Published : 09 Sep 2014 12:49 PM
Last Updated : 09 Sep 2014 12:49 PM

மானிடராய் பிறத்தல் அரிது!

உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10

உலகில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். நாள் ஒன்றுக்கு 3,000 பேர் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்படி மடிகின்றனர். 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறந்து போவதற்கான காரணங்களில் தற்கொலை இரண்டாவது காரணமாக இருக்கிறது.

நம் நாட்டில் லட்சத்துக்கு 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 % தற்கொலைகள். இதில் 40 % பேர் ஆண்கள், 60 % பேர் பெண்கள்.

ஏன் இந்த எண்ணம்?

நமது முன் மூளைப் பகுதி மூளையின் மற்றப் பகுதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மனம், எண்ணம், எழுச்சி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைந்து மனிதனை வாழ வைக்கிறது.

இந்த ஒருங்கிணைந்த மூளைச் செயல்பாட்டில் சுற்றுச்சூழல் தாக்கமும், உடல் உள்ளுணர்வு தாக்கமும் எல்லைமீறும்போது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. அது தீவிரமடையும்போது ஒருவரது மனம் அவசர முடிவு எடுத்துத் தற்கொலை அரங்கேறி விடுகிறது. தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் 20-ல் ஒருவர் இறந்து விடுகிறார்.

காரணங்கள்

தற்கொலை எண்ணம் ஏற்பட முக்கியக் காரணம் மனநோய்களும் நரம்புக் கோளாறுகளும். அடுத்ததாக மதுப் பழக்கம், போதைப்பொருள் பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம், தகாத பாலுறவு, சீட்டு விளையாடுதல், திருட்டு, சமூகவிரோத குணம், கடன் வாங்குதல் உள்ளிட்டவை தற்கொலையைத் தூண்டுகின்றன.

இதைத் தவிர வேலையின்மை, வீட்டுச் சண்டை சச்சரவு, கடன் தொல்லை, பரீட்சை தோல்வி, வேலை செய்யும் இடங்களில் சித்திரவதை, குடும்பங்களில் சித்திரவதை, இளம்வயது திருமணங்கள், பாலியல் தொந்தரவுகள் ஆகியவையும் தற்கொலைக்குக் காரணங்கள்தான்.

இன்றைக்கு அதிகச் செல்போன், வலைத்தள பயன்பாடும்கூடத் தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கிடைக்கும் எந்தச் சூழ்நிலையையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள்.

தடுப்பு நாள்

தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேசத் தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது அனுசரிக்கப்படுகிறது.

இந்த 12வது உலகத் தற்கொலை தடுப்பு நாளின் மையக் கருத்து ‘தற்கொலைத் தடுப்பில் ஒருங்கிணைந்த செயலாக்கம்'.

நம் பங்கு

தமிழகத்தில் மனநோய்களுக்கான மருத்துவச் சிகிச்சை நடமாடும் மாவட்ட மனநலத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே மனநல மாற்றம் காரணமாக ஏற்படும் தற்கொலை எண்ணத்தைத் தடுக்க உரிய மருந்துகளை இலவசமாகப் பெறலாம்.

மேலும் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 104 மருத்துவ ஆலோசனை உதவி எண் மூலம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெளிவு பெற முடியும். சமூகத்தில் நடக்கும் தற்கொலைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒரு சமூகமாக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.

தனிமைப்பட்டு இருப்பவர்களிடம்தான் அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளைப் பெருமளவு தடுக்க முடியும்.

இலவச உளவியல் ஆலோசனை

தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060 நேரடியாக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028

மின்னஞ்சல் தொடர்புகொள்ள: help@snehaindia.org

புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அணுகலாம். முகவரி: 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

கட்டுரையாளர் மூளை நரம்பியல் பேராசிரியர்,
வலிப்பு நோய் நிபுணர்
தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x