Last Updated : 31 Oct, 2015 01:44 PM

 

Published : 31 Oct 2015 01:44 PM
Last Updated : 31 Oct 2015 01:44 PM

பரிசோதனை ரகசியங்கள் 7: நீரிழிவை உறுதி செயயும் பரிசோதனை

சிலருக்கு நீரிழிவு நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாவிட்டாலும், அவர்களுடைய ரத்தசர்க்கரை அளவுகள் நீரிழிவு நோயின் எல்லைக்குள் இருக்கும். இப்படிச் சந்தேகத்துக்கு உள்ளாகும் நபர்களுக்கு, ‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் பரிசோதனை' (Oral Glucose Tolerance Test - சுருக்கமாக OGTT) பரிந்துரை செய்யப்படுகிறது.

இது எப்படிச் செய்யப்படுகிறது?

# இவர்கள், முதல் மூன்று நாட்களுக்கு வழக்கமான உணவைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# பரிசோதனைக்கு முந்தைய நாள் இரவில் உணவு சாப்பிட்ட பின்பு, பரிசோதனைக்குச் செல்லும்வரை எதையும் சாப்பிடக் கூடாது (ஃபாஸ்டிங்).

# 8-லிருந்து 12 மணி நேரம் கழித்து, மறுநாள் காலையில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.

# முதலில் வெறும் வயிற்றில், ரத்தச் சர்க்கரை பரிசோதிக்கப்படும்.

# இதைத் தொடர்ந்து, அவருக்கு 300 மி.லி. தண்ணீரில் 75 கிராம் சுத்தமான குளுக்கோஸ் மாவைக் கலந்து தருவார்கள். அதிகபட்சம் 5 நிமிடங்களுக்குள் அதைக் குடித்துவிட வேண்டும்.

# இதிலிருந்து சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தம் எடுத்து, சர்க்கரையைக் கணக்கிட வேண்டும்.

# அப்போது, ரத்தச் சர்க்கரை அளவுகள் முறையே வெறும் வயிற்றில் 80 முதல் 110 மி.கி./டெ.லி. வரை இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 111 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இல்லை.

# வெறும் வயிற்றில் 111 முதல் 125 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அது ‘இம்பயர்டு ஃபாஸ்டிங் குளுக்கோஸ்' (Impaired Fasting Glucose - IFG). அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்பு உள்ளது. அதாவது, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை- பிரீ டயாபடிஸ்.

# குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 141 முதல் 199 மி.கி./டெ.லி. வரை இருந்தால், ‘இம்பயர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ்' (Impaired Glucose Tolerance - IGT). இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைதான்.

# வெறும் வயிற்றில் 126 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு இருக்கிறது.

# கர்ப்பிணிகளுக்குக் குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு. இதற்கு மேல் இருந்தால், ‘கர்ப்பக் கால நீரிழிவு’ என்று அர்த்தம்.

ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதையும், இனிமேல் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்புள்ளதா என்பதையும், சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ளப் பயன்படும் ஒரு முக்கியமான பரிசோதனை இது.

இதில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது என்பது உறுதியானால், அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை பெற வேண்டும். அதேநேரம், நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் - அதாவது, IFG, IGT உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.

இது யாருக்குத் தேவை?

# நீரிழிவுக்கான அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# அறிகுறி எதுவும் தெரியாதவர்கள், 40 வயதில் ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொண்டால் போதும். இது பொதுவானவர்களுக்கானது.

கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், 25 வயதில் முதல்முறையாக இதைச் செய்துகொண்டு, அதில் நீரிழிவு இல்லை என்று தெரிந்தால், அதன்பின்பு வருடத்துக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும்.

# நீரிழிவு உள்ள குடும்பப் பாரம்பரியத்தில் பிறந்தவர்கள்.

# உடல் பருமன் உள்ளவர்கள்.

# உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்கள்.

# உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்.

# ரத்த மிகைக் கொழுப்பு உள்ளவர்கள்.

# முதல் பிரசவத்தில் பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்கள்.

முக்கியக் குறிப்பு:

1.இந்தப் பரிசோதனையில் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், அதற்குப் பிறகு உறுதி செய்யும் பரிசோதனை அவசியமில்லை.

2.நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (‘பிரீ டயாபடிஸ்’) உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும்.

(அடுத்த வாரம் நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிய உதவும் பரிசோதனை) - கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

சந்தேகங்களுக்கு விளக்கம்

சென்ற வாரம் நீரிழிவு நோய்க்கான ரத்தப் பரிசோதனைகள் குறித்துப் பார்த்தோம். அவற்றை எந்த இடைவெளியில், எத்தனை முறை செய்துகொள்வது என்பது பற்றி வாசகர்கள் பலர் சந்தேகங்களைக் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான விளக்கம்:

# ரேண்டம் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, சாப்பிட்டபின் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை - இந்த மூன்றும் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்று கணிப்பதற்கும், ஏற்கெனவே நீரிழிவு சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்தச் சர்க்கரை இயல்பான அளவில் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் செய்யப்படுகின்றன.

# இதுவரை நீரிழிவு இல்லாதவர்கள் 40 வயதுக்கு மேல் ஆன பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை மேற்சொன்னவற்றில் ஏதாவது ஒரு பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

# ஏற்கெனவே நீரிழிவு சிகிச்சை பெறுபவர்கள், நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார்கள் என்றால், இவற்றில் ஒன்றை 2-லிருந்து 4 வாரங்கள் இடைவெளி யில் மறுபடியும் செய்துகொள்ள வேண்டும்.

# ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், அது கட்டுப்படும்வரை வாரம் ஒருமுறை செய்துகொள்ள வேண்டும்.

அறுவை சிகிச்சை, மாரடைப்பு, பக்கவாதம், கண் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்சினை போன்ற நிலைமைகளில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரையை விரைவில் கட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இவர்களுக்குத் தினமும் பரிசோதிக்க வேண்டிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x