Last Updated : 09 Sep, 2017 09:57 AM

 

Published : 09 Sep 2017 09:57 AM
Last Updated : 09 Sep 2017 09:57 AM

உயிர் வளர்த்தேனே 52: ஒவ்வொரு கவளத்தையும் உணர்ந்து சுவைப்போம்!

காய்கள், கிழங்குகள் பற்றி இன்னமும் நாம் பேசவில்லை. நடுத்தர வருமானமுள்ளவர்கள் சமைக்கும் உணவு வகைகளில் வெங்காயம், தக்காளி தவிர மேலும் ஒன்றிரண்டு காய்கள், கிழங்குகள் இடம்பெறுவது பெரும் கொடுப்பினை.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, சிக்கிம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தமிழகம் அளவுக்குப் பல்வேறு விதமான காய், கிழங்கு பயன்பாடு இல்லை என்றே கருதுகிறேன். மித வெப்பமண்டலப் பகுதியான நம் நிலத்தில் அத்தனை வகை காய் கிழங்குகள் பயிராகிக் கைக்கெட்டும் தொலைவிலேயே கிடைத்து விடுகின்றன.

ஆதி வேட்கை

வெங்காயம், தக்காளி, ஒரு காய் இருந்தால்போதும் இவற்றை மட்டுமே வைத்து துளி மசால் அல்லது மிளகாய் சேர்த்து அற்புதமான கூட்டு அல்லது பொரியல் அல்லது குழம்பு அல்லது பெயரிட முடியாத ஒரு பண்டத்தை நம் இல்லத்தரசிகள் படைத்தருளி விடுவார்கள்.

தக்காளி புளிப்பு, வெங்காயம் காரம். இரண்டுமே சதைப் பற்றானவை என்பதால் சொத சொதவென குழம்பு கிடைத்து விடுகிறது. அத்துடன் கூடவே ஒரு காய் அல்லது கிழங்கு கிடைத்தால் கடித்துண்ண ஒரு நிறைவு கிடைக்கிறது.

நம் உடலின் மரபணுவில் ஆதி வேட்டைக் கூறு மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. எனவே, நார்த்தன்மை மிகுந்த இறைச்சி போன்ற ஒன்றைக் கடித்து உண்டால்தான் நிறைவு கிடைக்கிறது. எதுவும் இல்லாமல் போனால் பொரித்த அப்பளம், வற்றலாவது இருக்க வேண்டும். இப்போது தொடங்கிவிட்ட கார்காலத்தில் மொறுமொறுப்பான ஒரு பண்டம் இருந்தால்தான் உண்பதற்கு வாய் ஒத்துழைக்கும்.

புலம்பெயர்ந்த கத்திரிக்காய்

'இங்கிலிஷ் காய்கள்' என்று பொதுவாக அறியப்படுகிற கேரட், பீன்ஸ், கோஸ், காலி பிளவர் மட்டுமல்ல, பெரும்பாலான மற்ற காய்களும் அயல் இறக்குமதிதான்.

நாம் மிக மலினமாகக் கருதும், வார்த்தைக்கு வார்த்தை 'இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா?' என்று சொல்லிக்கொள்கிற; விழுந்தால், புரண்டால், தடுக்கினால் நம்மை அணைத்துச் செல்கிற கத்திரிக்காய்கூட நம் காய் இல்லை. தென்னமெரிக்க நாடான பிரேசிலில் இருந்துவந்து, பூர்வகுடிபோல நம்முள் இரண்டறக் கலந்துவிட்டது.

மெலிதான காரல் சுவையும், வழுவழுப்பான சதைப்பற்றும் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் முழுவெள்ளை, முழுப்பச்சை, அப்பன் வாங்கித் தந்த ரிப்பன் கலரில் அடர்ஊதா, உருண்டை, நீலம், முட்டை வடிவம் எனப் பத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் காண முடியும். ஈரப் பதத்துடன் தளதளப்பாக மின்னும் கத்திரிக்காய்கள் காணக் கிடைத்தால் ஓரிரு நிமிடங்கள் நின்று அவற்றைக் காதலுடன் பார்க்காமல் கடக்க முடிவதில்லை என்னால்.

