Published : 18 Feb 2017 10:49 AM
Last Updated : 18 Feb 2017 10:49 AM

பெருமாள்: காட்டுயிர்களை மதித்த ஒளிப்படக் கலைஞர்

கேரளத்தில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலய விடுதியை நான் அடைந்தபோது, பக்கத்திலிருந்த வனத்துறை கட்டிடத்தில் டி..என்.ஏ. பெருமாள் ஒரு பயிலரங்கை நடத்திக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் அங்குச் சென்றபோது கரும்பலகை முன்னே நின்று அவர் போதித்துக்கொண்டிருந்தார். சுற்றி இருந்த இளைஞர் கூட்டம் அவர் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. டி.என்.ஏ. பெருமாள் என்றவுடன் நம் ஞாபகத்துக்கு வரும் முதல் சித்திரம் இதுதான். இப்படித்தான் நம்மால் அவரை நினைவு கூற முடியும்… அன்பான ஓர் ஆசிரியராக, நூற்றுக்கணக்கான இளைஞர்களின் குருவாக.

உத்வேகம் தந்த ஊர்

நாடு விடுதலை அடைந்திருந்த நேரத்தில் காட்டுயிர்ப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு தோன்ற ஆரம்பித்திருந்தது. அப்போது தங்கள் ஒளிப்படங்கள் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் அந்த இயக்கத்துக்கு உத்வேகம் அளித்துக் கொண்டிருந்தார்கள். முதலாமவர் மா. கிருஷ்ணன், அடுத்ததாக டி.என்.ஏ. பெருமாள்.

சிறுவனாக ஒரு பேபி பிரவுனி கேமராவுடன் படமெடுக்க ஆரம்பித்த அவர், தன்னுடைய 28-வது வயதில் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் ஆசிரியராக இருந்த ஓ.சி. எட்வர்ட்ஸைச் சந்தித்தார். பறவைகளைப் படமெடுப்பதில் தேர்ந்தவரான எட்வர்ட்ஸைத் தனது குருவாகப் பெருமாள் ஏற்றுக்கொண்டார். காட்டுயிர்களைப் படமெடுப்பதில் பெருமாளின் ஆர்வம் தீவிரமடைந்தது.

காட்டுயிர் படமெடுக்கும் துறையின் தலைநகர் என்று பெங்களூருவைக் கூறலாம். பெங்களூரு வாசம் அவருடைய அக்கறைகளுக்கு ஏதுவாக அமைந்தது. அந்த மாநிலத்தில் பல சரணாலயங்கள் இருந்தது மட்டுமல்ல. அங்கு இயங்கிக்கொண்டிருந்த ‘மைசூர் போட்டோகிராபி சொசைட்டி’யில் சேர்ந்து காடுகளில் சுற்றிப் படமெடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. முனைவர் தாமஸ் போன்ற இத்துறையின் பல முன்னோடிகள் இங்கு வசித்துவந்ததால், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

காட்டுயிர் ஆர்வலரும் சாண்டூர் அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான கோர்போடே (இவர் கர்நாடக அரசு மந்திரியாகப் பணியாற்றியவர்) பெருமாள் வேலை செய்வதற்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுத்தார். ஒளிப்படக் கலையின் உச்சத்திலிருந்த பெருமாளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பல பன்னாட்டு கவுரவங்களும் வந்துசேர்ந்தன.


ஆந்தைக் கண் பூச்சி

அறிவைப் பரவலாக்கியவர்

தஞ்சாவூர் நடேசாச்சாரி அய்யன்பெருமாள் (1932-2017) காட்டுயிர் ஒளிப்படக் கலையில் இயங்கிய காலகட்டத்தில் இன்று சந்தையில் எளிதாகக் கிடைக்கும் பெரிய லென்ஸ்களோ, மற்ற உபகரணங்களோ கிடைக்கவில்லை. அவருடைய காலம் டிஜிட்டல் ஒளிப்படக் கலைக்கு முந்தைய காலம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதனால் காட்டுயிர்களைப் படமெடுக்க வேண்டுமானால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் போக வேண்டிய கட்டாயமிருந்தது. அதனால் படமெடுக்கும் உயிரினங்களின் இயல்பை நன்கு அறிந்திருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது.

எடுத்துக்காட்டாக, காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில்தான் யானை, மிளா போன்ற உயிரினங்களை அணுக வேண்டும். இந்த வித்தைகளை நன்கு கற்றுக்கொண்டார் பெருமாள். அத்துடன் ஒளியை அளக்கக் கருவிகளில்லாத அந்த நாட்களில், ஒரு யூகத்தில்தான் படமெடுக்க வேண்டியிருந்தது.

அவரது பணி ஒளிப்படம் எடுப்பது என்றாலும், அவரது தொலைநோக்கு காட்டுயிர்ப் பாதுகாப்பாகவே இருந்தது. அதற்கு ஒளிப்படக் கலை ஒரு கருவி என்று நம்பினார். ‘காட்டின் அதிசயத்தையும் மர்மத்தையும் நாம் போற்ற வேண்டும்’ என்று எழுதினார். தனது படங்கள் மூலம் காடுகளைப் போற்றவும் செய்தார். தான் கற்றதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அவரது பயிலரங்கு தொடர்பாக அறிவிப்பு வெளியானதுமே உரிய எண்ணிக்கையில் நபர்கள் பதிவு செய்துவிடுவார்கள்.

