Last Updated : 20 Aug, 2016 12:02 PM

 

Published : 20 Aug 2016 12:02 PM
Last Updated : 20 Aug 2016 12:02 PM

தொழுநோய்: மாற்றத்தின் தொடக்கமாவோம்!

உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நம் நாடு என்னும் பெருமையோடு, இன்னொரு விஷயத்திலும் நாம்தான் உலகில் முன்னிலையில் இருக்கிறோம். ஆனால் அது மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய விஷயமல்ல, உலகிலுள்ள தொழுநோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதே அந்தத் தகவல்.

ஆங்கிலேய சட்டம்

வேறெந்த நோய்க்கும் இல்லாத அளவில் ஓர் அருவருப்பு, அவமதிப்பு, அவமானம், வெறுத்து விரட்டுதல் எனத் தொழுநோயாளிகளுக்கு மட்டும் காலம்காலமாகப் புறக்கணிப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அதேபோல, தொழுநோயாளிகளைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் பல சட்டங்களை ஆங்கிலேய அரசு 1898-ல் இயற்றியது. தொழுநோயாளிகளுக்கு எதிரான மிக மோசமான அத்தகைய சட்டங்கள் இன்றுவரை அப்படியேதான் உள்ளன.

ஒழிப்பா? ஒளிப்பா?

பாக்டீரியாவால் வரக்கூடிய மற்ற வியாதிகளைப் போன்ற ஒன்றுதான் தொழுநோயும். இந்த உண்மை எத்தனை மருத்துவர்களுக்குத் தெரியும்? எத்தனை மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவிகள் தொழுநோய் பற்றி படிக்கிறார்கள்?

2005-ம் ஆண்டே இந்தியாவிலிருந்து தொழுநோயை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று அரசு அறிவித்துவிட்டது. ஆனால் அது ஒழிப்பல்ல, ‘உண்மையை ஒளிப்பதுதான் நடந்துள்ளது' என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதை உறுதிப்படுத்துவது போல், ‘ஒவ்வோர் ஆண்டும் 1.25 லட்சம் பேர் புதிதாகத் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர்' என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை.

இந்த 1.25 லட்சம் பேர் நோய் குணமாக வேண்டி மருத்துவரிடம் வந்தவர்கள். விவரம் தெரியாமல், நோய் பற்றிய விவரம் அடுத்தவருக்குத் தெரியாமலிருக்க, தங்களை மறைத்துக்கொண்டு இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ, தெரியவில்லை. அவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தைப் போல எத்தனை மடங்கு இருக்கும் என்பது தெரியவில்லை.

கற்பிதங்கள்

பாவிகளுக்கு மட்டும் வருவது; செய்த பாவத்தின் சம்பளம் தொழுநோய்; காம உணர்ச்சி மிகுந்தவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்பதெல்லாம் இந்நோய் குறித்துச் சமூகத்தில் நிலவும் மிகவும் தவறான கற்பிதங்கள்.

மற்ற நோய்கள் எப்படி ஒருவருக்கு வருகிறதோ, அதேபோன்று இந்த நோயும் சத்தான உணவை உண்ணாததாலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழாததாலும்தான் வருகிறது.

காந்தியிடம் கற்போம்

ஒரு கணம் காந்தியின் வார்தா ஆசிரமத்துக்குத் திரும்பிச் செல்வோம். காந்தியுடன் 1932-ல் எரவாடா சிறையில் பர்ஜுரே சாஸ்திரி என்ற வேத விற்பன்னர் இருந்தார். அவருக்குத் தொழுநோய் வந்துவிட்டது. காந்தி அவருக்குச் சேவை செய்ய முயன்றார். ஆனால், ஆங்கில அரசு அவரைத் தடுத்துவிட்டது.

காந்திஜியின் சேவா கிராமத்தில் தங்கிக்கொள்ள 1939-ல் சாஸ்திரி அனுமதி வேண்டினார். தொழுநோய் தொற்றுநோயல்ல என்பது தெரிந்தாலும் மற்றவர்களின் திருப்திக்காக, பர்ஜுரே சாஸ்திரிக்காகத் தனிக் குடிசை கட்டி, அவரை சேவா கிராமத்திலேயே தங்க வைத்தார் காந்தி. முடிந்த போதெல்லாம் சாஸ்திரியின் புண்களைக் கழுவி மருந்திட்டார், ஆறுதலாகப் பேசினார், அவருக்கு வேண்டிய சேவைகளைச் செய்தார்.