கோசுமல்லிக் கூட்டணி

நமது தாய்மார்களை விட்டால் கத்திரிக்காய்க்கு நூறு வகையான வேஷங்கட்டி விதவிதமாக ஜொலிப்பேற்றி அதன் அடையாளத்தையே மறக்கடித்து விடுவார்கள். வெண்ணெய் போன்ற சதைப்பற்றும் மினுமினுப்பும், அதை என்ன செய்தாலும் ஈடுகொடுக்கும்.

ஐந்தாறு இளம் முற்றல் கத்திரிக்காயை எடுத்து முழுதாக மண் சட்டியில் இட்டு, இளஞ்சூட்டில் கடலை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சிறிதளவு விட்டுப் புரட்டிப் புரட்டி விடவேண்டும். தோல் வற்றி, கருகல் புகைக் கிளம்பும் பக்குவத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

வெங்காயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயில் இரண்டு சேர்த்து தாளிப்பிட்டு வெங்காயம் சுருளுவதற்கு முன்பாக ஆறின கத்திரிக்காயை உடைத்துத் தாளிப்புடன் சேர்த்துச் சிறிதளவு நீர் விட்டுக் கொதிக்கவிட வேண்டும். மூன்று பல் பூண்டை உரித்துப் போட்டுவிட்டு கொஞ்சமாகப் புளிக் கரைசல் சேர்த்து வாசம் போகக் கொதித்த பின்னர், எடுத்துக் கடைந்தால் கலவை வெண்ணெய்போலத் திரண்டு வரும். நார்த்தன்மையும், இளங்கசப்பும், காரல் சுவையும் உடைய இந்தக் கடைசலை செட்டிநாட்டில் கோசுமல்லி என்பார்கள். இட்லி, தோசை, சோறு எதனுடனும் கூசாமல் கூட்டணி வைத்துக்கொள்ளும் இந்தக் கோசுமல்லி.

வாய்தா கேட்கும் வாயுத்தொல்லை

பத்து நாளைக்குக்கூட வாடாமல் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்திருக்கும் உருளைக் கிழங்கு கிடைப்பதால், நம் பொழுது இந்த மட்டிலும் தொல்லை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

உருளைக் கிழங்கு… காய்க்குக் காய், கிழங்குக்குக் கிழங்கு, இறைச்சிக்கு இறைச்சி! கறிமசால் போட்டுத் தாராளமாக எண்ணெய்விட்டுப் புரட்டி எடுத்து உண்டால், இறைச்சி உண்ட திருப்தி தரும் கிழங்கு.

கைக்கும், மெய்க்கும், கட்டுப்படியான விலைக்கும் ஈடுகொடுக்கும் நமது நேசத்துக்குரிய உருளைக்கிழங்கு மீது வாயு என்று வாய்க்கு வாய் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள் நாற்பது வயதைக் கடந்தவர்கள். அப்படியே சுமத்தினாலும் அதை விட்டு வைக்கிறார்களா என்றால் இல்லை. தெரிந்து இரண்டு வாயும், தெரியாமல் நான்கு வாயும் உண்டுவிட்டு அதைக் கரித்துக் கொட்டுகிறார்கள்.

உருளைக் கிழங்கைத் தோலுடன் நன்றாக அவித்து ஆற வைத்து, தோல் நீக்கி உடைத்து மசிக்க வேண்டும். கனமான இரும்பு வாணலியில் தாராளமாக வெண்ணெய்விட்டு இளகியதும் சிறிதளவு இஞ்சி, பூண்டுத் தொக்குப் போட்டுப் புரட்டிவிட்டு, அரை தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி போட்டு மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும். இதை உண்டால் எந்த வயதினரும், அதைக் கொண்டா கொண்டா என்று கொண்டாடுவார்கள். அதன்மீது பழி சுமத்தியவர்கள்கூட குற்றவுணர்வில் வருத்தப்படுவார்கள். வாயுத் தொல்லை வாய்தா வாங்கிக்கொண்டு ஓடிப் போய்விடும்.

இதேபோல, அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லாத சேப்பங்கிழங்கு எனப்படும் வழுவழுப்பான கிழங்கும், நார்த்தன்மை மிகுந்த கருணைக் கிழங்கும் நமது உடல் நலனுக்குப் பெரிதும் நன்மை பயக்கக் கூடியவை.

சுவைத்து உண்கிறோமா?

