Last Updated : 21 Jan, 2017 10:52 AM

 

Published : 21 Jan 2017 10:52 AM
Last Updated : 21 Jan 2017 10:52 AM

உயிர் வளர்த்தேனே 19: வடிகஞ்சியின் மகிமை

ஊறவிட்டு நீர் வடித்த அரிசியை, கொதிக்கிற உலையில் போடுகிற காட்சியே கண்ணுக்கு அலாதி சுகம். ஆடிப் பதினெட்டு அன்றைக்கு நீர் தேவதையை வழிபட்டு ஆறு, குளங்களில் பூக்களைச் சொரிவதுபோல கொதிக்கிற நீரும் அடங்க வேண்டும், அரிசியையும் கொதி வெப்பம் தாக்கி விடக்கூடாது என்பதுபோல சடங்காகத் தூவுவார்கள்.

திகுதிகுவென எரியும் தீயின் நாவுகளை சற்றே தணிப்பார்கள். காதலன் காதலி சரசமாடுவது போல ‘சள’ ’சள’வென்று நீரும் அரிசியும் ஒன்றினுள் ஒன்றாகத் தம்மை இழைத்துக்கொள்ளும். ஊறின அரிசி, தன்னை வெப்பத்தில் நெகிழ்ந்து நீரை உள்வாங்கும். அரிசியின் வீரியத்தை நீர் தன்னில் ஏற்றுக்கொள்ளும்.

இந்த இயற்பியல், வேதியியல் மாற்றங்களுக்குப் பிறகு அரிசி பூவாக மலர்ந்து மணம் வீசும். வெந்த சோற்றைப் பதம் பார்ப்பதெல்லாம் வடிப்பதற்கு முன் நிகழ்த்தும் வெறும் சடங்குதான். அரிசியின் வெந்த மணமே “இதோ நான் தயார், வா என்னை ஏற்றுக்கொள்” என்று மென்னழைப்பு விடுக்கும். ‘உலை மூடி’, ‘கண் தட்டு’ என்று நம் சமையல் அறைகளில் உலவிய ஒரு பாத்திரம் இன்று முற்றாக குணம் இழந்துவிட்டது. வடித்தல் பண்பும் முற்றாக வழக்கொழிந்து போனது.

சோறு வடித்தலை இத்தனை விஸ்தாரமாகப் பேசுவதற்குக் காரணம், வடிகஞ்சியின் மேன்மையை உணர்வதற்காகவும் குக்கரில் விரைத்த சோற்றின் ஆபத்தை அறிவதற்காகவும்தான். முதலில் வடிகஞ்சியின் மகிமையைப் பார்ப்போம்.

‘பசுமைப் புரட்சி’ என்ற நிலத்தின் மீதான வன்புணர்ச்சிக்கு முன்னர், இங்கு விளைந்த அரிசியை வேக வைத்து வடிப்பார்கள். வடிக்கிற நீரை, சோற்றுக்குத் தரும் அதே மரியாதையுடன் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைப்பார்கள். வடிப்பது காலை நேரமாக இருந்தால், திட்டமிட்டே கட்டியாக வடிப்பார்கள். மாலை நேரமென்றால் நீர்க்க வடிப்பார்கள்.இரண்டுக்கும் பயன்பாடு மாறுபட்டிருப்பதே காரணம். கட்டியாக வடித்த கஞ்சி சற்று நேரத்தில் ஜெல்லாக உறைந்துவிடும்.

போலிகளின் உலா

உணவின் மூலப்பொருட்கள் அனைத்தும் ஆலைக்குச் சென்று சக்கையாக்கப்பட்டு, ரசாயனக் கலப்புடன்தான் விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் வெற்றுத்தன்மையை மறைக்கவே ஜிகுஜிகுப்பான பாக்கெட்டுகளில் பேக் செய்து, ‘100% நேச்சுரல்’, ‘ஆர்கானிக்’ என்றெல்லாம் கதிர் மணிகளைக் குளோசப்பில் படமெடுத்துப் போட்டு கவர்ச்சி காட்டுகிறார்கள். நாமும் ஏதோ மனச் சமாதானத்துடன் வாங்கிவந்து சமைத்து உண்டு, வயது பேதமில்லாமல் நோய்களின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்கிறோம்.

