Last Updated : 01 Oct, 2016 12:20 PM

 

Published : 01 Oct 2016 12:20 PM
Last Updated : 01 Oct 2016 12:20 PM

உயிர் வளர்த்தேனே 03: டி.எம்.டி. கம்பிகளாக எலும்புகள் உறுதிபெற...

தேங்காய் என்றதும் அச்சத்தில் தென்னை மர உயரத்துக்கே எகிறிக் குதிப்பவர்கள் உண்டு. தேங்காய் என்றாலே ‘கொலஸ்ட்ரால்’, ‘ஷூகர்’ என்று நம் காலத்தில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டிருக்கிறது. உணவகங்களில் இட்லியையும், சாம்பாரையும் சிமெண்டுக் கலவை போலக் கரைத்து, உள்ளே தள்ளுகிற பலரும் தேங்காய் சட்னியை மட்டும் அருவருப்புடன் புறந்தள்ளிவிடுகிறார்கள்.

ஆரோக்கியமான உடலைக் கொண்ட குழந்தைகளுக்குத் தேங்காயைக் கொடுத்துப் பாருங்கள். விரும்பி உண்பார்கள். காரணம், அவர்களது செரிமான மண்டலத்தில் கழிவுத் தேக்கம் ஏதும் இல்லை. அதனால் தேங்காயின் பால் மீது, அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அது எளிதில் செரிமானமும் ஆகிவிடும்.

நமது உணவுப் பாரம்பரியத்தில் தேங்காய் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தது. புட்டு - தேங்காய்ப்பூ, இடியாப்பம் - தேங்காய்ப் பால், ஆப்பம் - தேங்காய்ப் பால், சொதசொதவென்று தேங்காயை அரைத்துவிட்டுச் சொதி, அவியல், தேங்குழல் முறுக்கு, தேங்காய் பால்திரட்டு, தொதல் போன்ற எத்தனையோ பண்டங்கள் தேங்காயை அடிப்படையாகக் கொண்டு நமது பாரம்பரியத்தில் இருந்துவந்துள்ளன.

இவை அத்தனையும் மெதுமெதுவாக வழக்கொழிந்துவருகின்றன. காரணம் தேங்காயில் கொலஸ்ட்ரால், பி.பி., சுகர் என்று திட்டமிட்டுக் கிளப்பப்பட்ட வதந்‘தீ’தான்.

தேவையற்ற மிரட்சி

நமது வயிற்றில் புளிப்புத் தேக்கம் மிகுந்திருந்தால் தேங்காயைச் செரிமானம் செய்வது கடினம்தான். இப்போது நாம் செய்ய வேண்டியது தேங்காயைத் தவிர்ப்பது அல்ல. மாறாகப் புளிப்புத் தன்மையுள்ள மாவுப்பண்டங்களையும், புளி சேர்த்த குழம்பு வகைகளையும், மிகை மசாலாக்களையும் தவிர்க்க வேண்டும்.

உடலில் தேக்கமுற்ற அமிலத் தன்மையை நீக்குவதற்கான முறைகளைக் கையாள வேண்டும். தேங்கிய அமிலம்தான் நஞ்சு நீராகவும், நச்சு வாயுவாகவும் மாறுகிறது. இவைதான் அல்சருக்குக் காரணம் என்ற உண்மையை நாம் உணர்வதே இல்லை. எனவே, அமிலத்தன்மையுள்ள உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, உடலுக்கு ஊக்கமளிக்கும் தேங்காயைப் பார்த்ததும் குடையைக் கண்ட காளைமாட்டைப் போல் மிரள்வது தவறு.

தமிழகத்தின் நெல்லை, குமரி மாவட்டங்களில் தேங்காய் குறித்த அனைத்து மிரட்டல்களையும் தாண்டி, அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகமாகவே நீடித்துவருகிறது. அதேபோல் ஒரு மலையாளிக்கு உணவில் தேங்காய் இல்லாத நாள் என்றால், அது உணவற்ற நாள் என்று பொருள். ஆனால் நம்மைக் காட்டிலும் அவர்களிடையே மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களின் விகிதம் குறைவு.

தேங்காய் நமது மண்ணில் எங்கும் விளைகிற பொருள். நம் மண்ணில் விளைகிற பொருள், நமது பாரம்பரியப் பயன்பாட்டில் நீடித்த ஒரு உணவுப் பொருள் நிச்சயமாக நமக்குத் தீங்கைத் தருவதில்லை. கல்யாணம், காதுகுத்து, பூப்பு நன்னீராட்டு, கோயில் பூசை, இறுதிச் சடங்கு என அனைத்திலும் தவறாமல் இடம்பெறும் பொருள் உணவாகும்போது, எப்படி நம் உடலுக்குத் தீங்காக மாறும்?

தேங்காயால் உயிர் வாழ்பவர்கள்

தமிழகத்தில் இயற்கை உணவு முறையையும், இயற்கை சிகிச்சை முறையையும் பரவலாக்கிய நெல்லை சிவசைலத்தைச் சேர்த்த கு.இராம கிருஷ்ணன் ‘தேங்காய் பழச் சாமியார்’ என்றே அழைக்கப்பட்டார். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், தன் வாழ்நாள் முழுதும் தேங்காயையும் வாழைப் பழத்தையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தார். இன்றைக்கும் அதைப் போலப் பலர் உண்டு.

