Last Updated : 17 Dec, 2016 01:04 PM

 

Published : 17 Dec 2016 01:04 PM
Last Updated : 17 Dec 2016 01:04 PM

உயிர் வளர்த்தேனே 14: கம்பு, சோளம், தினையில் கலக்கலாம்

கம்பு, சோளம், தினை ஆகியவை கதிர் முற்றிய பருவத்தில் பால் திரண்டிருக்கும். அவை மணியாகக் காய்வதற்கு முன் மேற்படி கதிர்களைப் பறித்து உள்ளங்கையில் வைத்து நிமிண்டினால் உமி கழன்று தானிய மணிகளில் பால் தெறிக்கும்.

முத்துபோல ஒளிரும் இந்தத் தானிய முத்துகளை வாயிலிட்டுச் சவைத்தால், பால் பொங்கி உதடுகளில் நுரைத்துவரும். தானியங்கள் பால் புரதமும், எரிமமும், நுண் சத்துகளும், உயிர்ச் சத்துகளும் நிரம்பியவை.

விவசாயக் குடும்பங்களில் தானியக் கதிர் அறுப்புக் காலத்துக்கு முன்பு நீள நீளமான தண்டுகளுடன் கதிர்களை அறுத்துவந்து, சுள்ளி கூட்டி நெருப்பு படர விடுவார்கள்.

கதிர்களின் சொங்கில் தொற்றிய நெருப்புப் பொறி அமாவாசை இருட்டில் மின்மினிப் பூச்சிகளைப் போலப் பறந்து மறையும். நெருப்பில் வாட்டிய கதிர்களை, முறத்தில் நிமிண்டி, இளம் கருகல் வாசத்துடன் மணிகளை உதிர்த்துக் கையால் அள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அதன் இயற்கையான சுவைக்கு எட்டாத தொலைவில் நிற்பவை, இன்றைய பொட்டலத் தயாரிப்புப் பண்டங்கள்.

மயிலிறகால் வருடும் சுவை

வாட்டியெடுத்த தானியக் கதிர் மணிகள் சுவையானவை மட்டுமல்ல சத்தானவையும்கூட. நாவின் சுவை மொட்டுகளின் மீது சவுக்கால் அடிப்பது போலச் சுளீர் சுளீர் எனத் தாக்குதல் தொடுக்கும் செயற்கை சுவை அனைத்தும், நாவின் இயல்புணர்வை மரத்துப் போகச் செய்யக்கூடியவை.

ஒரு பட்டாம்பூச்சி பூவில் அமர்வதைப் போன்று மென்மையான சுவையை மட்டுமே, தொடர்ந்து ஏற்றுவந்தோம் என்றால் நமது உடலில் நோய் உருவாவதற்கான வாய்ப்பே இல்லை. சுளீர் சுளீரென்று நாவைத் தாக்கும் சுவையை ஏற்றுப் பழகிவிட்டால், சுவையின் சுருதியை மேலும் மேலும் கூட்டிக்கொண்டே போக நேரிடும். சுவையின் வீரியத்தைக் கூட்டக் கூட்ட, ஒரு கட்டத்தில் நமது சுவையுணர்வு எந்த அளவுக்கும் நிறைவடையாமல் போய்விடும். அந்த நிலையை அடைவதற்கு முன்னர், உடல் அனைத்து விதமான நோய்களின் களமாக மாறிவிட்டிருக்கும்.

சூரிய மணிகள்

முற்றிய தானிய மணிகளில் திரண்ட பால் வெயிலில் காயக் காயப் பாறைபோல உறைந்து விடும். நம்முடைய சிறுதானியப் பயிர்கள் குறைவான நீரை உண்டு வளர்பவை. தானிய மணிகள் வெயிலைச் செரித்து விளைபவை. எனவே, தானிய மணிகள் ஒவ்வொன்றும் `சூரியக் குஞ்சுகள்’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆற்றலைத் தம்முள் திணித்து வைத்திருப்பவை.

காய்வதற்கு முன் இளம் இனிப்பு, துவர்ப்பு, மென் உப்பு எனப் பல்சுவைகளும் அடங்கிய பாலாக இருக்கும் தானிய மணிகள், காய்ந்த பிறகு வெயிலில் தூரத்துக் குயிலின் பாடலோசை போன்று, இதமான கசப்புச் சுவையைத் தம்மில் ஏற்றி வைத்திருக்கும்.

உடனடி ஊட்டம்

நமது பாரம்பரியத் தானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், தினை போன்றவற்றை நீரில் பத்து மணி நேரம் ஊறவைத்து, இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு முளை கட்ட வைத்தால், அவை உயிர் பெறுகையில் மீண்டும் பால் கட்டத் தொடங்கும். இந்த நிலையில் ஆட்டிப் பால் எடுத்து, உடன் சர்க்கரைப் பாகும் நெய்யும் சேர்த்து அல்வா போலக் கிண்டி இனிப்பு செய்யலாம்.