நமது உணவின் நன்மை தீமை என்கிற குணங்கள் இரண்டுமே உணவில் இருந்து வருபவை அல்ல. உண்பவரின் உடலுக்குள் முன்னரே சேமிக்கப்பட்டக் கூறுகள்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றன. முன்னர் உண்ட உணவு செரித்ததா இல்லையா என்பதை உணராமல், பசியின் அளவறியாமல் கிடைக்கிற நேரத்துக்குக் கிடைக்கிற உணவை சுவைக்கு அடிமைப்பட்டு உண்டு வைப்பதே நோய்கள் அனைத்துக்கும் மூலகாரணம்.

அற்றான் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடி துய்க்குமாறு

- என்கிறார் நமது வள்ளுவப் பாட்டன். உங்கள் நாவுக்குப் பிடித்த உணவைப் போதும் போதும் என்று மறுத்தே உண்ணுங்கள் என்கிறார். நம்மில் பலர் இதுதான் கடைசிக் கவளம் என்று ஆவேசத்துடன் உண்கிற பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதால், மிகவும் பிடித்த உணவையும் தியாகம் செய்ய வேண்டிய உடல்நிலைக்கு ஒருநாள் வலிந்து தள்ளப்பட்டு விடுகிறோம்.

நாம் பிறந்த நிமிடத்தில் நமக்கான உணவை இயற்கை அன்னை எடுத்து வைத்துவிடுகிறாள். சிறிது சிறிதாக உண்டு நெடிய வாழ்நாள் முழுமைக்கும் அதை எடுத்துச் செல்வதையும், அவசர அவசரமாக அளவுக்கு அதிகமாக உண்டு வாழ்நாளை விரைவிலேயே முடித்துக்கொள்வதையும் நம் பொறுப்புக்கே அவள் விட்டுவிட்டாள்.

சுவையான உணவை உண்ண விரும்புகிறோம். ஆனால் சுவைத்து உண்கிறோமா என்றால் இல்லை. அடுத்த கவளத்தை உண்கிற ஆவேசத்தில் வாயில் உள்ள உணவைச் சுவைப்பதில்லை. கன்வேயரில் வைத்துத் தள்ளுவதுபோல தொண்டையில் வைத்து, இரைப்பையை நோக்கி உந்தி விடுகிறோம்.

இரைப்பையில் இல்லை பற்கள். பற்கள் உள்ள வாயில் உணவை அரைத்துவிட்டால் மென் உறுப்பான இரைப்பையின் வேலை எளிதாகி விடும். வாயில் மெல்லுகிற போதுதான் சுவையுணர்வு நாவில் நின்று நர்த்தனமாடும்.

சுவைக்கச் சுவைக்க உடலின் உயிர்த் தேவை முழுமையாக நிறைவடையும். தேவை நிறைவுற்றால் அளவு தானாகவே குறையும். உணவின் அளவு குறைந்தால் உடலின் செரிமான ஆற்றல் வீணாகாமல், நம் வாழ்நாளை அது நீடிக்கச் செய்யும். வாழ்கிற நாள் முழுமைக்கும் நலனை வழங்கும்.

நம் உயிர் வளரும்!

பெரு விருந்து களித்த நிறைவு

சமைத்துச் சுவைத்த சுவை உடலின் செல்தோறும் பரவும் அனுபவத்தையே 'உயிர் வளர்த்தேனே' தொடரில் கடந்த ஓராண்டாகப் பகிர்ந்துகொண்டேன். சுவைத்தலைப் போலவே, சுவைத்தலைப் பகிர்ந்துகொள்வதும்கூட ஒரு இன்ப அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. அதைத் துய்க்க வாய்ப்பளித்த வாசகர்களுக்கு நன்றிகளைப் பரிமாறுகிறேன்.

உடலியல் நுட்பத்தை அறியும் பொருட்டு உணவின் மீதான நுகர்வு ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் இத்தொடர் எழுதி முடித்த பிறகு பெரு விருந்து களித்த நிறைவெய்தினேன்.

இந்தத் தொடர்ஓட்டத்தைத் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் சென்றது வாசகர்களே. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானோர் என்னுடன் மின்னஞ்சல்கள், தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். இத்தொடர் புதிய நட்புறவுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

- போப்பு

(நிறைந்தது)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x