Published : 12 Dec 2015 02:41 PM
Last Updated : 12 Dec 2015 02:41 PM

வீட்டுத் தோட்டம்: எளிய யோசனைகள்

நகர்ப்புறத்தில் இட நெருக்கடி, நேரமின்மை போன்றவை எல்லாம் இருந்தாலும், நம் வீட்டிலேயே மாடியில், பால்கனியில், கிடைக்கும் சின்ன இடத்தில் தோட்டம் போடுவது மனதுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன், வயிற்றுக்கு ஆரோக்கியமான உணவையும் தரும். அதற்கான எளிய யோசனைகள்:

விதைகளும், இயற்கை எருவும் தோட்டம் போட அடிப்படைத் தேவை. இயற்கை பூச்சிக்கொல்லி - பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பற்றி நிபுணர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் தோட்டம் போட நினைப்பவர்கள் முதலில் கீரைகளை வளர்க்க முயற்சிக்கலாம்.. கீரைகளை வளர்ப்பது எளிது, நல்ல விளைச்சல் கிடைக்கும். அதன் மூலம் கிடைக்கும் தன்னம் பிக்கையின் அடிப்படையில் தோட்டத்தை விரிவுபடுத்தலாம்.

மாடியில் போடும் இயற்கைவழி வேளாண் தோட்டத்துக்குப் பெரும் உதவியாக இருப்பது தென்னைநார்க் கழிவு. இந்தத் தென்னைநார்க் கழிவுடன் எரு சேர்த்து விற்கப்படுகிறது. மாடித் தோட்டம் அல்லது நகர்ப்புறத் தோட்டங்களில் மண்ணுக்குப் பதிலாகப் பைகளிலோ, தொட்டிகளிலோ இதை நிரப்பி தாவரத்தை வளர்க்கலாம். இதற்குக் குறைந்த தண்ணீரே போதும், இந்தக் கழிவு தன் எடையைப் போல 10 மடங்கு தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

நம்முடைய வீட்டில் உருவாகும் மக்கக்கூடிய கழிவை, குறிப்பாகச் சமையலறைக் கழிவை வீட்டுத் தோட்டத்துக்கு ஊட்டமளிக்கப் பயன்படுத்தலாம். ஆனால், உரமாக மாற்றப்பட்ட பிறகே பயன்படுத்த வேண்டும். மாட்டுச் சாணத்துடன் சமையலறைக் கழிவைச் சேர்த்து உரமாக மக்க வைக்க வேண்டும். கோமயத்தைச் சிறந்த பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம்.

ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் காய்கறிகள்: கத்தரிக்காய், தக்காளி, குடமிளகாய், மிளகாய்.

சின்ன இடத்தில் வளர்க்கக்கூடிய மூலிகைகள்: துளசி, ஓமவல்லி, புதினா, கற்பூரப்புல் (lemongrass).

- நேயா



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x