சவர்க்காரத்தின் வரவு

ஜெல்லாக திரண்ட வடி கஞ்சியைக் கலக்கி அதில் பருத்தித் துணியை முக்கிக் காயவைத்து இஸ்திரி போட்டால், துணி கத்தியைப் போன்று விரைத்து முடமுடப்பாக இருக்கும். அதே கஞ்சியை உடலுக்கும் தலைக்கும் தேய்த்து உலரவிட்டுக் குளித்தால் எண்ணெய் குளியலின் பலன்கள் கிடைக்கும். அந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு சோப்பு என்ற சவர்க்காரத்தின் பயன்பாடு வெகு அபூர்வம். அதன் மூலப்பொருளை வெளிப்படுத்தும் ‘சவுக்காரம்’ என்ற சொல்லை இன்றளவும் சிங்கப்பூர், மலேசிய, இந்தோனேசியத் தமிழர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். என்னுடைய பெண், குளியலறையில் இருந்துகொண்டு ‘மம்மீ பிரிங் மீ சவுக்காரம்’ என்று குரல் கொடுத்து ஆங்கிலத்தைப் பழிவாங்கும் அழகை ரசித்திருக்கிறேன்.

அந்தக் கால சோப்பு

உப்பு, புளிப்பு, காரம் மூன்றும் மண்ணில் ஒன்றிணைகிறபோது, அதன் அரிப்புத்தன்மை மிகுதியாக இருக்கும். தொடர்ந்து நீர்த் தேங்கி புளிப்பேறிய மண், நீரின் உப்புத் தன்மையை உள்ளே ஈர்க்க முடியாமல் அப்படியே வைத்திருக்கும் நிலையில், வெயில் காய்ந்தால் நிலம் சப்பாத்தி உப்புவதுபோல் உப்பிப் பொடித்துப் போகும்.

இந்த மண்ணில் உப்பு, புளிப்பு, காரம் மூன்றின் சுவையும் மிகுந்திருக்கும். இந்த நீரில் துணியை முக்கிக் காய வைப்பார்கள். பின்னர் அதே துணியை ஆவியில் வேக வைப்பார்கள். இந்த வேக்காட்டில் துணியில் படிந்த அழுக்கும் கறையும் துணியை விட்டு வெளியேறும் பக்குவத்துக்கு வந்து விடும். அதை ஆற்று அல்லது ஓடை நீரில் அடித்துத் துவைக்கிறபோது அழுக்கும் கரையும் முற்றாக நீங்கி பளீரென்று ஜொலிக்கும். வண்ணார் துணி மூட்டையைப் பிரிக்கிறபோது உவர் மண்ணின் வாசத்துடன் வெயிலின் வாசமும் சேர்ந்து கம கமவென்று மணக்கும்.

கூந்தலை பராமரிக்கும்

சரி, நம் கதைக்கு வருவோம். துணியில் படிந்த அழுக்கையும் கரையையும் நீக்கவல்ல ‘சவர்க்கார’த்தின் மென்தன்மையை மட்டுமல்லாமல், உடலுக்கு ஊட்டம் தரும் எண்ணெயின் தன்மையையும் பெற்றிருந்தது நம் சோறு வடித்த கஞ்சி. வடித்த கஞ்சியில் குளித்தால் மேனி பளபளவென்று மின்னும்.

இது புனைவெழுத்தல்ல. சிறுவயது நினைவுடன் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் கைக்குத்தல் அரிசி வடித்த கஞ்சியைத் தலைமுடிக்குத் தேய்த்து உலரவிட்டுக் குளித்த முடித்தபோது தலைமுடியில் விரைப்புத்தன்மை ஏறியதை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது. வடித்த கஞ்சியின் இந்த ‘ஜெல்’ தன்மைதான், நமது எலும்புக்கு வலிமையையும் நெகிழ்வையும் தரக்கூடியது.

