Published : 14 Feb 2015 01:42 PM
Last Updated : 14 Feb 2015 01:42 PM

ஆட்டிசம்: மாற்று சிகிச்சை

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விதிகள்:

உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்:

உங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் அவமானகரமான விஷயம் எதுவும் இல்லை. எனவே, இந்த உண்மையை மறைக்க வேண்டியதில்லை. உறவினர்களிடமும் நண்பர்கள் வட்டத்திலும் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லிவிட்டால், தேவையற்ற தயக்கங்களைக் களைய முடியும்.

நம் குழந்தையை மற்ற சாதாரணக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு மனம் சோர்வுறவும் தேவையில்லை. நம் குழந்தை எதையெல்லாம் செய்யவில்லை என்று யோசித்து சோர்வுறாமல், குழந்தையின் சின்னச் சின்ன செயல்களையும் வெற்றியையும்கூட கொண்டாடப் பழகுங்கள்.

மனந்தளராமல் செயல்படுங்கள்:

ஆட்டிச பாதிப்பு என்பது வரையறுக்கப்பட முடியாதது. எனவே, எந்தக் கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே, மனதைத் தளர விடாமல் தொடர்ந்து கற்க அவர்களை ஊக்குவியுங்கள்.

பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்குத் தொடர்ந்து அளியுங்கள். இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துங்கள். அக்குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.

குழந்தைக்கு ஆட்டிசம் என்ற விஷயத்தைக் கேட்ட உடனேயே உங்கள் மனதை பயம் கவ்வக்கூடும். இந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? நண்பர்கள் இருப்பார்களா? திருமணமாகுமா? முதலில் பேச முடியுமா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பும்.

உங்கள் குழந்தையைப் பற்றிய கனவுகள் நொறுங்கும். நொடியில் `ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்ற கதறலாய் உங்களிடமிருந்து வெளிப்படலாம்.

இப்படியெல்லாம் குமுறுவதில் தவறேயில்லை. ஆனால், அதற்கு ஒரு கால வரையறை வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ஆற்றலையெல்லாம் அழுகையில் வீணடிக்காது, விரைவில் உங்கள் குழந்தையை வாழ்வதற்குத் தயார் செய்ய ஆரம்பியுங்கள்.

ஆயுர்வேத அணுகுமுறை

ஆயுர்வேதம் ஒரு மனிதனுக்கு வரும் நோய்களை ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம், ஆத்யாத்மிகம் என்று பிரிக்கிறது. முக்குற்றங்களாகிய வாத, பித்த கபங்கள் உணவாலும், வாழ்க்கை முறையாலும் தன்னிலையில் இருந்து தவறி நோய்களை உண்டாக்கினாலும் மேற்கூறிய பிரிவுகள் இந்நோய்க்கு பொருந்தி வருகின்றன.

தாய் தந்தையின் பீஜ தோஷம் (மரபணு நிலை கோளாறுகள்) காரணமாகவும் இது ஏற்படும். பஞ்சபூத சேர்க்கையின் ஏற்றத்தாழ்வுகளில் வரும் குறைபாடுகளின் காரணமாகவும் இந்நோய் ஏற்படும் என்று கருத்து உண்டு. பெண் கருவுற்று இருக்கும்போது நான்காவது மாதத்தில் இரண்டு இதயம் உடையவளாக கருதப்படுகிறாள்.

அந்த நான்காவது மாதத்தில் மனக் கிலேசமோ, நோயோ, உணவில் ஏற்றத்தாழ்வோ ஏற்பட்டால் இந்நோய் வரலாம். எட்டாவது மாதத்தில் `ஓஜஸ்’ எனும் சக்தி நிலை தன்னிடத்தில் இருந்து நகர்ந்து நிலைபெறாமல் போவதால், இந்நிலை வரலாம் என்று கருத வாய்ப்பு இருக்கிறது.

தலைக்கு பலா அஸ்வகந்தா லாக்ஷாதி தைலம், நீர் பிரம்மித் தைலம், வல்லாரை எண்ணெய் போன்றவையும், உள்ளுக்கு வெண்பூசணி நெய், வெண்தாமரை நெய், வெள்ளி பஸ்பம், தங்க பஸ்பம், ஸாரஸ்வாத நெய், கல்யாணக நெய், உடலுக்கு பலா அஸ்வகந்தா லாக்ஷாதி தைலம் (குறுந்தொட்டி, அமுக்குரா, கொம்பரக்கு சேர்த்து காய்ச்சப்பட்ட தைலம்), க்ஷீரபலா தைலம் (குறுந்தொட்டி மற்றும் பால் சேர்த்து காய்ச்சப்பட்ட தைலம்), தான்வந்தர தைலம் போன்றவற்றைத் தேய்த்து குளிப்பாட்டுதல் போன்றவை பலன் அளிக்கின்றன.

வாணி கிருதம் என்று சரஸ்வதியின் பெயருடைய மஞ்சள் கரிசாலை, வல்லாரை, துளசி, ஆடாதோடை, மாதுளம்பழம், பால், நெய் போன்றவற்றால் காய்ச்சப்பட்ட கிருதம் மிக்க பலன் உள்ளதாக அனுபவத்தில் தெரியவந்துள்ளது.

இது அல்லாமல் நீர்பிரம்மி, வல்லாரை, அமுக்குரா, சங்குபுஷ்பம் வேர், வசம்பு, வாலுளுவை, ஜடாமாஞ்சில், பிரம்மிச் சாறு, பவளப் பஸ்பம் போன்றவை பலன் தருவதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

இந்த நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும் மேற்கண்டவை ஆசுவாசத்தை தரும் என்று சொல்ல முடியும். சம்ஸ் சக்கர சஞ்சீவி சூரணம், வெண்பூசணி சாறு, அதிமதுரம், சாந்த சந்த்ரோதய மாத்திரை, கொட்டம், சதாவரி, நிலப்பனைகிழங்கு, உரை மருந்து, பஞ்சகவ்ய கிருதம், குமரித் தைலம், வல்லாரை லேகியம், பவள பஸ்பம், வெள்ளி பஸ்பம் போன்றவை அனுபவத்தில் பலனை தந்துள்ளன.

தலையில் சில எண்ணெய்களை பஞ்சில் துவைத்து வைப்பார்கள். இதற்கு பிசு சிகிச்சை என்று பெயர். தலைக்கு தாரை வைக்கிற சிகிச்சை, மோரினால் செய்கிற தாரை, இளநீரினால் செய்கிற தாரை, எண்ணெயால் செய்யும் தாரை, எண்ணெய் வஸ்தி போன்றவையும் பயன் தரும்.

மேற்கூறிய சிகிச்சை முறைகள், பொதுத் தன்மையானவை. வாத, பித்த, கபங்களின் ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப மாறும் தன்மை உடையவை.

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து,

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x