Published : 17 Mar 2018 10:35 AM
Last Updated : 17 Mar 2018 10:35 AM

கான்கிரீட் காட்டில் 26: மஞ்சள் புல்வெளியாள்!

சி

ல தாவரங்களின் மலர்கள் தனி அழகுடன் இருக்கும். தேனருந்த வரும் வண்ணத்துப்பூச்சி அதில் அமரும்போது மலர் கூடுதல் அழகு பெறும். படத்தில் அப்படி அழகு பெற்றுள்ள மலர் மயில்கொன்றை. அதில் அமர்ந்திருப்பது முப்புள்ளி மஞ்சள் புல்வெளியாள் என்ற சிறிய வண்ணத்துப்பூச்சி வகை.

அதென்ன 'முப்புள்ளி' என்றொரு முன்னொட்டு? இதைப் போலவே தோற்றம் கொண்ட இரண்டு மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதே அந்த முன்னொட்டுக்குக் காரணம். மூன்றுமே ஒன்றை ஒன்று ஒத்தது போலிருக்கும். வேறுபாடு பிரித்தறிவது சற்றே கடினம்.

நான் பார்த்த மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சியின் முன் இறக்கையின் பின்புற உச்சியில் பழுப்பு நிறத் திட்டு இருந்தது. பருவநிலை உலர்ந்து இருக்கும்போது, இந்த பழுப்புத் திட்டை தெளிவாகக் காணலாம். வழிகாட்டிப் புத்தகம் குறிப்பிட்டிருந்த இந்த அடையாளத்தை வைத்தே அது முப்புள்ளி வகை என்பதை உறுதிசெய்தேன்.

முன்இறக்கைகளின் கீழ்ப்புறம் உடல் அருகே மூன்று புள்ளிகள் காணப்படுவதே இந்த புல்வெளியாள் வகையின் பெயருக்குக் காரணம். இந்த வண்ணத்துப்பூச்சி இறக்கைகளை மடித்து வைத்து இளைப்பாறுவதால் முப்புள்ளிகளை தெளிவாகக் காண்பது கடினம்.

மஞ்சள் புல்வெளியாள் வகை வண்ணத்துப்பூச்சிகளில் மூன்று வகைகளை தமிழகத்தில் காண முடியும். படத்தில் இருப்பது ஆங்கிலத்தில் 3 Spot Grass Yellow (அறிவியல் பெயர்: Eurema blanda). மற்ற இரண்டு வகைகள்: 1 spot grass yellow, Common grass yellow.

மஞ்சள் புல்வெளியாள் வகைகளில் மிகவும் சிறியது முப்புள்ளி வகை. இறக்கையை விரித்தால் 4 செ.மீ.க்கும் குறைவாகவே இருக்கும். நாடெங்கிலும் சமவெளி, மலைப்பாங்கான வாழிடங்களில் கீழ்மட்டப் பகுதிகள், சூரிய ஒளியுள்ள இடங்கள், புதர்கள், பூங்காங்களில் ஆண்டு முழுவதும் இதைக் காணலாம். தாழ்வான, நடுத்தர உயரத்துக்கு மெதுவாகப் பறக்கக்கூடியவை. புல்வெளியிலோ தாழ்வான தாவரங்களிலோ அடிக்கடி அமரும்.

புழுக்களுக்கு உணவாகும் தாவர இலைகளின் மேல் பெண் பூச்சி முட்டையிடுவதால் மரத்தின் மேல்மட்டத்திலும்கூட சில நேரம் பறக்கும். இதன் புழுக்களுக்கு உணவாகும் சில தாவரங்கள்: மயில்கொன்றை, கொடுக்காய்ப்புளி. நான் பார்த்தது மயில்கொன்றைத் தாவரத்தில். அறிவியல்பூர்வமாக உருவாக்கப்படும் வழிகாட்டிப் புத்தகங்கள் தவறு செய்வதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x