ஆங்கில அரசு சொல்வதையும், சட்டம் இயற்றுவதையும் பின்பற்றி வந்த பெரும்பாலான மக்கள் முன்னிலையில் காந்தி தைரியமாகத் தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்தார். அவர் அவ்வாறு சேவை செய்ததற்கு என்ன காரணம்? தொழுநோய் ஒரு தொற்றுநோயல்ல; குணப்படுத்தக்கூடியதுதான் என்பதைச் சொல்வது ஒரு முக்கியக் காரணம்.

அனுமதிக்கலாமா?

தொழுநோயாளிகளைப் பற்றிய பொதுப் பார்வையை மாற்ற முனைந்த காந்தி புதிய இந்தியாவின் நிர்மாணத் திட்டத்தில் (1941) கூறியதாவது:

குஷ்டரோகி எனும் வார்த்தையே துர்நாற்றத்தைத் தருகிறது. மத்திய ஆப்பிரிக்காவுக்கு அடுத்தாற்போல இந்தியாவே தொழுநோயாளிகளின் மிகப் பெரிய இருப்பிடமாக இருக்கக்கூடும். இருப்பினும், மிக உயர்ந்தவர்கள் எப்படி நம்மில் ஒருவரோ, அப்படியே குஷ்டரோகிகளும் நம்மைச் சார்ந்தவர்களே. உயர்ந்த மனிதர்கள் மற்றவர்களின் கவனத்துக்கு ஏங்கி நிற்பவர்கள் அல்ல என்ற போதிலும், நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்கள். ஆனால் விசேஷமாகக் கவனிக்கப்பட வேண்டிய குஷ்டரோகிகளோ மனமறிந்து ஒதுக்கப்படுகிறார்கள். இதை இதயமற்ற செயல் என்றே குறிப்பிடத் தோன்றுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நமது நாடு சில லட்சம் நல்ல மக்களை ஏழைகளை, தொழுநோயாளிகள் என்று கூறி ஒதுக்கி வைக்கும் பாவத்தை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?”

புதிய உலகம் படைக்க…

கூடாது என்பதே நம் முடிவாக இருக்க வேண்டும். உலகத் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் நம் நாடு 60 சதவீதத்தினரைக் கொண்டிருப்பதை நீக்குவதற்காகச் சில உறுதிமொழிகளை நாம் ஏற்க வேண்டும்:

1. சமூகத்தில் எல்லோரும் எல்லா உரிமைகளையும் பெற்றிருப்பதைப் போலவே, தொழுநோயாளிகளும் அதே உரிமைகளைப் பெற்ற சகமனிதர்கள் என்பதை மனதார ஏற்றுக்கொள்கிறேன்.

2. தொழுநோய் ஒரு சாபமல்ல; அது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்பதை நான் உணர்ந்து, பிறருக்கும் உணர்த்துவேன்.

3. சொல், செயல், சிந்தனை ஆகிய எவற்றாலும் தொழுநோயாளிகளின் மனதைப் புண்படுத்த மாட்டேன்.

4. சமூகத்தில் எந்தத் தொழுநோயாளியும் எந்த விதத்திலும் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.

5. தொழுநோயாளிகளின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் என்னால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்.

6. தேமல், உணர்ச்சியற்ற வெள்ளைப் பகுதி போன்ற இந்த நோய்க்கான அறிகுறிகளை யாரிடமாவது கண்டால், அவர்களின் அச்சத்தைப் போக்கி, உரிய மருத்துவ உதவிகளைப் பெற வழிகாட்டுவேன்.

7. சின்னத்திரை, வெள்ளித்திரை, பத்திரிகைகள், இணைய ஊடகங்கள் ஆகியவை இந்த நோய் பற்றி பரப்பும் தவறான செய்திகளை எதிர்ப்பேன்.

8. தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு ஏற்படும் அவலங்களைச் சட்டரீதியாகத் தீர்க்கப் பாடுபடுபவர்களுடன் இணைந்து செயல்படுவேன்.

தொழுநோயைக் குணப்படுத்துவோம்; அந்த நோய் பற்றிய வீண் பயத்தை விரட்டுவோம்.

கட்டுரையாளர், சென்னை  ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர்

தொடர்புக்கு: vimurtananda@rkmm.org

சென்னையில் இன்று கருத்தரங்கம்

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், நாக்பூரிலுள்ள சக்ஷம் அமைப்பு, சென்னை மத்தியத் தோல் ஆராய்ச்சி மையம் (CLRI) ஆகியவை இணைந்து தொழுநோய் குறித்த தேசிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. அந்தக் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20, சனிக்கிழமை (இன்று) சென்னை அடையாறில் உள்ள மத்தியத் தோல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x