உடனடி ஊட்டம்

மாலை நேரத்தில் சோறு வடிக்கிறபோது தாராளமாக இறங்கும்படி நீர் வைப்பார்கள். அவ்வாறு வடித்த கஞ்சியை மாலையில் விளையாடச் செல்லும் பிள்ளைகளுக்கு உப்புக் கலந்து கொடுப்பார்கள். இரவுச் சோற்றில் ஊற வைத்துக் காலையில் பழைய சோறு உண்பார்கள். நீருக்கு அடியில் கிடக்கும் பழைய சோற்றைத் துழாவிப் பிடித்து உருண்டை கட்டி, அதை மண் சட்டி சுண்ட குழம்பில் தொட்டுச் சுவைத்தால் ‘அடா…. அடா….’. நம் செல்கள் அத்தனையும் உயிர்த்துத் துளிர்ப்பதை குளுமையாக உணர முடியும்.

கால் கலையம் பழைய சோறு, அது நீஞ்சுவற்கு வசதியாக முக்கால் கலையம் நீச்சத்தண்ணி, அதன் மீது கொஞ்சி விளையாடும் நான்கைந்து சின்ன வெங்காயம் - இது போதும். ஒரு வெங்காயத்தை வாயிலிட்டு அரைத்த காரம் நீங்க நீராகாரத்தை அரை ஹார்ஸ் பவர் மோட்டார் வேகத்துக்கு உறிஞ்சிக் குடித்துவிட்டு, அரைக் குறுக்கம் நிலத்து மண்ணை உச்சிப் பொழுதுக்குள் புரட்டிப் போட்டு விடுவார் உடலில் உரம் ஏறிய ஒரு விவசாயி.

இன்று என்ன செய்கிறோம்?

இன்று சோற்றை வடித்துண்ணும் பழக்கத்தை மறந்தோம். முப்பத்தைந்து வயதைக் கடப்பதற்குள் ஆணும் பெண்ணும் முட்டி வலியால் அவதிப்படுகிறோம். அதிலும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் இருபது வயதைக் கடக்காத இளைஞர், இளைஞிகளுக்கும் இத்தொல்லை அதிகரித்துவருவது மனதை நடுங்கச் செய்கிறது.

சோற்றை இன்று நாம் மலர வேக விடுவதில்லை. குக்கரின் அழுத்தத்தில் அரிசியை மிரட்டிப் பணிய வைக்கிறோம். நீரும் அரிசியும் ஒரு புரிதலுக்கு வரும் முன்னர் ஐந்தே நிமிடத்தில் ‘உஸ்ஷ்….’ என்று விசிலடிக்கையில் கான்கிரீட் சுவர்களே அதிர்ந்து நடுங்குகின்றன. அடுப்பை அணைக்க அலறிப் பிடித்து ஓடும் அன்னையருக்குப் ‘பி.பி’ எகிறுகிறது.

அரிசியின் அனைத்துச் சத்துகளையும் சிதைத்து, விரைத்த அரிசியை சூயிங்கத்தை மெல்லுவதுபோல் மெல்லுகிறோம். ‘அரைவேனா’ என்று சவால் விடும் சோற்றை, வேறு வழியே இல்லாமல் குழம்புகளின் தயவால் துவட்டி தொண்டைக் குழிக்குள் தள்ளுகிறோம். அதுவும் ஒரு டிவி, நியூஸ் பேப்பர், அரட்டை போன்றவற்றின் துணையில்லாமல் தொண்டைக்குள் செல்ல மறுக்கிறது.

வெறும் சோற்றை மென்று பார்த்த நினைவிருக்கிறதா உங்களுக்கு…? அது எத்தனை மதுரமான சுவை …? சோறு தனிச் சுவை….. வடித்த கஞ்சி இன்னொரு சுவை….. சோறும் கஞ்சியும் செம்புலப் பெயல் நீரெனப் பிரிக்க முடியாத சூட்டில் கலந்திருந்தால் அதுவொரு தனிச் சுவை.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x