Published : 06 Jul 2018 07:08 PM
Last Updated : 06 Jul 2018 07:08 PM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 08: பறவைகளின் கூடுகளும் நரிகளின் குழிகளும்

குடம்பை தனித்தொழியப் புட்புறத் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு (338)

உடலையும் உயிரையும் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, கூட்டை விட்டுவிட்டுப் பறந்து போய்விடும் பறவைக்கு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். இனப்பெருக்கக் காலம் முடிந்த பின், மரங்களில் தொங்கும் தூக்கணாங்குருவியின் கூடு, நம் வீட்டுப் பூச்செடியில் பார்க்கக்கூடிய தையல் சிட்டுவின் கூடு எனக் காலிக் கூடுகளைப் பல இடங்களில் நம்மால் காண முடியும். சிலர் பறவையின் கூடுகளை அலங்காரமாக வீட்டினுள் காட்சிப்பொருளாக வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

தரையில் முட்டையிடும் சில பறவைகளுக்குக் கூடே இருக்காது. சிறு கற்களின் நடுவே முட்டையிட்டு அடைகாக்கும். ஆள்காட்டிக் குருவியின் கூடும் கல்குருவியின் (Courser) கூடும் இம்மாதிரியானவைதாம். அதிநுணுக்கமான உருமறைப்பால் இந்தக் கூடுகளைக் கண்டறிவது மிகவும் சிரமம். உங்கள் காலடியிலேயே இருந்தாலும் கண்ணில் தட்டுப்படாது. இந்தப் பறவைகளின் குஞ்சுகள் பொரித்த உடனேயே ஓடித்திரியும் திறன் கொண்டவை. காடையும் கவுதாரியும் இந்த வகைப் பறவைகளே. ஆபத்து என்றால் குஞ்சுகள் தரையோடு தரையாகப் படுத்துவிடும். கண்டே பிடிக்க முடியாது.

வேடந்தாங்கல் தரும் வசதிகள்

சில புள்ளினம் கூட்டம்கூட்டமாக, ஓரிடத்தில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த இம்மாதிரியான இடம் வேடந்தாங்கல். நத்தைக்குத்தி நாரை, நீர்க்காக்கை, கூழைக்கடா, அன்றில், சாம்பல் நாரை போன்ற பல நீர்நிலை சார்ந்த புள்ளினங்கள் ஆயிரக்கணக்கில் இங்கு கூடுகின்றன. அவற்றை ஈர்ப்பது இங்குள்ள இரண்டு வசதிகள்: ஒன்று, அருகில் உள்ள நீர்நிலைகளில், முக்கியமாக மதுராந்தகம் ஏரியில் கிடைக்கும் அபரிமிதமான இரை. சங்குவளை நாரை ஒன்று தன் கூட்டிலுள்ள மூன்று குஞ்சுகளுக்குத் தினமும் ஏறக்குறைய இரண்டு கிலோ மீன் பிடித்துத் தர வேண்டுமே! இரண்டு, பாம்பு, உடும்பு போன்ற இரைகொல்லி களிடமிருந்து கூடுகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. மரங்கள் நீரில் நிற்கின்றனவே. தமிழ்நாட்டிலுள்ள பறவைச் சரணாலயங்கள் எல்லாமே நீர்நிலைகள் உள்ள இடங்களில்தாம் அமைந்திருக்கின்றன.

சில பறவைகள் ஒரு பேழைபோல் மிதக்கும் கூடுகளைக் கட்டி, அதில் முட்டையிடுகின்றன. தாமரைக்கோழியும் முக்குளிப்பானும் இந்த வகைக் கூடுகளை உருவாக்குகின்றன. ஏரிக்கரையிலிருந்து இக்கூடுகளைக் கண்டுபிடிப்பது வெகு சிரமம்.

