Published : 28 Nov 2015 12:44 PM
Last Updated : 28 Nov 2015 12:44 PM

வெறும் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுவது மருத்துவமல்ல - மருத்துவர் கு. சிவராமன்

மருத்துவர் சிவராமனை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. சித்த மருத்துவம், மறந்துபோன நம் மரபுகள், பாரம்பரிய உணவு வகைகள் எனப் பலவற்றுக்கும் புதிய முகவரி தந்தவர். எய்ட்ஸுக்குக் கூட்டு சிகிச்சை, ஒருங்கிணைந்த மருத்துவம், புற்றுநோய்க்குச் சித்த மருந்து என நம் மண்ணின் மருத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பணிகளைச் செய்துவருபவர். மற்றொருபுறம் மத்திய அரசின் 12-வது திட்டக் குழுவில் சித்த மருத்துவத்துக்கான ஆலோசகர், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன ஆலோசனைக் குழு உறுப்பினர், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி எதிகல் கமிட்டி உறுப்பினர் என மருத்துவரீதியிலும் இயங்கிவருகிறார். தன் வாழ்வில் கடந்துவந்த முக்கிய ஆளுமைகள், சம்பவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்:

மருத்துவக் கனவு

பொதுவாகவே பலரையும்போல ஆங்கில மருத்துவர் ஆவதே எனக்கும் கனவாக இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக பிளஸ் 2-வில் மாவட்ட அளவில் சிறப்புப் பயிற்சி அளித்தார்கள். அப்படிப் பயிற்சி எடுத்த 20 பேரில், நான்தான் முதல் மார்க் வாங்குவேன் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். எதிர்பார்ப்புகள் எல்லாமே நிஜமாவதில்லையே!

நடந்தது என்னவோ தலைகீழாக இருந்தது. என்னுடன் சிறப்புப் பயிற்சி பெற்ற 19 பேரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். மருத்துவப் படிப்புக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் உயிரியலில் மட்டும், எனக்கு மதிப்பெண் குறைந்துவிட்டது. மருத்துவம் படிக்கும் கனவில் 12-ம் வகுப்பில் கணிதத்தில் கவனம் செலுத்தாமலும், கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம்கூட வாங்காமலும் இருந்திருந்தேன். இதெல்லாம் சேர்ந்து கடுமையான மனஉளைச்சலுக்குத் தள்ளின.

உடைந்த கற்பனைகள்

அப்போது அப்பாவுடன் வேலை பார்த்தவர், மருத்துவப் படிப்பு கிடைக்காவிட்டால் என்ன, பாளையங்கோட்டையிலேயே சித்த மருத்துவக் கல்லூரியில் படிக்கலாமே என்று சுட்டிக்காட்டினார். அப்பாவின் நண்பருடைய தம்பி பேராசிரியர் கணபதி, சித்த மருத்துவம் படித்தால் அரசு பணி நிச்சயம் என்றார். அந்த நம்பிக்கையில் 1987-ம் ஆண்டில் சித்த மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன்.

அங்கே சேர்ந்த உடனேயே என்னுடைய கற்பனைகள் பல உடைந்தன. இது வழக்கமான மருத்துவம் இல்லை, வேறு மாதிரியான மருத்துவம் என்பது புரிய ஆரம்பித்தது. அப்போது 4-ம் ஆண்டு சித்த மருத்துவம் படித்துக்கொண்டிருந்த மூத்த மாணவர் மைக்கேல் ஜெயராஜ், சித்த மருத்துவம் குறித்த புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.

‘வெறுமனே பிரிஸ்கிரிப்ஷன் எழுதுவதல்ல இந்த மருத்துவம். இது தமிழின் உயர்வைச் சொல்லும் அரசியல் பின்புலம் கொண்டது, சமூகப் பார்வை சார்ந்தது. எல்லோரையும்போல மார்க் வாங்கிப் பயிற்சி பெற்று மருத்துவராவது மட்டும் போதாது. சித்த மருத்துவம் என்பது சக மனிதர்கள் மேல் காலம்தொட்டு வந்த அன்பின் வெளிப்பாடு. அதைப் புரிந்துகொள்ள நிறைய படிக்க வேண்டும்' என்று கூறிப் புரிய வைத்தார். தொழிற்கல்வி மீதான பெருமித உணர்வு அகன்று, சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்ற நிம்மதியுணர்வு அப்போது ஏற்பட்டது.

இன்னொரு ஆசிரியர்

தமிழின் மீது இயல்பாகவே ஆர்வம் கொண்டிருந்த நான், பழந்தமிழ் இலக்கியங்கள் முதற்கொண்டு பல விஷயங்களை அதற்குப் பிறகுதான் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்கப் பிரமிப்பு கூடிக்கொண்டே போனது. சித்த மருத்துவத்துக்குள் இத்தனை விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றனவா என்று ஆச்சரியமாக இருந்தது. சித்த மருத்துவம், ஓர் ஆய்வுச் சுரங்கம் என்பது புரிந்தது.

மூத்த மாணவராக இருந்தாலும், மைக்கேல் ஜெயராஜ் எனக்கு ஒரு ஆசிரியர்தான். என்னுடைய மூத்த மாணவர்கள் சக்கரவர்த்தி, கண்ணன், ஜெகநாதன் போன்றோரும் கல்லூரி காலத்தில் பல வகைகளில் என்னை நெறிப்படுத்தியிருக்கிறார்கள்.

