Published : 07 Oct 2017 11:32 AM
Last Updated : 07 Oct 2017 11:32 AM

சென்னைக்கு வந்த சைபீரியப் பறவை!

‘கிரே டெய்ல்டு டாட்லர்!’

சமீபத்தில் சென்னைக்கு... ஏன், இந்தியாவுக்கே முதன்முறையாக வந்து சென்றிருக்கிறது இந்த அரிய பறவை. ஆஸ்திரேலியாவில் பரவலாகத் தென்படும் இந்தப் பறவை, சைபீரியாவைத் தாயகமாகக் கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது. சுந்தரவேல், சிவகுமார் என்கிற இரண்டு பறவை ஆர்வலர்கள், பழவேற்காட்டில் செப்டம்பர் 30-ம் தேதி இப்பறவையை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

“ஆய்ஸ்டர் கேட்சர் எனும் அரிய பறவையைக் காண்பதற்காக அன்று நாங்கள் சென்றிருந்தோம். ஒரு சிறிய மணல் குன்றின் மீது உள்ளான் (சாண்ட்பைப்பர்) போன்று ஒரு பறவை அமர்ந்திருந்தது. அந்தப் பறவையை ஒளிப்படம் எடுத்து கணேஷ் ஜெயராமன், பிரவீன் ஜெயதேவன், ஞானஸ்கந்தன் உள்ளிட்ட முக்கியமான பறவை ஆர்வலர்களிடம் காட்டியபோது, அது கிரே டெய்ல்டு டாட்லர் (Grey tailed tattler) என்று தெரியவந்தது.

07chnvk_sundaravel.jpg சுந்தரவேல்

இந்தியாவில் இந்தப் பறவை இதற்கு முன் தென்பட்டதில்லை. வங்கதேசத்தில் 2013-ம் ஆண்டில் இந்தப் பறவை தென்பட்டதாக ஒரு குறிப்பு இருக்கிறது. மற்றபடி இது ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட கிழக்கு ஆசிய வலசைப் பாதையில் பரவலாகத் தென்படும்” என்கிறார் சுந்தரவேல்.

நீளமான இறகுகள், வால், கறுப்பு நிறத்தில் நேரான அலகு, மஞ்சள் நிறக் குட்டைக் கால்களைக் கொண்ட இந்தப் பறவை, கடல் பகுதிகளில் தென்படக் கூடியது. கணுக்காலிகள், பூச்சிகள், மீன்கள் போன்றவை இந்தப் பறவையின் முக்கிய உணவு. இதற்கு ‘கிரே அல்லது கிரே-ரம்ப்டு சாண்ட்பைப்பர்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x