Published : 26 May 2018 11:43 AM
Last Updated : 26 May 2018 11:43 AM

மூலிகையே மருந்து 07: அறுகம் புல் = ஆரோக்கியம்

மழை லேசாகப் பெய்ததும், மறுநாள் எங்கு பார்த்தாலும் ‘தளதளவென’ அறுகம் புல் முளைத்து, பசுமையாய் தனி அழகுடன் காட்சிதரும்! வழிபாட்டில் அறுகம் புல்லுக்கும் இடமுண்டு. அதையும் தாண்டி, மூலிகை மரபையும் மருத்துவ குணத்தையும் நம் மரபில் அறுகம் புல் பெற்றிருக்கிறது.

பெயர்க்காரணம்: அறுகு, மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்றவை அறுகம்புல்லின் வேறு பெயர்கள். நோய்களை அறுப்பதால், இதற்கு ‘அறுகு’ என்ற பெயர் வந்திருக்கலாம்.

அடையாளம்: பல்லாண்டு வாழும் புல் வகையினம். கூர்மை மழுங்கிய இலை நுனியைக் கொண்டிருக்கும். குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படும். அறுகம் புல்லின் தாவரவியல் பெயர் Cynodon dactylon. Poaceae குடும்பத்தை சார்ந்தது. இதில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், சிடோஸ்டீரால், கரோட்டீன், அபிஜெனின், டிரைடெர்பீனாய்ட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

உணவாக: ’கண்ணோயொடு தலைநோய் கண்புகைச்சல் இரத்தபித்தம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல், அறுகம்புல்லின் நோய் போக்கும் தன்மை குறித்து தெளிவுப்படுத்துகிறது. அறுகம் புல்லானது உடலில் தங்கிய நச்சுக்களை நீக்குவது, தோல் நோய்களை அழிப்பது, குடல் இயக்கங்களை முறைப்படுத்துவது என பல மருத்துவ குணங்களை கொண்டது. அறுகம்புல் ஊறிய நீரில், சம அளவு பால் சேர்த்துப் பருக கண்ணெரிச்சல், உடல் எரிச்சல் குறையும். அறுகம் புல்லை காயவைத்துப் பொடி செய்து, தோசை, இட்லி, அடை போன்ற உணவு வகைகளில் கலந்தும் சாப்பிடலாம்.

மருந்தாக: இதிலுள்ள ஒருவகையான புரதக்கூறு, நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், அழற்சி (Anti-arthritic activity) ஆகியவற்றை அறுகம்புல் சாறு குறைப்பதாகவும் ஆய்வு சொல்கிறது. சமீபத்திய ஆய்வில், விந்தணுக்களின் எண்ணிகை, விந்தின் இயக்கத்துக்குத் (Sperm motility) தேவையான ஃபிரக்டோஸ் அளவை அதிகரிப்பதற்கும் அறுகன்சாறு பயன்படுவது தெரியவருகிறது.

வீட்டு மருத்துவம்: அறுகம் புல்லை இடித்துச் சாறு பிழிந்து, நீர் சேர்த்து, சுவைக்கு சிறிது பனங்கற்கண்டு கூட்டி தினமும் அரை டம்ளர் குடித்துவர, உடம்பில் தங்கிய கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றும். உடலில் இருக்கும் அசுத்தங்களை சுத்திகரிக்கும் அறுகம் புல் சாறை ‘பச்சை ரத்தம்’ என்று சொல்வது சாலப்பொருந்தும். தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்ற நோய்களும் குணமாகும்.

அறுகம் புல்லை மஞ்சளோடு சேர்த்து அரைத்து நோய் உள்ள இடங்களில் தொடர்ந்து பூசிவர, சொறியும் சிரங்கும் நம் கண்ணுக்குத் தெரியாமல் மறையும்! அறுகம் புல்லோடு, கடுக்காய்த் தோல், இந்துப்பு, சீமை அகத்தி இலை சேர்த்து மோர்விட்டு நன்றாக அரைத்து, படர்தாமரை உள்ள பகுதிகளில் பூசலாம். அறுகம் புல்லுக்கு ரத்தப்பெருக்கை தடுக்கும் தன்மை (Styptic) இருப்பதால், அடிபட்டு ரத்தம் வடியும்போது, உடனடியாக அறுகம் புல்லைக் கசக்கித் தேய்க்கும் வழக்கம் கிராமங்களில் உண்டு.

அறுகன் குடிநீர்: ஒரு கைப்பிடி அறுகம்புல், ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை ஆகியவற்றை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, குடிநீராக காய்ச்சி வடிகட்டி அருந்த, நச்சுகளின் தாக்கத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தையும் சுத்திகரிக்கும். மலைப் பகுதியில் வசிக்கும் சில பழங்குடி மக்கள் பூச்சி, தேள் போன்ற நச்சு உயிரினங்கள் கடிக்கும்போது, மேற்சொன்ன அறுகன் குடிநீரையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அறுகன் குடிநீரோடு சிறிது வெண்ணெய் சேர்த்துக் குடித்துவர, மருந்துகளால் உண்டான வெப்பமும் சிறுநீர் எரிச்சலும் குறையும்.

அருகன் தைலம்: அறுகம்புல் சாறு அரை லிட்டர், தேங்காய் எண்ணெய் கால் லிட்டர், அதிமதுரப் பொடி அல்லது மிளகு 15 கிராம் சேர்த்து சிறுதீயில் காய்ச்சி கரகரப்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளலாம். இந்த ‘அருகன் தைலம்’ அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான மருந்து. தோலில் தடிப்பு, அரிப்பு, பொடுகுத் தொல்லைக்குத் தடவிவரப் பலன் கிடைக்கும்.

அம்மை நோய் வந்து குணமான பின்பு, அறுகம் புல்லையும் வேப்ப இலைகளையும் இட்டுக் காய்ச்சி தலைக்கு நீர் ஊற்றும் பழக்கத்தை கிராமங்களில் பார்க்க முடியும். அறுகம்புல் சாறை அருந்துவதால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். உடல் எடையையும் சீராகப் பராமரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. அசோகமரப்பட்டை, அறுகம்புல் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக ரத்தப் போக்கை குறைக்க உதவும்.

வெள்ளை நோயைக் கட்டுப்படுத்த, அறுகம் புல்லை தயிரில் அரைத்துச் சாப்பிடலாம். புல் மட்டுமன்றி, இதன் சிறிய கிழங்கை பொடி செய்து, சம அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவர, தோல் நோய்கள் குணமாகும். விலங்கினங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்வதில் அறுகம் புல்லுக்கு முக்கிய பங்குண்டு.

இலக்கியங்களில்: ’பழங்கன்றுகறித்த பயம்பு அமல் அறுகை (அறுகன்)…’ என்று அறுகம் புல்லைப் பற்றி அகநானூறு குறிப்பிடுகிறது. கன்றுகளுக்கான உணவாகவும், மழை பெய்ததும் உயிர்ப்பெறும் புல்லின் தன்மை குறித்தும், சர்வ சாதாரணமாக அனைத்து இடங்களிலும் முளைத்துக் கிடக்கும் அதன் வளரியல்பு குறித்தும் சங்க இலக்கியப் பாடல்கள் பதிவுசெய்துள்ளன. ’ஆல்போல் தழைத்து… அருகு போல் வேரூன்றி…’ எனும் வாய்மொழி வழக்கைப் போலவே, அறுகம்புல்லின் ஆரோக்கிய குணங்களும் நம் மண்ணில் ஆழ வேரூன்றியவை.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x