இந்த இனிப்பில் மாவின் பிசுபிசுப்புத் தன்மை இருக்காது என்பதால், ஓரிரு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிட இசைவாக இருக்காது. தானியப் பண்டத்தைச் சமைத்தவுடனேயே சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. ஆனால், இந்த இனிப்பு உடலுக்கு மிகுந்த ஊட்டத்தை அளிக்கும்.

நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு மீண்டவர்கள் உடனடியாக ஊட்டம் பெற இத்தகைய இனிப்பைக் கொடுப்பது விவசாயக் குடும்பங்களில் வழக்கம்.

திணற வேண்டாம்

தானியங்கள் என்றதும் கூழ், களி அதிகபட்சம் தோசைக்கு மேலாக வேறு புதிய பதார்த்தங்கள் எதையும் நாம் முயற்சித்துப் பார்ப்பதில்லை. சிறுதானியம் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசப்படுவதைக் கேட்டு, சூப்பர் மார்க்கெட் அடுக்கில் பாக்கெட்டைப் பார்த்ததும் ஆர்வமாக வாங்கி வந்துவிடுகிறார்கள். ஆனால் என்ன செய்வதென்று தெரியாமலோ அல்லது `எதற்குச் சோதனை முயற்சி?’ என்று சோம்பியோ வண்டு பிடிக்க விட்டு விடுகிறார்கள். இது சிறுதானியங்களுக்கு இழைக்கப்படுகிற அவமானம்.

விதவிதமான தின்பண்டங்கள்

கம்பு, சோளம் ஆகியவற்றைத் தனித்தனியாகவோ அல்லது சம அளவில் கலந்தோ அரை மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்துவிட்டு, நீர் முற்றிலும் உலரும் வண்ணம் ஃபேனுக்குக் கீழ் துணியில் ஆற விட்டு மிக்ஸியில் போட்டு உடைத்துக்கொள்ள வேண்டும். ரவைப் பதத்துக்கு உடைத்த தானியத்தைக் கஞ்சியாகக் காய்ச்சலாம். அன்றலர்ந்த மலர் போன்ற இந்தக் கஞ்சி, இட்லி தோசையைப் போல மந்தத் தன்மையை ஏற்படுத்தாமல் வயிற்றில் இதமாக இறங்கும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் துவையலோ, முட்டைப் பொடிமாஸோ பொருத்தமாக இருக்கும்.

அல்லது இதே தானிய ரவையை லேசாக எண்ணெயோ, நெய்யோ விட்டு வறுத்து உப்புமாவாகவும் கிளறலாம். கம்பு, சோளம் தவிர்த்துக் குதிரைவாலி, தினை, சாமை, வரகு ஆகிய சிறு தானியங்களை நேரடியாகக் கஞ்சியாகக் காய்ச்சலாம் அல்லது உப்புமா கிளறலாம். பாசிப் பருப்பு போட்டு அரிசிக்குப் பதிலாகச் சிறுதானியப் பொங்கல் செய்யலாம்.

வயிற்றுக்கு இதம்

சமையலில் மரபான செய்முறைக்குச் சற்று மாறுபட்டு யோசித்தால் போதும். படைப்புத் திறன் மிகுந்த விதவிதமான பதார்த்தங்களை நம்மால் தயாரிக்க முடியும்.

தினையை ஒன்றுக்கு நாலு பங்கு நீர் விட்டுக் குழைய வேகவைத்து, தேங்காய்ப் பூவைத் தூவி, ஏலக்காயை நுணுக்கிப் போட்டு, வெல்லம் தட்டிப் போட்டு ஒரு கிண்டு கிண்டி இறக்கினால் குடிக்கக் குடிக்கத் திகட்டாத பாயசம் தயார். இந்தப் பாயசத்தை ஒரு நேர உணவாக எடுக்கப் பழகிக்கொண்டால் வயிறு தொடர்பான பல நீண்ட கால உபாதைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

அரிசி மாவுக்குப் பதிலாகத் தினைமாவில் கொழுக்கட்டை செய்து பிள்ளைகளுக்கு சுவை காட்டினால் போதும். வாரந்தோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடச் சொல்வார்கள்.

பனியாகக் கரையும்

விதவிதமாகச் சுவைக்க விரும்பும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் கையில் கவர்ச்சியும் சுவையும் கொண்ட ஆரோக்கியமான பண்டங்களைத் தராமல், ஆபத்து நிறைந்த வணிக நொறுவைப் பாக்கெட்டுகளை அவர்களிடமிருந்து பறிக்க முடியாது.

ஆறில் ஒரு பங்கு உளுந்தும் மீதி ஐந்து பங்கு தினையும் போட்டு, சிறிய குடும்பம் என்றால் மிக்ஸியிலேயே அரைத்து, அரை மணி நேரம் புளிக்கச் செய்து தோசை சுட்டு பாருங்கள். நெய் ஊற்றாமலே இளம் பொன்னிறத்தில் மொறுமொறுவென்று உருப்பெறும் தினை தோசை, நம் குழந்தைகள் நாவில் பனியாகக் கரைந்து உருகும்.

மேலும் சில சுவை மிகுந்த தானியப் பலகாரங்களை எளிய முறையில் செய்வது பற்றி அடுத்த வாரமும் பார்க்கலாம்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x