமல், தொடர்ந்து வலிப்பு வந்துகொண்டே இருப்பது)

உங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு வலிப்பு வகைகளைப் பற்றிய பரிபூரண அறிவு மிகவும் அவசியம். வலிப்பின் வகைக்கு ஏற்றபடி சிகிச்சை முறைகளும், மருந்துகளும் மாறுவது அடிப்படை நியதி!

-டாக்டர் பாஸ்கரன், நரம்பியல் நிபுணர்
தொடர்புக்கு: bhaskaran_jayaraman@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x