Published : 22 Jul 2014 01:02 PM
Last Updated : 22 Jul 2014 01:02 PM

முதுகுவலி: நாமே தடுக்கலாம்

• வாரத்தில் ஒரு நாளாவது உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும்போது ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் எலும்பு மூட்டுகளில் உயவுத்தன்மை குறையாமலும் பார்த்துக்கொள்ள முடியும்.

• அடிபடுவதாலும், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதாலும் ஜவ்வுகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, ஓரிடத்தில் தொடர்ந்து உட்கார்ந்துகொண்டே இருக்கக் கூடாது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் எழுந்து சிறிது தூரம் நடந்தால், பின்னால் பெரிதாக வரும் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

• கழுத்து ஜவ்வு பாதிக்கப்பட்டால் வீக்கமும் வலியும் ஏற்படும். கம்ப்யூட்டரின் முன் தொடர்ந்து உட்கார்ந்து பல மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை வரலாம். அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, கழுத்துக்குத் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

• சம்மணம் போட்டு உட்காருவதைத் தற்போது மறந்து வருகிறோம். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது சம்மணம் போட்டு உட்கார்வது முதுகுத் தண்டுக்கும் இடுப்புக்கும் நல்லது.

• வலி குறைவாக இருக்கும்போது உடற்பயிற்சியின் மூலம் அதைச் சரி செய்துவிடலாம். சிலருக்குப் பிறக்கும்போதே முதுகுத் தண்டு வளைந்து காணப்படலாம். இது பிறவி குறைப்பாடு. உடற்பயிற்சி மூலம் இக்குறையை மட்டுப்படுத்த முடியும்.

• உடற்பயிற்சி செய்யும்போது தசைநார்களுக்கும், எலும்புகளுக்கும் வலு கிடைக்கும். தசை வீக்கமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது எலும்பும் ஜவ்வும்தான். எனவே, உடற்பயிற்சி முக்கியம்.

• முதுகு வலி உள்ளவர்கள் தும்மும்போது, பார்த்துத் தும்ம வேண்டும். தும்மும்போது கழுத்தும், இடுப்பும் வேலை செய்யும். கழுத்துக்கும் இடுப்புக்கும் கடுமையாக வேலையைக் கொடுத்துவிட்டால், இடுப்பு ஜவ்வு பாதிக்கப்படும்.

• நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால், காலி வயிற்றில் வாயு உருவாகித் தொல்லை ஏற்படும். எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.

• முறையாக உட்காராமல் இருப்பது, படுத்துக்கொண்டே கம்ப்யூட்டர் பார்ப்பது, குப்புறப் படுத்துக்கொண்டு செல்போனை மேய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது இவையெல்லாம் முதுகுவலியில் கொண்டு போய் விட்டுவிடும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x