Published : 02 Jun 2018 11:37 AM
Last Updated : 02 Jun 2018 11:37 AM

மூலிகையே மருந்து 08: இது பால் மருந்து

 

‘அ

ம்மான் பச்சரிசி' என்றதும் ’அரிசியில் இதுவும் ஒரு வகையா?’ என நினைத்துவிட வேண்டாம். மருத்துவத்துக்குப் பயன்படும் சிறுமூலிகைதான் அம்மான் பச்சரிசி. அனைவரது கண்களிலும் அடிக்கடி தென்படும் மூலிகை இது. இதன் அருமைப்பெருமைகளைப் பற்றி தெரியாமல் கடந்து சென்றிருப்போம். திறந்தவெளிகளில் சாதாரணமாகக் காணப்படும் அம்மான் பச்சரிசியினுள் இயற்கை பொதிந்து வைத்திருக்கும் மருத்துவக் குணங்கள் அளப்பரியவை.

பெயர்க் காரணம்: இதன் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. மழைக்காலத்தில் அனைத்து இடங்களிலும் செழிப்பாக வளரும் தன்மையுடையது. நீர்நிலைகளின் ஓரத்தில் அதிகளவில் முளைத்திருக்கும். பஞ்ச காலங்களில் இதன் இலைகள் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளிலும் அம்மான் பச்சரிசி காணப்படுகிறது.

அடையாளம்: Euphorbiaceae குடும்பத்தை சார்ந்த அம்மான் பச்சரிசியின் தாவரவியல் பெயர் Euphorbia hirta. இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் அம்மான் பச்சரிசியை உடைத்தால், பால் வடியும். தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு. பெடுலின், ஆல்ஃபா-அமைரின் (Alpha-amyrin), கேம்ஃபால் (Camphol), குவர்சிடின் (Quercitin), பைட்டோஸ்டீரால்ஸ் (Phytosterols), யூபோர்பின் ஏ (Euphorbin – A) போன்றவை இதிலுள்ள வேதிப்பொருட்கள்.

உணவாக: அம்மான் பச்சரிசி இலைகள், கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி போன்ற கீரை வகைகளின் துணையோடு செய்யப்படும் ’கலவைக் கீரை சமையல்’, ஆர்க்காடு மாவட்ட கிராமங்களின் முதன்மை உணவு. முழுத் தாவரத்தையும் பருப்பு, மஞ்சள், சீரகம், தக்காளி சேர்த்து கீரையாகக் கடைந்து சாப்பிட உடலுக்குத் தேவையான சத்துக்களை வாரி வழங்கும். இதன் காயை அவ்வப்போது துவையல் செய்து சாப்பிட, மலம் நன்றாக வெளியேறும்.

சிவப்பு நிற அம்மான் பச்சரிசியை உலர்த்திப் பொடிசெய்து, ஐந்து கிராம் அளவு பசும்பாலில் கலந்து அருந்த விந்தணுக்கள் அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். அம்மான் பச்சரிசியை அரைத்துத் தயிரில் கலந்து சாப்பிட, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நோய் கட்டுப்படும். அம்மான் பச்சரிசியைக் காயவைத்து, பொடியை வெந்நீரில் கலந்து அருந்த சளி, இருமல் குணமாகும். இளைப்பு நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. இதைச் சமைத்து சாப்பிடுவதால் வயிற்றுப் புண்களும் குணமாகும்.

'அவுரி அழவனம் அவரை அம்மான் பச்சரிசி அறுகு தோல் காக்கும்' என்று தோல் நோய்களுக்கு பயன்படும் பட்டியல் அடங்கிய ’மூலிகைக் குறளில்’ அம்மான் பச்சரிசியும் ஒன்று. ‘விரணமலக் கட்டுமே கந்தடிப்புச் சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டு போம்…’ என்ற பாடல், புண், மலக்கட்டு, தோல் நோய்கள், வெள்ளைப்படுதல் போன்றவை அம்மான் பச்சரிசியால் குணமாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மருந்தாக: வலி நிவாரணி, வீக்கத்தைக் கரைக்கும் செய்கை அம்மான் பச்சரிசிக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கிருமிநாசினி செய்கையைக் கொண்டிருப்பதால் தொற்றுக்களை அழிக்கும். விலங்கினங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அம்மான் பச்சரிசி பால் சுரப்பை தூண்டுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இ கோலி, ஷிகெல்லா டிசென்ட்ரியே (Shigella dysentriae) பாக்டீரியா வகைகளை தலைதூக்க விடாமல் அம்மான் பச்சரிசி தடுப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு இருக்கும் சிறுநீர்ப்பெருக்கி (Diuretic) செய்கை குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று இருக்கின்றன. சிறு அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள், பசும்பாலின் குணத்துக்கு ஒப்புமையாக கூறப்படும் மருத்துவக் குறிப்பு சார்ந்த ஆய்வு, பல உண்மைகளை வெளிப்படுத்தலாம்.

வீட்டு மருந்தாக:

வெளிமருந்தாக சிறந்த பலன் அளிக்கக்கூடியது. வைரஸ்களால் உடலில் தோன்றும் மரு (Warts), பாலுண்ணிகளின் (Molluscum contagiosum) மீது, இந்த செடியை உடைக்கும்போது வெளிவரும் பாலைத் தொடர்ந்து தடவிவந்தால், விரைவில் அவை மறையும். தினமும் சிறிது பாலை மருவின் மீது வைத்துவர சிறிது சிறிதாக மருக்கள் உதிர்வதைப் பார்க்க முடியும். பாதங்களில் உண்டாகும் கால்ஆணிக்கும், உதட்டில் தோன்றும் வெடிப்புகளுக்கும், நாவில் உண்டாகும் சிறு புண்களுக்கும் அம்மான் பச்சரிசிப் பாலை தடவலாம்.

சிறிய கட்டிகள், வீக்கங்களுக்கு பற்றுப் போடலாம். பாதங்களில் உண்டாகும் எரிச்சல், அரிப்புக்கு, அம்மான் பச்சரிசியை மஞ்சளோடு சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தடவினால், விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

துவர்ப்புச் சுவையுடைய செடியை அரைத்து, அதன் சாற்றோடு நீர் சேர்த்து வாய் கொப்பளிக்க, வாய்ப்புண்கள் மறையும். புண்களைக் கழுவும் நீராகவும் அம்மான் பச்சரிசி சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தலாம் . தூதுவளை இலையுடன் இதன் சமூலத்தை (Note: என்றால் என்ன?) துவையல் செய்து சாப்பிட, உடல் சோர்வைப் போக்கும்.

தாய்ப்பாலைப் பெருக்குவதற்காக, இதன் சமூலத்தை அரைத்துப் பாலுடனும் வெண்ணெயுடனும் கலந்து கொடுக்கும் வழிமுறை பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. குளிர்ச்சியை உண்டாக்கும் செய்கையுடைய அம்மான் பச்சரிசியை அரைத்து மோரில் கலந்து குடிக்க, வெப்பம் தொடர்பான நோய்கள் அண்டாது. வித்தியாசமான பெயரைக் கொண்ட அம்மான் பச்சரிசி, மருத்துவ குணங்களிலும் வித்தியாசமானதுதான்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x