Published : 14 Oct 2017 10:33 AM
Last Updated : 14 Oct 2017 10:33 AM

மேகம் போலலையும் வரையாடு!

 

ந்தியாவின் தேசிய விலங்கு, புலி. தமிழகத்தின் மாநில விலங்கு, நீலகிரி வரையாடு. அதனாலோ என்னவோ, புலிக்குத் தரும் முக்கியத்துவத்தை, இதுவரை எந்த ஒரு அரசும் வரையாட்டுக்குத் தரவில்லை. விளைவு… இன்று, வரையாடு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது!

‘வரை’ என்ற தமிழ்ச்சொல் மலையைக் குறிக்கும். ‘ஆடு’ என்பது, இந்த உயிரினம் ஆட்டினத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கிறது. மலைகளில் வாழ்கின்ற ஆடுகள் என்கிற பொருளில் இதற்கு வரையாடு என்று பெயர் வந்தது. இதைத்தான் சீவகசிந்தாமணி இப்படிக் குறிக்கிறது: ‘ஓங்கு மால்வரை வரையாடு’. இதன் பொருள், உயர்ந்த மலைகளிலே உலவுகிற வரையாடு என்பதாகும். இதர சங்க இலக்கியங்களில், அந்த உயிரினம் ‘வருடை’ என்று குறிப்பிடப்படுகிறது.

உயிரின வகைப்பாட்டியலில் (டாக்சானமி) குளம்புடையவை வரிசையில் வைக்கப்படும் இந்த உயிரினம், ஆட்டினத்தைச் சேர்ந்தது. உலகில் வேறெங்கும் தென்படாத நீலகிரி வரையாடு, இந்தியாவில் மட்டுமே வாழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அதுவும் குறிப்பாகத் தமிழகம், கேரளப் பகுதிகளில் உள்ள மலைகளில் இந்த வரையாடுகள் தென்படுகின்றன. தமிழகத்தில் நீலகிரிப் பகுதியில் அதிக அளவில் இவை தென்பட்டாலும், சிறுவாணி மலைப் பகுதி, பழனி மலைப் பகுதி, வில்லிப்புத்தூர், தேனி, திருநெல்வேலி மலைப் பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. கேரளத்தில் ‘ஹை ரேஞ்ச்’ எனப்படும், மூணாறு மலைப் பகுதியில், குறிப்பாக எரவிக்குளம் தேசியப் பூங்காவில் இவை அதிகமுள்ளன.

வரலாறும் வாழ்விடமும்

நீலகிரி வரையாடுகள் குறித்துப் பொதுவெளிக்கு முதன்முதலில் எடுத்துச் சென்றது ஆங்கிலேயே அதிகாரிகள்தான். சொல்லப்போனால், நீலகிரி பீடபூமியின் வரலாறு என்பது நீலகிரி வரையாட்டின் வரலாறும் ஆகும்.

சோலைக் காடுகள் நிறைந்த, தொதவர்கள் (Toda) அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவந்த நீலகிரி மலைப் பகுதிக்கு, ஆங்கிலேயர்களின் வருகை என்பது 1804-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. 1823-ம் ஆண்டு ஜான் சல்லிவன் அங்கு ஒரு வீட்டைக் கட்டி குடியேறினார். நீலகிரியில் குடியேறிய முதல் ஐரோப்பியர் இவர்தான். அதன் பிறகு, நிறைய ஆங்கிலேய அதிகாரிகள் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்குப் பொழுதுபோக்கே வேட்டையாடுவதுதான். அப்படி வேட்டையாடப்பட்ட விலங்குகளில் வரையாடுகளும் ஒன்று.

வேட்டையாடிய அதிகாரிகள், அதைப் பற்றிய குறிப்புகளையும் எழுதிவைக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். அப்படித் தென்படும் குறிப்புகளில், வரையாடு பற்றிய முதல் பதிவு, ஷேக்ஸ்பியர் என்பவரால் 1862-ம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் வரையாடு

சுதந்திர இந்தியாவில், வரையாட்டைப் பற்றி 1965-ம் ஆண்டில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டான்லி ஹென்றி ப்ரேட்டர் என்ற ஆங்கிலேய இயற்கையியலாளரால், வரையாட்டைப் பற்றிய சில தகவல்கள் கிடைக்கின்றன. இது, நீலகிரி வரையாடுகளைப் பற்றி முதன்முதலாக விரிவான ஆய்வை மேற்கொண்ட பிரபல உயிரியலாளர் ஜார்ஜ் ஷேலரின் வரையாடுகள் தொடர்பான ஆய்வறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது. எனினும் ப்ரேட்டருக்கு முன்பே, 1963-ம் ஆண்டில் ‘நீல்கிரி கேம் அசோஸியேஷன்’ (தற்போது, நீலகிரி காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம்) எனும் அமைப்பால் நீலகிரி வரையாடுகள் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த அமைப்பின், அன்றைய கவுரவக் கண்காணிப்பாளராக இருந்த இ.ஆர்.சி.டேவிதார், அந்தக் கணக்கெடுப்பை நடத்தினார்.

