Last Updated : 23 Jul, 2016 12:34 PM

 

Published : 23 Jul 2016 12:34 PM
Last Updated : 23 Jul 2016 12:34 PM

முன்னத்தி ஏர் 40: கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது

இயற்கைவழி வேளாண்மை தொடர்பான எந்த ஒரு புது நுட்பத்தையும் குழந்தைபோலக் கேட்டுக்கொண்டு, அதை உடனே செய்து பார்த்துச் சொல்லிவிடும் தன்மை மதுரை மாவட்டம் புதுப்பட்டி லட்சுமணனுக்கு உண்டு. இவரது பண்ணையில் உள்ள பீப்பாய்களில் இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள் கரைசல்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

இவர் மேட்டுப் பாத்தி முறையில் காய்கறி சாகுபடியும் மலர் சாகுபடியும் செய்துள்ளார். இவரது விளைச்சலை மயில்கள் முற்றிலும் அறுவடை செய்துவிடுகின்றன! இதனால் இவருக்குப் பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

தூய்மையான தொழுவம்

இதுதவிர ஆடு, மாடு, கோழி எனக் கால்நடைகளையும் வளர்த்துவருகிறார். மாடுகளில் திமில் உள்ள வெப்பமண்டல மாடுகளை (நாட்டு மாடுகள்) வைத்துள்ளார். சண்டிகர், சாகிவால் போன்ற இன மாடுகளும் இவரிடம் உள்ளன. அதற்காகச் சிறப்பான கொட்டகை அமைப்பை உருவாக்கியுள்ளார். மாடு கட்டும் இடம் மிகவும் தூய்மையாக உள்ளது. மற்ற பண்ணையாளர்கள் இவரிடமிருந்து இதைக் கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு இது சிறப்பாக உள்ளது.

கால்நடைகளுக்கான தீவனத்தைப் பெரும்பாலும் வெட்டியே கொடுக்கிறார். இதனால் தீவனம் வீணாவது குறையும் என்கிறார். ஆனால் இதற்குச் செலவு சற்று அதிகம். வெட்டிக் கொடுப்பதா, வேண்டாமா என்பதை அவரவரே முடிவு செய்ய வேண்டும்.

பால் குடித்து வளரும் கன்றுகள்

முதலில் நண்பர்கள், உறவினர்களுக்குப் பாலை விற்றுவந்தார். ஆனால், அது அவருக்குப் பெரும் வேலைப்பளுவாக மாறிய காரணத்தால், இப்போது பால் விற்பனையை நிறுத்திவிட்டார். வீட்டுத் தேவைக்குப் போக உள்ள பாலையும் கன்றுகள் குடிப்பதற்கு விட்டுவிடுகிறார். இதனால் கன்றுகள் திடமாக வளர்ந்துள்ளன. அவை மிக விரைவாகப் பெரிதாகிவிடுகின்றன. இதனால் கன்றுக்கு விலை அதிகமாகக் கிடைக்கிறது. அது பால் விலையைவிட நிச்சயம் அதிகமாகவே இருக்கும் என்பது இவருடைய கருத்து.

ஆடுகளைப் பொறுத்தவரையில் பரண் முறையில் ஆடுகள் வளர்க்கிறார். ஆடுகளை வெளியே மேய்ச்சலுக்கு அனுப்புவதில்லை. வேண்டிய தீவனங்களை ஆடுகளுக்கு வெட்டிப்போடுகிறார். ஆடுகளுக்கான தீவன மரங்களையும் போதிய அளவு புல்லையும் வளர்த்துள்ளார். சுபாபுல், அகத்தி, வேம்பு, பூவரசைப் போன்று அதிகம் தழை தரும் மரங்களை வளர்த்துள்ளார். எந்த இடத்தையும் வீணாக்காமல் பசுந்தாள்களை வளர்த்துள்ளார்.

கோழிகளுக்குத் தனியறை

ஆடுகளைப் பொறுத்தவரையில் தலைச்சேரி ஆடுகளோடு, எட்டையபுரம் போன்ற உள்ளூர் வகை ஆடுகளையும் வைத்துள்ளார். இவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு வசதியாக, மருத்துவர் ஒருவரை ஆலோசனைக்கும் உதவிக்கும் வைத்துள்ளார். தேவையான நேரத்தில் அவருடைய உதவியைப் பெற்றுக்கொள்கிறார்.

இவரது கோழி வளர்ப்பு முறையும் மிகவும் கச்சிதமாக உள்ளது. கோழிகளுக்கான சிறிய சிறிய அறைகள், முட்டை இடுவதற்குத் தனியாக, குஞ்சுகள் வளர்வதற்குத் தனியாக, பெரிய கோழிகள் அடைவதற்குத் தனியாக என்று எல்லாம் தனித்தனியாக அமைந்துள்ளன. இதனால் கோழிகள் சண்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.

அவை திறந்த வெளியில் திரிகின்றன. அருகம் புல்லை நிறைய தின்கின்றன. இதனால் நல்ல உடல்திறத்துடன் உள்ளன. பெயருக்குச் சிறிதளவு தீவனமும் கொடுக்கிறார். பிற பறவைகளிடமிருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற நூலைக் கொண்டு வலைபோன்று கட்டி வைத்துள்ளார். ஆனாலும் அவ்வப்போது இழப்பு ஏற்படவே செய்கிறது. இவர் வளர்ப்பது முற்றிலும் உள்ளூர் இனக் கோழிகள்; இவற்றின் மூக்கு வெட்டப்படுவதில்லை.

திட்டமிட்ட வடிவமைப்பு

இதுதவிர, இயற்கை வேளாண்மை இடுபொருட்களையும் இவர் தயாரித்துக் கொடுக்கிறார். குறிப்பாகப் பஞ்சகவ்யம் எனப்படும் ஆவூட்டம் இவரது சிறப்புத் தயாரிப்பு. இவருடைய பண்ணை மிகவும் தூய்மையாக இருப்பதால், தீமை செய்யும் பாக்டீரியா தொல்லை எதுவும் இல்லை. கேட்பவர்களுக்கு அமுதக்கரைசல் போன்ற இயற்கை ஊட்டப் பொருட்களையும் தயாரித்துக் கொடுக்கிறார். சாண எரிவாயுக் கலன் அமைத்து, அதிலிருந்து வரும் சாணச் சேற்றை எடுத்து மட்கும் உரம் தயாரிக்கிறார். மட்கு உரம் இயற்கை வேளாண்மையின் முக்கியப் பொருள் என்பது இவருடைய நம்பிக்கை.

இவரது பண்ணையின் வடிவமைப்பு, மற்றவர்கள் பின்பற்றும் அளவுக்கு முன்னுதாரணமாக உள்ளது. எந்த இடத்தில் எதை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்துள்ளார். தீவனங்களை அதிக உழைப்பின்றி அருகிலேயே வளர்க்க வேண்டும் என்ற தாளாண்மை பண்ணையத்தின் விதிமுறைகளைச் சரியாகக் கையாண்டுவருகிறார். தன்னால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்குக் கற்றும் தருகிறார்.

“நான் ஒன்றும் பெரிதாகச் சாதித்து விடவில்லை…” என்று அடக்கமாகக் கூறும் புதுப்பட்டி லட்சுமணனிடம், உழவர்கள் மட்டுமல்ல அரசும்கூட மண்ணை மாற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

(அடுத்த வாரம்: அடுக்குமுறை வேளாண் பண்ணை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com

லட்சுமணன் தொடர்புக்கு: 98421 94848

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x