Last Updated : 12 Nov, 2013 10:15 AM

 

Published : 12 Nov 2013 10:15 AM
Last Updated : 12 Nov 2013 10:15 AM

பிறவிக் குடல் நோய்க்கு ஸ்டெம் செல் மூலம் தீர்வு - அரசு மருத்துமனை மருத்துவர்கள் அசத்தல்

பிறவியிலேயே உருவாகும் 'ஹிர்ஸ்பரங்க்' எனும் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் ஸ்டெம் செல் சிகிச்சையால் குணப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள்.

'ஹிர்ஸ்பரங்க்' எனும் 'பிறவி வீக்கப் பெருங்குடல்' நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாகக் காணப்படும் ஒன்றாகும். குடல் சரியான முறையில் உணவை ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குக் கடத்தத் தேவையான நரம்புகள் சில இடங்களில் இல்லாமல் போவதே இந்நோய்க்குக் காரணம். இந்நோயைக் குணப்படுத்த இன்று வரை அறுவை சிகிச்சைதான் உதவி வருகிறது.ஆனால், அறுவை சிகிச்சையின்றி இதை குணப்படுத்த ஸ்டெம் செல் வழிமுறையால் முடியும் என்று தங்களின் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

சென்னை மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவத் துறை பேராசிரியர் கிருஷ்ணமோகன், எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்நாதன் மற்றும் ஜப்பானிய ஆய்வு நிறுவனமான 'நிசி இன் மறு உருவாக்க மருத்துவ மைய'த்தின் மருத்துவர் சாமுவேல்ஆபிரகாம் ஆகியோர் இணைந்து 4 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக 'நிசி இன் மறு உருவாக்க மருத்துவ மையத்தைச் சார்ந்த சாமுவேல் ஆபிரகாம் 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மனித உடலில் பாதிக்கப்படாத பகுதியில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து பிறகு அவற்றை மீண்டும் குடல் திசுக்களில் செலுத்தி இந்நோயைக் குணப்படுத்த முடியும். மேலை நாடுகளில் இந்த ஆய்வு விலங்குகளில் செய்யப்பட்ட போது ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.

ஸ்டெம் செல்களை பாலிமர் எனும் வேதிப்பொருளுடன் இணைத்து 'சிந்தெடிக்ஸ்கஃபோல்ட்' எனும் ஆதரவு இணைப்புகளை குடல் திசுக்களில் செலுத்துவோம். இந்த உத்தி உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் இதை விலங்குகளில் செலுத்தி ஆய்வு செய்ய மருத்துவ நெறிகள் குழுவிடம் அனுமதி வேண்டி எங்கள் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்துள்ளோம்.

இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு வரும்போது பிறவிக் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x