Published : 25 Mar 2014 01:37 PM
Last Updated : 25 Mar 2014 01:37 PM

ஆசனங்களின் பலன்: தாடாசனம் (மலை போன்ற நிலை)

செய்முறை

* நேராக நில்லுங்கள். நேராகப் பாருங்கள்.

* கைகள் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி இருக்கட்டும்

* இரு கால்களும் உடல் எடையைச் சமமாகத் தாங்கியிருக்க வேண்டும்.

* முழங்கால் சிப்பு மேலே நோக்கித் தூக்கிய நிலையில் இருக்க வேண்டும்.

* தொடைகளும் பின்புறத் தசைகளும் இறுகிய நிலையில் இருக்க வேண்டும்.

* மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி கைகளை மேலே தூக்குங்கள்.

* மேலே செல்லும் கைகள் நேராகவும் விண்ணென்றும் இருக்க வேண்டும்.

* கால்களின் நிலை மாறக் கூடாது.

* தோள்களுக்கு நேரே கைகள் வந்ததும் முழங்கைகளை மடக்கிக் கைகளைக் கூப்பவும்.

* கூப்பிய கைகளின் அடிப்புறம் நேராக, பூமிக்கு இணையாக இருக்க வேண்டும்.

* மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.

* மூச்சை மெல்ல இழுத்தபடி மெதுவாகக் கையைத் தலைக்கு மேல் உயர்த்துங்கள்

* உள்ளங்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி இருக்க வேண்டும்.

* கைகளை முடிந்தவரை மேல் நோக்கி இழுத்தபடி குதிகால்களை மேலே தூக்குங்கள்.

* தலையை மேல் நோக்கியபடி உயர்த்துங்கள்

வெளியேறும் விதம்

* குதிகாலைக் கீழே இறக்குங்கள்.

* மூச்சை மெதுவாக வெளியேற்றியபடி கைகளைத் தளர்த்துங்கள்.

* கைகளைக் கீழே தொங்கப் போடலாம் அல்லது கூப்பிய நிலையில் மார்பை ஒட்டி வைக்கலாம்.

* மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தபடி கைகளையும் குதிகாலையும் தூக்கவும்.

* பிறகு பழைய நிலைக்கு வரவும்.

* நான்கைந்து முறை இதைச் செய்யலாம்.

* விரல்களைக் கோத்தபடியும் கைகளை மேலே தூக்கலாம்.

பலன்கள்

* நின்ற நிலையில் செய்யும் ஆசனங்களுக்கெல்லாம் இது அடிப்படையானது.

* இது உங்கள் உடலின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. நிமிர்ந்த தோற்றத்தைப் பெற உதவுகிறது.

* உடலின் ஸ்திரத்தன்மையைக் கூட்ட உதவும்.

* பதற்றம் தணிந்து மனஅமைதி பெற உதவும்.

* உடலின் எல்லாத் தசைகளும் புத்துணர்ச்சி பெறும்.

* தொடர்ந்து செய்துவந்தால் முதுகு வலி குறையும்.

* தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறையும்.

* கணுக்கால்கள், தொடைகள், அடி வயிறு, முதுகு வலுப்பெறும்.

* நின்று செய்யும் ஆசனங்களைச் செய்ய இந்த ஆசனப் பயிற்சி உதவும்.

எச்சரிக்கை

* தோள்பட்டையில் காயமோ, நாள்பட்ட வலியோ இருந்தால் இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

* தலைவலி, தலைசுற்றல், தூக்கமின்மை, குறைந்த ரத்த அழுத்தம் முதலிய உடல் உபாதைகள் இருப்பவர்கள் இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x