Published : 02 Jun 2018 11:34 AM
Last Updated : 02 Jun 2018 11:34 AM

கற்பகத் தரு 08: தோண்டி எனும் நீர் சேகரிப்பான்

 

லையில் பட்டைகளைச் செய்ய கற்றுக்கொண்ட தமிழ் குடி, குடிநீரைச் சுமந்து செல்வதற்கு ஒரு வடிவமைப்பை உருவாக்க முயற்சித்தது. பனை ஓலைப் பட்டைகளைப் பயன்படுத்தும்போது இரு கைகளையும் பிடித்து இணைத்தே பயன்படுத்தவேண்டும். ஆனால் தோண்டி என்பது ஒரு கையில் சுமக்கும் இலகுவான ஒரு பொருள். குழந்தைகளை இடுப்பில் சுமக்கும் ஒரு மூதயோ, தொல் மூதாதையோ இடம்பெயர்கையில் தண்ணீர்த் தேவைக்கென எடுத்துச் செல்ல கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் இது.

நேர்த்தியான வடிவமைப்பு

பனை ஓலைப் பட்டை ஒரு முற்றுப்பெறாத வடிவம். அதை உருட்டி வடிவம் ஏற்படுத்தி, குறுக்காக ஒரு கம்பை கொடுத்து சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதே தோண்டி. இப்படி ஒரு நேர்த்தியான வடிவமைப்பாளர் தமிழ் மண்ணில் இருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்ப்பது மெய்சிலிர்க்கும் அனுபவம்தான்.

ஒரு பொருளுக்கான தேவையை அந்த நிலமும் அங்கு வாழும் மனிதர்களுமே முடிவு செய்கிறார்கள். பனை மரம் நெய்தல் நில மரம். கடற்கரையில் வாழும் மனிதர்களுக்கு நல்ல தண்ணீர் எளிதில் கிடைக்கும் பொருளாக இல்லை. அதனால் தண்ணீரை சேமித்து வைக்க மண் கலயங்களை உருவாக்கும் முன்பே வடிவமைக்கப்பட்டதுதான் தோண்டி. இன்றைக்குத் தோண்டியின் செழுமைப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் உருவாகியிருக்கலாம். ஆனாலும் தோண்டி அதன் தொன்மை வடிவத்திலேயே பிரபலமாகி யிருக்கிறது.

சிறகிலிருந்து பிறக்கும்

தோண்டி செய்வதற்கு அகலமான ‘ஒற்றைச் சிறகு' ஓலை வேண்டும். குருத்தோலையிலிருந்து நான்கு ஓலைகள் விட்டு பசுமையான ஓலைகளையே தோண்டி செய்யத் தெரிந்தெடுப்பார்கள். குறிப்பிட்ட ஓலைகளை தெரிவுசெய்வது ஓலைகளின் முதிர்ச்சி, வலிமை, நீடித்த உழைப்பு, செய்யும் பொருளுக்கு ஏற்றபடி வளைந்துகொடுக்கும் தன்மை ஆகியவை அடிப்படைகளாக உள்ளன.

ஒரு பனை மட்டையிலிருந்து பிரியும் ஓலைகளை வலது, இடது என இரண்டாக பகுப்பார்கள். அவற்றை குமரியில் 'செறவு' (சிறகு) என்றே அழைப்பார்கள். ஒரு விரிந்த சிறகை எடுத்து, அதன் ஓரத்திலிருக்கும் சிறிய ஓலைகளை நீக்கிவிட்டு குறைந்தபட்சம் ஒன்பது இலக்குகள் கொண்ட ஓலைகளை தெரிந்து கொள்ளுவார்கள். இவற்றை முதலில் நன்றாகக் காய வைத்து ‘சுருக்கு'ப் பிடித்துக்கொள்ளுவார்கள்.

சுருக்குப் பிடித்தல் ஓலைகளை பாடம் பண்ணும் முறைகளில் அடிப்படையானது. விரிந்த ஓலைகளை அப்படியே வெய்யிலில் உலர்த்திவிட்டு மறுநாள் அதிகாலையில் பனி விழுந்து ஓலை பசுமையாக இருக்கும் நேரத்தில், குருத்தோலையின் வடிவத்தில் இணைந்திருக்கும்படி அவற்றைக் கட்டிவிடுவதுதான் சுருக்குப் பிடித்தல். இப்படிச் செய்யும்போது ஒருவர் அந்தப் பனை ஓலைகளை பதப்படுத்திவிடுகிறார் அதில் உள்ள மேடுபள்ளங்கள் யாவும் நீங்கி ஒரு நேர்த்தியான வடிவம் கிடைத்துவிடும்.

இவ்விதம் சுருக்குப் பிடிக்கப்பட்ட ஓலைகளை தண்ணீரில் ஊறப்போடுவார்கள். அவை சரியான அளவில் மென்மையாகும்படி செய்த பின்னர், கத்தியை வைத்து உட்புறமாக எழுந்து நிற்கும் ஈர்க்கை ஒரு வரிசை சிறிதாகக் கீறிவிடுவார்கள். இதுபோலவே இன்னும் எட்டு விரல்கடை விட்டு, மீண்டும் ஒரு வரி கீறி விடுவார்கள். இவ்விதம் பனை ஈர்க்கில் கீறப்பட்டதால், அவற்றை மடக்குவது எளிதாகிறது.

நடைமுறைப் பயன்பாடு

குமரியைப் பொறுத்த அளவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புகூட தோண்டிகள் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுவாமித்தோப்பு பகுதிக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள கிணற்றில் தோண்டிப் பட்டையில் செய்யப்பட்ட வாளியில் நீர் இறைத்துக் குளிப்பது வழக்கம். இந்தத் தோண்டி வாளிகளில் சுமார் 15 நாட்கள் தண்ணீர் இறைக்க இயலும். இன்றும் திருமண வீடுகளில் சாம்பார் போன்ற குழம்புகளை பெரிய சட்டிகளில் இருந்து எடுத்து மாற்றுவதற்குத் தோண்டிகளையே பயன்படுத்துகிறார்கள். குமரி மாவட்டத்திலுள்ள சகாயதாஸ் (78) தோண்டிப் பட்டை செய்வதில் விற்பன்னர். சந்தைகளில் தற்போது விற்பனைக்கு வரும் தோண்டிப் பட்டைகள் நேர்த்தியாக இல்லை என்பது இவருடைய மதிப்பீடு.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு:malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x