‘இந்த நீலகிரி வரையாடுகள் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக இருப்பதாலும், இவற்றின் பரவல் மிகக் குறுகிய இடத்தில் இருப்பதாலும், அழியும் நிலையில் உள்ள உயிரினங்களைப் பற்றி ஐ.யூ.சி.என். வெளியிடும் ‘சிவப்புப் புத்தக’த்தில் இடம்பெற இவை தகுதி பெற்றுவிட்டன’ என்று ஷேலர் தனது ‘அப்சர்வேஷன்ஸ் ஆன் தி நீல்கிரி தார்’ எனும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். வரையாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஷேலர் இந்தியாவுக்கு வந்த 1969-ம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால், இன்று அந்த வரையாடுகளின் நிலை எப்படியிருக்கும்?

உடலமைப்பும் எண்ணிக்கையும்

நீலகிரி மலைப் பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வந்த காலத்திலிருந்தே, வேட்டையின் காரணமாக இந்த வரையாடுகளின் எண்ணிக்கை, வரலாறு நெடுகிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வந்திருக்கிறது. 1927-ம் ஆண்டு சுமார் 400 வரையாடுகள் இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், 1963-ம் ஆண்டில் டேவிதார் நடத்திய கணக்கெடுப்பில் 292 வரையாடுகள் தென்பட்டன. அந்தக் கணக்கை அடிப்படையாக வைத்து, அநேகமாக சுமார் 400 வரையாடுகள் நீலகிரி மலைப்பகுதியில் இருக்கலாம் என்று டேவிதார் கருதினார். தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில் சுமார் 1,500 வரையாடுகள்வரை இருப்பதாகத் தெரியவந்தது. அதற்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2015-ம் ஆண்டு ‘உலக இயற்கை நிதியம்’ (டபிள்யூ.டபிள்யூ.எஃப்) தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் நடத்திய ஆய்வில் சுமார் 3,122 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், அம்மாநில அரசு மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுமார் 1,420 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. அவற்றில் சுமார் 664 வரையாடுகள், எரவிக்குளம் தேசியப் பூங்காவில் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த தேசியப் பூங்காவுக்கு கடந்த ஜூலை மாதம் சென்றிருந்தேன். பொதுவாக வரையாடுகள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. அதனால், மனித நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் அவற்றைப் பார்ப்பது மிகவும் கடினம் என்பார்கள். ஆனால், எரவிக்குளத்தில் நான் பார்த்த காட்சி வேறு. அவை கூச்ச சுபாவம் கொண்டவை அல்ல. படங்களைப் பாருங்கள். அவை மனிதர்களுடன் எவ்வளவு நெருக்கமாக, அதேநேரம் மனிதர்களைச் சட்டை செய்யாமல் உலவுகின்றன- இதற்குக் காரணம் இந்த தேசியப் பூங்காவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருவதுதான்.

பாதுகாக்கும் எரவிக்குளம்

1971-ம் ஆண்டுவரை, எரவிக்குளம் வனப்பகுதி கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எரவிக்குளம் கேரளத்தின் மூணாறு பகுதியில் உள்ளது. என்றாலும், இந்தப் பகுதிக்கு முதன்முதலில் வந்தவர்கள், மதுரையிலிருந்து வந்த முதுவர்கள்தான். வேலை தேடி, தமிழர்கள் இங்கு வந்தனர். இன்றைக்கு மூணாறில் இருக்கும் தமிழர்கள் அநேகமாக மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையினராக இருக்கலாம்.