தனது வாழ்நாளின் கடைசி நாள்வரை இந்தப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். பெருமாளை நினைத்தால் என் மனதில் தோன்றும் முதல் சித்திரம், தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் உள்ள ஆர்வம், அவரது எளிமை ஆகியவையே.

உயிரினங்களை மதித்தவர்

பெருமாள் எழுதிய ‘Photographic Wildife in India’ என்ற முக்கியமான நூலின் முகப்பில் காட்டுயிர் ஒளிப்பட முன்னோடியான எம்.டபிள்யூ. சேம்பியன் எடுத்த வேங்கையின் படத்தை வெளியிட்டார். மாறாக, தான் எடுத்த படத்தைப் போட்டுக்கொள்ளவில்லை. எடுத்த படத்தை எந்த விதத்திலும் தொழில்நுட்பம் மூலம் மாற்ற முயற்சி செய்யக் கூடாது என்றும் பெருமாள் கூறினார். அது மட்டுமல்ல காட்டுயிரைப் படமெடுப்பதில் ஒரு அறநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நாம் படமெடுக்கும் உயிரினத்தை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவருடைய சித்தாந்தம்.

இன்று காட்டுயிரைப் படமெடுக்கிறேன் என்று புறப்பட்டு, விலை உயர்ந்த கேமராக்களை வாங்கிக்கொண்டு, பலர் உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கிறார்கள். எதற்கு? ‘இந்தப் படத்தை நான் எடுத்தேன்’ என்று ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ளத்தான். மரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு சிறுத்தை மரத்திலிருந்து இறங்குவதைப் போலப் படமெடுக்க விரும்பிய ஒருவர், கல்லெடுத்து வீசி விரட்டியதை நான் ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

உயிர்த்துடிப்புள்ள படங்கள்

காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம், 1972 வந்த பின் உருவான காட்டுயிர்ப் பாதுகாப்பு இயக்கத்தில் முன்னணியில் இருந்தார். காட்டுயிர் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த கரிசனத்தை, அவருடைய உயிர்த் துடிப்புள்ள படங்கள் வெளிப்படுத்தின. ஓர் உயிரினத்தை அதன் வாழிடத்தில் காண்பிப்பது, அதன் இயல்பைப் பிரதிபலிப்பது முக்கியம் என்று பெருமாள் நம்பினார். அவரது அரிய படங்கள் கொண்ட நூல் ‘Reminiscences of a Wildlife Photographer’, அவருக்கு மேலும் புகழைச் சேர்த்தது. அண்மையில் வெளிவந்த ‘Some South Indian Butterflies’ என்ற களக் கையேட்டில் அவருடைய வண்ணத்துப்பூச்சிப் படங்கள், சிற்றுயிர்களைப் படமெடுப்பதில் அவருக்கு இருந்த திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு.


பொரிப்புள்ளி ஆந்தை

புதிய ஒளிப்படக் கருவிகள்

நான் பெங்களூருவில் பணியாற்றிய போது பேலஸ் சாலையிலிருந்த எனது அலுவலகத்துக்கு அருகில் அவரது பணியிடம் இருந்தது. அடிக்கடி அங்கே சென்று ஒளிப்படத்தை அவர் உருத்துலக்குவது, பெரிதாக்குவது போன்ற வேலைகளைச் செய்வதை வியப்புடன் நான் பார்த்திருக்கிறேன்.

தானே அமைத்த சில எளிய உபகரணங்களைப் பயன்படுத்துவார். சைக்கிள் செயின், பெடல் ஆகியவற்றுடன் கூடிய ஒரு என்லார்ஜரைப் பொருத்தியிருந்தார். அதை உயரத்தில் ஏற்றி, தரையில் போட்டோகிராபி பேப்பரை விரித்து, அதில் பிம்பத்தை விழச் செய்து படங்களைப் பெரிதாக்குவார். சுவரொட்டி போன்று பெரிதாக இருந்தாலும் துல்லியமான படங்கள் உருவாகும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அவர் சிரமமின்றி மாறினாலும்கூட, அவருடைய கறுப்பு-வெள்ளை படங்கள்தான் நம் நினைவில் தங்கி நிற்கின்றன.

என்றும் நம்முடன்

மலர்களால் போர்த்தப்பட்டிருந்த அவரது உடலருகே எனது இறுதி வணக்கத்தைச் செலுத்தியபோது, அவர் சென்ற பின்னரும் - கரையான் புற்றின் மேலிருந்து தனது தோகையைக் கோதிக்கொண்டிருக்கும் மயில், கூட்டிலிருக்கும் தனது குஞ்சுகளுக்கு ஓணானைக் கவ்விக்கொண்டு வரும் ஆந்தை, மலைமுகட்டில் மேய்ந்துகொண்டிருக்கும் வரையாட்டு மந்தை போன்று - அவர் எடுத்த படங்கள் நம்முடன் என்றைக்கும் இருக்கும் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது.

கட்டுரையாளர், மூத்த காட்டுயிர் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x