பாளையங்கோட்டை சித்த மருத்துவப் படிப்பு, சித்த மருத்துவம் பற்றி மட்டுமல்லாமல் ஆன்மிகம், விவசாயம், சமூக அக்கறை என்ற பரந்த துறைக்குள் கால் பதித்த ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

எய்ட்ஸுக்குப் புதிய சிகிச்சை

தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் எய்ட்ஸ் எனும் தேய்வு நோய் மற்றும் காசநோய்க்கு நவீன அறிவியல் பார்வையுடன் சித்த மருத்துவத்தைக் கூட்டு சிகிச்சையாக வழங்கும் புது அணுகுமுறையை மருத்துவர் தெய்வநாயகம் கொண்டுவந்தார். விமர்சனங்களைத் தாண்டி அந்த முறை பலனளித்தது. நோயாளிகளின் வாழ்நாள் கூடியது.

எந்த ஒரு பிரச்சினைக்கு எந்த மருத்துவம் சிறப்பாகப் பலனளிக்குமோ, அதைக் கொடுப்பதே ஒருங்கிணைந்த சிகிச்சை. அலோபதியும் சித்தமும் இணைந்த மருத்துவம் இது. ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் பொருள் செலவும் நேரமும் குறையும். நோய் கட்டுப்பாட்டில் இருப்பதால், நோயாளிக்குக் கூடுதல் நம்பிக்கை கிடைக்கும்.

இலவச மருத்துவம்

பிறகு 2001-ல் ‘இந்திய நலவாழ்வு நல்லறம்' என்ற அமைப்பின் கீழ் மருத்துவர் தெய்வநாயகத்துடன் இணைந்து அலோபதி, சித்த மருத்துவம் ஒருங்கிணைந்த சிகிச்சையை அளிக்க ஆரம்பித்தோம். சென்னை ரெட் கிராஸ் சொசைட்டியில் செயல்பட்டுவந்த அந்த மையத்தில், நாள்பட்ட நோய்களுக்கு இலவசச் சிகிச்சையளித்தோம். ஒரு நாளைக்கு மட்டும் 150 - 200 நோயாளிகள் வருவார்கள். அந்தச் சிகிச்சை முறை தந்த பலன்களை, மிகப் பெரிய திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும்.

சிக்குன் குன்யா காய்ச்சல் 2006-ல் பரவலானது. அப்போது கால் வலி, மூட்டு வலிக்கு நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்து என அரசு சார்பில் அறிவிக்க முயற்சி எடுத்தோம். அது வெற்றி பெற்றது. அந்த வகையில் நவீன அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்ட முதல் மூலிகை மருந்து, நிலவேம்புக் குடிநீர்தான். அதன் பிறகு டெங்கு, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவற்றுக்கும் நிலவேம்புக் குடிநீர் நல்ல மருந்தாக இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புற்றுநோய்க்கு சித்த மருந்து

புற்றுநோய்க்கு 33 வகை சித்த மருந்துகள் உள்ளன. இது குறித்து நவீன மருத்துவ அடிப்படைகளிலும் தாவரவியல் மருத்துவ ரீதியிலும் இப்போது ஆராய்ச்சி நடத்தி வருகிறோம். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, அடிப்படை மருந்து ஆய்வியல் நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயின் தாக்கத்தை ஆறு சித்த மருந்துகள் எப்படிக் குறைக்கின்றன என்று ஆராய்ந்துவருகிறோம். அதில் இரண்டு, மூன்று சித்த மருந்துகள் நவீன அலோபதி மருந்துகளைப் போலப் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் வகையிலும் செயலாற்றுகின்றன.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை கீமோதெரபி சிகிச்சை குறைக்கும் அதேநேரம், நல்ல செல்களையும் அழிக்கிறது. சித்த மருந்துகள் வேகம் குறைந்தவைதான். ஆனால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, ரத்தத் தட்டுகள், வெள்ளையணுக்களை அதிகரிக்கின்றன.

மருத்துவர்கள் கைகோக்க வேண்டும்

பல வகைப் புற்றுநோய்களுக்கு ஒற்றை இலக்கு சிகிச்சை பலன்தராது. அந்த வகையில் நம்முடைய மூலிகைகள் பல்முனை இலக்குகளைத் தாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. கோடிகள் புழங்கும் புற்றுநோய் சிகிச்சையில் மிகப் பெரிய காப்புரிமைப் போர் நடந்துகொண்டிருக்கும் சூழலில், சித்த மருந்துகள் துணை மருந்துகளாகப் பயன்பட்டு உடல்நலத்தை மேம்படுத்தும் கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

மனித உடல்நலனைக் காப்பதில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பார்வை நமக்குத் தேவை. அனைத்து மருத்துவ முறைகளும் ஒருங்கிணைந்த ஓர் மருத்துவ முறை வர வேண்டும். ஒரு விவசாயி தன் பயிரைச் சிறப்பாக வளர்க்க, சூழலுக்கும் நேரத்துக்கும் உகந்த வகையில் பல்வேறு முறைகளை மாற்றி தேர்ந்தெடுப்பாரில்லையா? அதேபோல ஒருங்கிணைந்த பார்வையுடன் மருத்துவர்கள் பணியாற்றும் காலம் விரைவாக வர வேண்டும்.

(‘தி இந்து' 2015 தீபாவளி மலரில் இடம்பெற்றுள்ள மருத்துவர் கு. சிவராமனின் விரிவான நேர்காணலின் ஒரு பகுதி இது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x