Published : 25 Jul 2015 02:58 PM
Last Updated : 25 Jul 2015 02:58 PM

அற்புத ஆயுர்வேத மருந்து

(திரிபலா மருந்துக் கலவை பற்றி கடந்த வாரத் தொடர்ச்சி)

தான்றிக்காய்

தான்றிக்காயை, Terminalia bellarica என்று குறிப்பிடுவோம். இதைக் கர்ஷம், அக்ஷம் என்று குறிப்பிடுவார்கள். இது மஹாவிருக்ஷம் ஆகும். எல்லா இருமலுக்கும், சளிக்கும் இதை முகதாரணம் செய்வதற்குச் சிறந்தது. கபப் பித்தத்தை இது தணிக்கும். சிறிது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கண்ணுக்குச் சிறந்தது. இதிலிருந்து எடுக்கும் எண்ணெய்க் கூந்தல் வளர்வதற்கு உதவுகிறது. கண்ட ரோகங்களை மாற்றுவது, தொண்டை கரகரப்புக்குச் சிறந்தது. வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட வாதத்தைத் தணிக்கும்.

தான்றி மரம் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டது. 120 அடி வரைகூட வளரும். தண்டின் அடிப் பகுதியின் சுற்றளவு 10 அடிவரை இருக்கக்கூடும். இதன் இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குறிப்பாகக் கறவை மாடுகளின் பால் பெருக்கத்துக்கு, இது சிறந்த தீவனம்.

வட மொழியில் தான்றியை ‘விபீதகி’ என்பார்கள். தினந்தோறும் தான்றி உண்டால், நோய் நீங்கும் என்பது இதன் அர்த்தம். இதைக் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, ரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.

தான்றிப் பொடி 3 கிராமுடன் சமஅளவு சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிடப் பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல் தீர்ந்து தெளிவுறும். இதன் காயை நீர்விட்டு இழைத்துப் புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.

தான்றிக்காயின் தோலை வறுத்துப் பொடித்துத் தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட ரத்த மூலம் நிற்கும். தான்றிக்காய் தோலைச் சேகரித்துச் சூரணம் செய்துகொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரிச் சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.

தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாய்ச் சர்க்கரை கலந்து தினசரிக் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டுவரப் பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.

தான்றிக்காய் தோல், திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துத் தூள் செய்துகொள்ளவும். இதில் 10 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பாகமாய்ச் சுண்ட வைத்த கஷாயத்தை வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மி.லி. அளவில் குடித்துவர ஆஸ்துமா, மூச்சிளைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு ஆகியவை எளிதில் குணமாகும்.

தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம், அன்னபேதி செந்தூரம் 10 கிராம்- இவை அனைத்தையும் ஒன்றாய்க் கலந்து தூள் செய்து ஒரு தேக்கரண்டி பொடியைத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டுவர ரத்தம் பெருகும், ரத்தச் சோகை விலகும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயை ஆயுர்வேதம் வயஸ்தா என்று அழைக்கிறது. வயஸ்தா என்று சொன்னால் மூப்படையாமல் காக்கச் செய்வது என்று அர்த்தம். இதற்குச் சிவா என்றும், பலம் என்றும் பெயருண்டு. தாத்ரீ பலம் என்றும் அழைப்பார்கள். அமிர்தத்துக்குச் சமமானதால் அமிர்தா என்ற பெயரும் உண்டு. ரக்த நோய்கள், பித்த நோய்கள் போன்றவற்றைக் குறைக்கும். கல்ப மருந்து, ரசாயன மருந்து, பித்தத்தைத் தணிப்பது. ஐந்து ரசங்களை உடையது, உப்புச்சுவை இல்லாதது.

நெல்லிக்காயை மஞ்சள் பொடியுடன் சேர்த்துச் சாப்பிடப் பிரமேகம் கட்டுப்படும். ஸரம் எனும் மலத்தை இளக்கும் குணம், இதற்கு உண்டு. சியவனபிராச ரசாயனம் இதன் மூலம் செய்யப்படுகிறது. முடி வளர்க்கும் எண்ணெய்களில் இது சேர்க்கப்படுகிறது. எனவே, இதற்குக் கேஷ்யம் எனும் குணம் உண்டு. ரத்தப் பித்தம் எனும் ரத்தக் கசிவு நோய்களுக்கு, இது பயன்படுத்தப்படுகிறது.

முக்குற்றத்தையும் இது மாற்றும். தாத்ரி அரிஷ்டம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. ஒரு வேளை உணவு உட்கொள்ளும்போது தொடக்கத்திலும், நடுவிலும் இறுதியிலும் ஒருவன் இதை உட்கொண்டுவந்தால், நோயின்றி வாழ்வான் என்று ராஜவல்லப நிகண்டு சொல்கிறது.

நெல்லிக்காய்ப் பொடியை நெல்லிக்காய்ச் சாறு கொண்டு பாவனை செய்து சர்க்கரையும், தேனும், நெய்யும் சேர்த்து லேகியம்போல் சாப்பிட்டுவர, சிரஞ்சீவியாக வாழ முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு.

மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிக அளவு வைட்டமின் 'சி' நெல்லிக்காயில் உள்ளது. ஒரு நெல்லியில், தோடம்பழம் எனப்படும் புளிப்புப் பழங்கள் முப்பதில் உள்ள அளவுக்கு இணையாக வைட்டமின் சி` உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அன்றாடம் ஒன்று சாப்பிட்டுவந்தால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம். மேலும் மலை நெல்லிக்காயில் பாலிஃபீனால்கள், கனிமச்சத்துகளான இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின்களான கரோட்டின்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் போன்றவை அதிக அளவில் உள்ளன.

கருநெல்லி, அருநெல்லி என்ற இரண்டு இனங்கள் உண்டு. அருநெல்லியில் அத்தனை மருத்துவக் குணம் இல்லை. மிகச் சிறியதாக இருக்கும். கருநெல்லி, எனும் தோப்பு நெல்லி எனும் காய்தான் சத்து நிறைந்தது, உருண்டையாக இருக்கும்.

ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால், காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும். வேக வைத்தால் நெல்லிக்காயின் வைட்டமின் சி குறையாது, அதிகரிக்கும்.

தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றைச் சாப்பிடும் போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன்மூலம் அதில் இருக்கும் துவர்ப்பு தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதிப்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தச் சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக, செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலை சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் 4 நெல்லிக்காய்ப் சாற்றுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாற்றுடன், இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

தினமும் 4 நெல்லிக்காய்ப் சாற்றுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாற்றுடன், இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்துச் செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x