வேடந்தாங்கலைப் பற்றிப் பேசும்போது, ஒரு விவரத்தை மனத்தில் கொள்ள வேண்டும். அங்கே கூடு கட்டும் எல்லாப் பறவைகளுமே நம் ஊரைச் சேர்ந்தவைதாம். வெளிநாட்டிலிருந்து வருபவை அல்ல. ஒரு பறவை எங்கே கூடு கட்டுகிறதோ அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தது அது. தங்கள் நாட்டில் குளிர்காலத்தில் நிலம் பனியால் மூடப்படும்போது, வலசை வரும் பறவைகள் இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இரை தேட மட்டுமே வருகின்றன. வந்த ஊரில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யாது. அப்படியானால் வேடந்தாங்கலுக்கு வலசை வரும் பறவைகளை பிறகு எங்கே பார்ப்பது? ஏரியின் கரையிலும் நீர்ப்பரப்பிலும் இரை தேடிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஊசிவால் வாத்து, சிறவி, உள்ளான், நாமக்கோழி இவையெல்லாம் வலசை வரும் புள்ளினங்கள். வேடந்தாங்கலுக்குச் சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரிக்கிளி ஏரியிலும் இவற்றை எளிதாகக் காணலாம்.

கூடுகளைத் துரத்தும் கேமராக்கள்

கூடே கட்டாமல் வாழும் பறவைகளும் உண்டு. நமக்கெல்லாம் தெரிந்தது குயில். காக்கையின் கூட்டில் முட்டையிட்டுவிட்டுப் போய்விடும். அப்புறம் அவற்றை அடைகாத்து ஒப்பேற்றுவது காக்கையின் பாடு. குயிலின் முட்டை, தோற்றத்தில் காக்கை முட்டை மாதிரியே இருக்கும். இம்மாதிரி செவிலித்தாய் முறையில் இனப்பெருக்கம் செய்யும் பல பறவைகள் ‘குக்கூ’ இனத்தில் உண்டு.

மரங்கொத்தி, குக்குறுவான் போன்ற புள்ளினங்கள் மரத்தில் துளையிட்டு அதில் தங்களது குஞ்சுகளை வளர்க்கும். கிளிகளும் வேறு சில பறவைகளும் மரங்களில் இயற்கையாய் அமைந்த பொந்துகளில் முட்டையிடும். இப்படிப் பொந்துகளில் கூடுவைக்கும் பறவைகளில், பிரபலமானது மழைக்காடுகளின் குறியீடான இருவாட்சி.

ஒரு மரப்பொந்துக்குள் பெட்டைப் பறவை சென்றபின், இரண்டு சிறு ஓட்டைகளைவிட்டு, பொந்தை ஈர மண்ணால் ஆண் பறவை மூடிவிடும். முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தபின், இந்த மண் தடுப்பைத் தன் அலகால் உடைத்துப் பெட்டை வெளியேறும். காட்டுயிர் ஒளிப்படம் எடுப்பவர்கள் இப்பறவையின் கூடுகளைத் தேடி அலைகின்றனர். கூட்டைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். விவரம் கிடைத்தவுடன் பெரிய பெரிய லென்ஸ்களைத் தூக்கிக்கொண்டு வால்பாறைக்கு கேமராக்காரர்கள் விரைந்துவிடுகிறார்கள்.

நுட்பமான கூடு

எப்போதும் பறந்துகொண்டே இருக்கும் உழவாரக் குருவிகள் எச்சிலையும் களிமண்ணையும் கலந்து ‘கப்’ வடிவில் ஒரு குயவனைப் போல் கூடுகளை உருவாக்குகின்றன. பாறை இடுக்குகளிலும் பழைய கட்டிடச் சுவர்களிலும் இக்கூடுகள் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காண முடியும். சிட்டுக்குருவி, கொண்டைக் குருவி போன்ற பறவைகள் நம் வீட்டிலேயே கூடு கட்டும். எங்கள் வீட்டில் அவ்வப்போது ஒரு மணிப்புறா கூடு கட்டிக்கொள்கிறது.

மிகவும் நுட்பமான வேலை நிறைந்த கூடு, தூக்கணாங்குருவிக் கூடுதான். வேலூரில் எங்கள் வீட்டுக்குப் பின்புறம் கரும்புத் தோட்டத்தில் மேலே சென்ற மின்சாரக் கம்பிகளில் ஒன்பது கூடுகள் கட்டப்படுவதை அன்றாடம் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கூட்டில் இரண்டு அறைகள் இருக்கும். சில கூடுகளில் சிறிய, கோலிக்குண்டு அளவில் களிமண் உருண்டைகள் இருக்கும். இதன் பயன்பாடு என்ன என்பது குறித்துப் பறவையியலாளர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

(அடுத்த கட்டுரை – ஜூலை 21 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x