இந்தப் பகுதியிலிருந்த காட்டுமலை, பூவார், கன்னி மலை, கரிம்குளம், சிவன்மலை, தேவிமலை ஆகிய ஐந்து கிராமங்களுக்குத் தலைவராக கண்ணன் தேவன் என்பவர் இருந்தார். அதனால் இந்த மலைப் பகுதி கண்ணன் தேவன் மலை என்று அழைக்கப்பட்டது. இங்கு ஆங்கிலேயர்கள் முதன்முதலாக 1790-ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தனர். அவர்களும் வேட்டையில் ஆர்வமுடையவர்களாகவே இருந்தனர். அதே அளவு, காட்டுயிர்களைப் பாதுகாக்கவும் நிறைய நடவடிக்கைகளை எடுத்தனர். இந்தப் பகுதியிலிருக்கும் காட்டுயிர்களை, குறிப்பாக நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கென்றே அவர்கள் ‘ஹை ரேஞ்ச் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சங்கம்’ என்ற ஒன்றை நிறுவினர். சி.பி.கோல்ட்ஸ்பரி என்ற ஆங்கிலேயர்தான் இந்தச் சங்கத்தைத் தொடங்கினார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஜான் கோல்ட்ஸ்பரி அந்தச் சங்கத்தில் கவுரவ உறுப்பினராக இருந்தபோது, எரவிக்குளம், தேசியப் பூங்கா அங்கீகாரம் பெற மூல காரணமாக இருந்தார். இன்று அந்தப் பூங்கா, யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னம் என்கிற அங்கீகாரம் பெற்ற நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

1969-ம் ஆண்டு நீலகிரி வரையாடுகளைத் தேடி இந்தியா வந்த ஜார்ஜ் ஷேலர், எரவிக்குளத்திலும் ஆய்வு நடத்தியிருக்கிறார். அப்போது இங்கு 439 வரையாடுகளைக் கண்ட அவர், இந்தப் பகுதியில் அநேகமாக சுமார் 500 வரையாடுகள்வரை இருக்கலாம் என்ற முடிவுக்குவந்தார். 1969 முதல் 2017-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை வெறும் 164 ஆக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்றால், காட்டுயிர்ப் பாதுகாப்பில் நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்! கேரளத்திலாவது நிலைமை பரவாயில்லை. ஷேலரின் கணக்குப்படி, 1969-ல் நீலகிரியில் மட்டும் சுமார் 300 வரையாடுகள் இருந்தன. இன்று, நீலகிரியில் அவற்றைக் காண்பதே கடினமாக இருக்கிறது. என்ன காரணம்?

வரையாடுகளின் வாழ்விடச் சிக்கல்

சுமார் 1,200 மீட்டர் முதல் 2,600 மீட்டர் வரையிலான மலை உச்சியில் வாழும் தன்மையைக் கொண்டவை வரையாடுகள். அவ்வளவு உச்சியில் சோலைக் காடுகளும் புல்வெளி நிலங்களுமே அதிகமிருக்கும். எனவே, இவற்றின் உணவில் சுமார் 65 சதவீதம் புற்கள்தான். தேயிலை, காபி போன்ற பணப் பயிர்கள் பயிரிடுவதாலும் ஒற்றைப் பயிர் சாகுபடி விவசாய முறையாலும் மனிதர்களால் உருவாக்கப்படுகிற காட்டுத் தீயாலும் பருவநிலை மாற்றத்தாலும் சோலைக் காடுகளும் புல்வெளி நிலங்களும் அழிந்துவருகின்றன. வரையாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு இவை முக்கியமான காரணங்கள். தவிர, கள்ள வேட்டையாலும், முறைப்படுத்தப்படாத சுற்றுலாவாலும் நீலகிரி வரையாடுகள் அருகிவருகின்றன.

இந்தியாவில் நீலகிரி வரையாடுகளைப் பற்றி ஆய்வு செய்த ஷேலர் தன் அனுபவங்களை ‘ஸ்டோன்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ என்ற புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். அதில் அவர், வரையாடுகளை ‘மேகம்போல் அலையும் ஆடுகள்’ என்று குறிப்பிடுகிறார். காரணம், மலை உச்சியில், மேகங்களோடு மேகமாக இந்த வரையாடுகளும் மனிதர்களின் கண்களுக்குத் தென்படாமல் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்ந்துவிடுமாம். இன்றைக்கு மேகம்போலவே காணாமல் போய்விடக் கூடிய அபாயத்தில் இருக்கின்றன நீலகிரி வரையாடுகள். நாளை வரும் நமது சந்ததியினர், மாநில விலங்கை ஒளிப்படங்களில் மட்டுமே பார்க்கும் அவலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த உண்மையை ஜீரணிக்கத்தான் கடினமாக இருக்கிறது!

முழுமையான கட்டுரைக்கு ‘தி இந்து’ தமிழ் தீபாவளி மலரை வாசியுங்கள் பக்கங்கள் 324, விலை - ரூ. 140

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x