Last Updated : 18 Jun, 2018 02:33 PM

 

Published : 18 Jun 2018 02:33 PM
Last Updated : 18 Jun 2018 02:33 PM

சுற்றுச்சூழல் காக்கும் உடற்பயிற்சி!

நிஜமாகத்தான்!

தேநீர் இடைவேளையை சுவீடன்தான் உலகுக்கு அறிமுப்படுத்தியது. அதன்பின் ஆறு மணிநேர வேலை முறையை அறிமுகப்படுத்தி, வாழ்வையும் வேலையையும் சமன் செய்யும் கலையை அந்நாடே கற்றுக்கொடுத்தது. இப்போது மனதுக்கும் உடலுக்கும் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளைவிக்கும் ஒரு உடற்பயிற்சி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சுவீடன். அதன் பெயர் ‘பிளாக்கிங்’ (Plogging)!

‘வாக்கிங்’ தெரியும், ‘ஜாக்கிங்’ தெரியும். அதென்ன ‘பிளாக்கிங்?’. ‘ஜாக்கிங்’ என்ற சொல்லும் ‘பிளாக்கா அப்’ என்ற சுவீடன் சொல்லும் இணைந்து உருவான சொல்தான் ‘பிளாக்கிங்’. ‘பிளாக்கா அப்’ என்றால் ‘எடு’ என்று அர்த்தம். ‘எடுத்துக்கொண்டு ஓடு’ என்பதுதான் இந்தப் புதிய சொல்லின் அர்த்தம்.

‘எடுத்துக்கொண்டு ஓடுவது’ என்றவுடன் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு ஓடுவது என்று நினைக்க வேண்டாம். நமக்கும் இந்தப் பூமிக்கும் தேவையற்றதை எடுத்துக்கொண்டு ஓடுவது என்று இதற்கு அர்த்தம்.

குனிஞ்சு குனிஞ்சு ஓடுங்க

வழக்கமாக ஓடுவது போன்றதுதான் இந்தப் பயிற்சியும். ஆனால், ஓடும்போது குப்பைகளைக் குனிந்து பொறுக்கி எடுத்துக்கொண்டே ஓட வேண்டும். ஓடுவது நல்ல உடற்பயிற்சிதான். அதுவும் அவ்வப்போது குனிந்து ஓடும், இந்த உடற்பயிற்சியைப் பற்றிக் கேட்கவா வேண்டும். இந்தப் பயிற்சி உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘லைஃப் சம்’ எனும் செயலி நிறுவனம் தெரிவிக்கிறது. அது பிளாக்கிங் மூலம் எரிக்கப்படும் கலோரிகளை அளவிடும் வகையில் தனது ‘லைஃப் சம்’ செயலியை மாற்றி வடிவமைத்துள்ளது.

அந்தச் செயலியின் தரவுகளின்படி, 30 நிமிட பிளாக்கிங் சராசரியாக 288 கலோரிகளை எரிக்கிறது. அதாவது 30 நிமிடம் தொடர்ந்து ஓடினால் எந்த அளவு கலோரிகளை உடம்பு எரிக்குமோ அதே அளவுக்கு கலோரிகளை பிளாக்கிங்கும் எரிக்கிறது. ஓடுவது, தனிமனிதனின் உடல்நலத்துக்கு மட்டும்தான் நன்மை பயக்கும். ஆனால் பிளாக்கிங் தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது.

காலத்துக்கு ஏற்ற உடற்பயிற்சி

உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே நோய் என்றாகி விட்டது. சுத்தமான காற்று இன்று கனவிலும் சாத்தியமற்ற ஒன்று. இளம் வயதிலேயே பலர் நீரிழிவு நோயால் அவதியுறும் நிலை இன்று உள்ளது. உயர் ரத்த அழுத்தமும் ரத்தக் கொழுப்பும் இன்று பெரும்பாலானவர்களுக்குக் காணப்படுகிறது. உடல் பருமனால் இன்று குழந்தைகள்கூட அவதியுறுகிறார்கள். இதற்கான தீர்வை முன்வைத்துப் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெறுகிறது. மக்களின் தலைமீது எண்ணற்ற மருந்துகள் திணிக்கப்படுகின்றன.

ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு மருந்துகள் மட்டும் போதாதே. அதனால்தான் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தெருவெங்கும் முளைத்திருக்கும் ‘ஜிம்’கள் இதற்குச் சான்று. அது மட்டுமல்லாமல், இன்று பூங்காக்களிலும் சாலையிலும் வயது வித்தியாசமின்றி பலர் ஜாக்கிங்கோ வாக்கிங்கோ செல்கிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உடற்பயிற்சி ஆண்களுக்கு மட்டுமே உரியதாக நம் நாட்டில் இருந்தது. இன்று அந்த நிலை மாறிவிட்டது. பெண்களுக்கான பிரத்யேக ஜிம்கள் இன்று நிறைய உள்ளன. அத்துடன் ஆண்களுக்கான ஜிம்களிலும் உடற்பயிற்சி செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுத்தம் தரும் சுகாதாரம்

குடும்பத்துடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் போக்கும் இன்று அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், குடும்பத்தோடு பிளாக்கிங் செய்யலாம். உடற்பயிற்சி செய்தது போலவும் ஆயிற்று, சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்தது போலவும் ஆகும்.

யோசித்துப் பாருங்கள். பூமி தன்னை அசுத்தம் செய்து கொள்வதில்லை. நமது பொறுப்பற்ற கண்டுபிடிப்புகளின் எச்சங்களின் மூலம் பூமியையும் இயற்கையையும் நாமே அசுத்தமாக்குகிறோம். அசுத்தம் செய்வது நாம் எனும்போது, அதைச் சுத்தம் செய்வதும் நாமாகத்தானே இருக்க வேண்டும். எப்படி முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் இந்தப் பூமியை சுத்தமாகப் பெற்றோமோ, அதே போன்று நமது அடுத்த தலைமுறையினரிடம் பூமியை ஒப்படைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு ஸ்வீடன் நமக்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நாமும் அதில் பயணிக்கலாம். இதை ‘பிளாக்’ செய்ய வேண்டாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x