Published : 21 Oct 2017 10:30 AM
Last Updated : 21 Oct 2017 10:30 AM

லாபம் ‘கொட்டும்’ தேனீ!

வேளாண்மை என்றால், ஏர் பிடித்து உழுவது மட்டுமே என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற பண்ணைசார் தொழில்களும் வேளாண்மைதான்.

இன்னும் சொல்லப்போனால் வேளாண்மைக்கு பலம் தரும் முக்கியமான துணையாற்றல் இந்தப் பண்ணைசார் தொழில்கள். அவற்றில் உழவர்களுக்கு நேரடியாகப் பயன் தரும் தொழில்களில் ஒன்று தேனீ வளர்ப்பு. ஒரு பண்ணையில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் அந்தப் பகுதியில் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெறும்.

தேனீ வளர்ப்பு குறித்து அரசு, தனியார்த் தொண்டு நிறுவனங்கள் உழவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றன. என்றாலும், பெரும்பாலான இடங்களில் பயிற்சி மட்டும் வழங்கப்படுகிறது, தேனீ வளர்ப்புக்கான பெட்டிகள் வழங்கப்படுவதில்லை. சில இடங்களில் பெட்டிகள் இருக்கும். ஆனால், அதில் எப்படி தேனீக்களை வளர்ப்பது என்ற பயிற்சியைப் பெறுவதற்கான சாத்தியம் இருக்காது.

இப்படியொரு சூழலில் தமிழகத்தில் முதன்முறையாக டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட வேளாண் உயிரினப் பன்மைக்கான‘பயோவர்சிட்டி இண்டர்நேஷனல்’ அமைப்பு, மதுராந்தகத்தில் உள்ள ‘க்ரீன்காஸ் ஃபவுண்டேஷன்’ எனும் உழவர்கள் மேம்பாட்டுக்கான அமைப்பு ஆகியவை இணைந்து, செப்டம்பர் 25-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம் கிராமத்தில் தேனீ வளர்ப்புக் குறித்த பயிற்சியை வழங்கியதோடு, அதற்கான பெட்டிகளையும் 25 உழவர்களுக்கு வழங்கியுள்ளன.

உணவோடு மருந்தாகவும்…

இந்தத் தேனீ வளர்ப்புப் பயிற்சியை, மதுரை வேளாண் கல்லூரி பூச்சியியல் துறைப் பேராசிரியர் சுரேஷ் வழங்கினார்.

“பலரும் தேனை ஒரு உணவுப் பொருளாக மட்டுமே பார்க்கின்றனர். அது, ஒரு மருந்துப் பொருளும்கூட. ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்தால், தங்கள் குடும்பத்துக்குத் தேவையான தேனை அவர்களாகவே தயாரித்துக்கொள்ள முடியும்.

தேனீ வளர்ப்பில் தேன் மட்டுமே கிடைப்பதில்லை. தேன் மெழுகு, அரச உணவு எனப்படும் ‘ராயல் ஜெல்லி’ ஆகியவையும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, தேனீயைக் கொட்ட வைத்து மூட்டுவலி நீக்குவது, அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உயிரினப் பன்மையை வளர்ப்பது போன்ற மற்ற பயன்களையும் தேனீக்கள் தருகின்றன.

இப்படிப் பல பயன்களைக் கொண்ட தேனீ வளர்ப்புக்கு உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பாசன வசதி என எதுவுமே தேவையில்லை. பெட்டிகள் மட்டும் இருந்தால் போதும். தேனீக்கள் தானாகத் தேடி வரும்” என்றார்.

விளைவிப்பவர்களுக்கு விழிப்புணர்வு

மலைத் தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ ஆகிய ஐந்து வகைத் தேனீ இனங்கள் இந்தியாவில் உள்ளன. எனினும், இவற்றில் இந்தியத் தேனீ மட்டுமே தேனீ வளர்ப்புக்கு ஏற்றதாக உள்ளது.

தேனீ வளர்க்க ஆரம்பித்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தேன் எடுக்க முடியும். ஒவ்வொரு முறையும் சுமார் 4 கிலோ அளவுக்குத் தேன் கிடைக்கும். இன்றைய சந்தை மதிப்பில் ஒரு கிலோ தேனுக்கு ரூ.500 விலை. அந்த வகையில் உழவர்களுக்கு இது கூடுதல் வருமானமாகவும் அமையும்.

“பொதுவாக, மழை நாட்களில் தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியே பறக்காது. காரணம் அவற்றின் இறகுகளில் மழைநீர் பட்டால், அவற்றால் பறக்க முடியாது. அதனால் அவை உணவு தேட முடியாது. உணவில்லையென்றால், அவை இறந்துவிடும். எனவே, மழைக்காலங்களில் அவை உணவுக்காகப் பெரும் பாடுபடும். அந்த நேரத்தில் நீரில் சிறிது சர்க்கரையைக் கலந்து பெட்டியில் வைக்கலாம். தேனீக்கள் அந்த நீரை உண்டு, தேனை வெளியேற்றும்.

ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான தேனீ வளர்ப்பாளர்கள், சர்க்கரை நீரையே தேனீக்களுக்கு முக்கிய உணவாகத் தருகிறார்கள். அதனால், அந்தத் தேனீக்களால் சுத்தமான தேனை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இன்றைக்குச் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான தேன், இப்படி கலப்படம் மிகுந்த ‘சர்க்கரை நீர்த் தேன்’தான். ஆனால், சுத்தமான தேனை வாங்கி உண்ண வேண்டும் என்கிற விழிப்புணர்வு சாப்பிடுபவர்களுக்கு வந்துவிட்டது. எனவே சுத்தமான தேனை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு, விளைவிப்பவர்களுக்கும் வர வேண்டும்” என்கிறார் பேராசிரியர் சுரேஷ்.

இன்றைக்கு உலகம் முழுவதும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதற்கான முக்கியக் காரணம் பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எப்போது நாம் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புகிறோமோ, அப்போது நம் நாவிலும் ‘இயற்கையான’ இனிப்பு நடனமாடும்!

 

தேனீ வளர்ப்பு… செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

செய்ய வேண்டியவை...

தேனீ பெட்டிகளை நிழல் அதிகமுள்ள இடத்தில் வைக்க வேண்டும்

மலர்கள் அதிகமாக உள்ள இடத்தில் பெட்டியை வைக்க வேண்டும்

வாரத்துக்கு ஒரு நாள் திறந்து பார்த்தால் போதும்

தேனீ வளர்ப்புப் பெட்டியின் அடிப்பாகத்தில் மெழுகு இருக்கிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும்

தேனீ பெட்டியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இரவில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்

பெட்டியைத் திறந்து பார்க்கும்போது, பக்கவாட்டிலிருந்துதான் திறக்க வேண்டும். இல்லையென்றால், தேனீ கொட்டிவிடும் சாத்தியம் உண்டு

வண்ணத்துப்பூச்சிகள், தேனீப் பெட்டியில் முட்டையிட்டுச் செல்லும் சாத்தியம் உள்ளது. அவ்வாறு முட்டையிட்டால், அது தேனீப் பெட்டியைப் பயனற்றதாக மாற்றிவிடும். தேனீக்கள் எல்லாம் வெளியேறிவிடும். எனவே, வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டிருந்தால், அதை தேங்காய் நார் கொண்டு தேய்த்து அகற்றிவிடலாம்.

செய்யக் கூடாதவை...

நமது வாசனையைத் தேனீக்கள் நினைவில் வைத்திருக்கும். எனவே, தேனீப் பெட்டிக்கு அருகில் செல்லும்போது, உடலில் வாசனைத் திரவியங்களின் நெடி இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், தேனீ கொட்டிவிடும்

புகைப்பிடித்துவிட்டு, மது அருந்திவிட்டு தேனீப் பெட்டிக்கு அருகில் செல்லக் கூடாது

நீர் தேங்கும் இடத்தில் தேனீப் பெட்டியை வைக்கக் கூடாது. அதேபோல எறும்பு அதிகமுள்ள இடத்திலும் வைக்கக் கூடாது.

தேனீப் பெட்டியை அடிக்கடி திறந்து பார்க்கக் கூடாது. அதேபோல அடிக்கடி தேனீப் பெட்டியின் இடத்தையும் மாற்றக் கூடாது

தேனீக்கள்… சில தகவல்கள்…

ஒவ்வொரு தேனீப் பெட்டியிலும் ராணித் தேனீ, ஆண் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்கள் இருக்கும்

ஒவ்வொரு தேனீப் பெட்டியிலும் ஒரேயொரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். ஆண் தேனீக்கள் 50 முதல் 100 எண்ணிக்கையில் இருக்கும். வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.

அந்த ராணித் தேனீ ஒரு நாளைக்கு 300 முதல் 400 முட்டைகள்வரை இடும்

ஒரு ராணித் தேனீயின் வாழ்நாள் 3 வருடங்கள். அதில் முதல் ஒன்றரை வருடம் மட்டுமே அது முட்டையிடும்

ராணித் தேனீயின் முட்டையில் கருவுற்ற முட்டை, கருவுறாத முட்டை என இரண்டு விதம் உள்ளது. கருவுற்ற முட்டையிலிருந்து ராணித் தேனீயும் வேலைக்காரத் தேனீக்களும் பிறக்கின்றன. கருவுறாத முட்டையிலிருந்து ஆண் தேனீக்கள் வருகின்றன.

கருவுற்ற முட்டையிலிருந்து எந்தத் தேனீ முதலில் வெளிவருகிறதோ அதுதான் ராணித் தேனீ. மற்றவையெல்லாம் வேலைக்காரத் தேனீ.

‘ராயல் ஜெல்லி’ என்று சொல்லப்படும் அரச உணவை வேலைக்காரத் தேனீக்கள்தான் சுரக்கும். அதுவும் அவை பிறந்து 2 நாட்களுக்கு மட்டுமே.

ஆண் தேனீ கொட்டாது. வேலைக்காரத் தேனீக்கள்தான் கொட்டும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x