சென்னிமலையைச் சேர்ந்த தங்கப் பாண்டி என்றொரு இளைஞர், கட்டிடத் தொழிலாளி. இவரது உணவில் நாள்தோறும் ஒரு தேங்காய் உண்டு. இதுபோக ஊறவைத்த வேர்க்கடலை, வெல்லம், ஒருசில பழங்கள் போன்றவைதான் இவரது உணவு. ஓராண்டுக்கும் மேலாக இதைத்தான் பின்பற்றிவருகிறார். நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்கவும், கடினமாக உழைக்கவும் இந்த உணவு முறை பொருத்தமாக இருப்பதாகக் கூறுகிறார். கொழுப்பு நிறைந்ததாகக் கூறப்படும் தேங்காயையும் வேர்க்கடலையும் தவறாது உண்டுவரும், அவரது உடல் மிகவும் திண்மையாக இருக்கிறது.

தேங்காய்ப் பழச் சாமியார் நமக்கு இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தையவர். இயற்கைத் தத்துவத்தை முன்மொழிந்த அவர், மேம்பட்ட வாழ்க்கை நெறிமுறைக்காக அதைப் பின்பற்றிவந்தார். நமக்கு அது சாத்தியமில்லை என்று வைத்துக்கொண்டாலும்கூட, சென்னிமலை தங்கப்பாண்டி நம் காலத்திலேயே கண்ணெதிர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இயல்பான சமூக வாழ்க்கையை மேற்கொண்டுவருகிறார்.

செரிமானம் சீரடையும்

மீண்டும் மீண்டும் தேங்காயை வலியுறுத்திக் கூறுவதற்குக் காரணம், நமது உணவில் இருந்து தேங்காயைக் கொஞ்சங்கொஞ்சமாக விலக்கி வைத்துவிட்டு நிறைய பேர் சோணங்கிகளாக மாறிக்கொண்டிருக்கிறோமே என்கிற ஆதங்கம்தான். இளந்தலைமுறையைச் சேர்ந்த ஆறேழு வயதுப் பையன் தனக்குக் கால் எலும்பு வலிக்கிறது என்கிறான். ஒரு சின்னஞ்சிறுவன் எலும்பைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு, வலியின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.

தேங்காயைச் சேர்த்தால் தனக்கு ஒத்துக்கொள்வது இல்லை, புளித்த ஏப்பம் வருகிறது என்பவர்கள் ஓரிரு நாட்கள் முழு விரதம் இருந்து வயிற்றை ‘ஸ்வச் பாடி’ஆக மாற்றி, செரிமான மண்டலத்தை வலுப்படுத்திக்கொண்டு, மறுநாள் தேங்காய்ப் பால் குடித்தால் எலும்புகளில் வலு கூடுவதை உணர முடியும். தேங்காய்ப்பால் எலும்புகளுக்கு வலு சேர்ப்பதுடன், அதிலுள்ள எண்ணெய்த் தன்மை பெருங்குடலின் வறட்சியை நீக்கி, நீண்ட நாள் மலச்சிக்கலையும் முடிவுக்குக் கொண்டுவரும். மலச்சிக்கலின் அடுத்த கட்டமான மூலநோய் வராமல் தடுக்கும்.

தேங்காய்ப் பாலின் பயன்பாடுகள் மிக நீண்டவை, அடுத்த முறை அவற்றைப் பார்ப்போம்.

தேங்காய்ப் பால் தயாரிப்பு முறை

நடுத்தர அளவுள்ள அதிகம் முற்றாத புதிய தேங்காயை எடுத்துக்கொள்ளவும். உடைத்து மொத்தக் காயையும் சன்னமான நீளக் கீற்றுகளாகக் கீறிக்கொள்ளவும். கீற்றுகளை மிக்ஸி ஜாரில் இட்டுத் தேங்காய்த் தண்ணீரையும் உடன் விட்டு, சுமார் நாற்பது கிராம் பனைவெல்லம், மூன்று ஏலக்காய் சேர்த்து 100 மில்லி நீர் விட்டுச் சுதையாக அரைக்கவும். இந்தக் கட்டத்தில் மேலும் 100 மில்லி நீர் விட்டு, இரண்டு சுற்று ஓடவிட்டு வடிகட்டிப் பால் எடுக்கவும். மீண்டும் இரண்டு முறை நூறு, நூறு மில்லியாக நீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி எடுத்தால் பால் தயார்.

விரும்பினால் மேற்கொண்டு தேவையான அளவு நீர் சேர்த்து நபர் ஒன்றுக்கு 150 மில்லி அளவில் நான்கு பேர் இந்தப் பாலைப் பருகலாம். சாக்லேட் பானத்தைவிட சுவையுடைய இந்தப் பால், குழந்தைகளுக்கும் பிடித்துப்போகும். இதைச் சூடான காபி, டீ அருந்துவது போல ஒவ்வொரு மடக்காகவே விழுங்க வேண்டும். சுமார் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக நிதானித்துக் குடித்தால், வயிறும் உடலும் தன்னியல்பாக ஏற்றுக்கொள்ளும்.

(அடுத்த வாரம்: வீட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி முகாம்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com )

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x