Last Updated : 02 Jul, 2016 01:20 PM

 

Published : 02 Jul 2016 01:20 PM
Last Updated : 02 Jul 2016 01:20 PM

விவசாயிகளுக்குக் குரல் கொடுத்தால், ஏன் இப்படி கொதிக்கிறார்கள்?

இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாதது, உள்நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகளிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவிலிருந்து அவர்களுக்கு ஓர் ஆதரவுக் கரம் நீண்டிருக்கிறது. கொங்கு மண்ணின் மைந்தனான ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜல்லிக்கட்டை ஆதரித்து ‘டக்கரு டக்கரு’என்கிற மியூசிக் வீடியோவைச் சமீபத்தில் வெளியிட்டார். வெளியிட்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே 12 லட்சம் ஹிட்களைத் தாண்டியது. சினிமாவுக்கு இசையமைப்பதில் தீவிரம் காட்டிவரும் ஆதி, ஜல்லிக்கட்டு பக்கம் நகர்ந்தது எப்படி? அவரே சொல்கிறார்:

ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்காக ஏன் மியூசிக் வீடியோ எடுக்க வேண்டுமென தோன்றியது?

பொங்கல் நேரத்தில் மட்டுமே பரபரப்பாக நிகழ்த்தப்படும், பேசப்படும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. மற்றொருபுறம் ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பிரச்சாரத்தை ஒரு சில அமைப்புகள் முன்னெடுத்தன. இந்த இரு தரப்பினருக்கும் இடையில் காளை வளர்ப்புக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த மனிதர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அவர்களை நேரில் பார்த்தபோதுதான், வெறும் விளையாட்டுக்காக மட்டும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படவில்லை; விவசாயிகளின் வாழ்க்கை மாடுகளுடன் பின்னிப்பிணைந்திருப்பது கண்கூடாகத் தெரிந்தது. ‘ஜல்லிக்கட்டைத் தடை செய்யாதீர்கள்’ எனத் திரும்பத் திரும்பக் குரல் கொடுத்தே அவர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.

ஏதாவது குறிப்பிட்ட சம்பவம் இந்த வீடியோவுக்குக் காரணமாக இருந்ததா?

இந்த ஆண்டு பொங்கல் நேரத்தில் தொலைக்காட்சியில் ஓடிய தொடர் விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை என் மனதை ஆக்கிரமித்திருந்தன. நிச்சயமாக இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்கிற தூண்டுதல் ஏற்பட்டது.

சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேசியதைப் பார்த்தபோது, ஜல்லிக்கட்டு பிரச்சினையின் உண்மையான பரிமாணம் புரிந்தது. அவரை நேரில் சந்தித்தபோது, இன்னும் தெளிவு கிடைத்தது. அதற்குப் பிறகுதான் ஜல்லிக்கட்டுத் தொடர்பாகத் தீவிரமாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

இந்த வீடியோவில் ஜல்லிக்கட்டைத் தடை செய்வதற்குப் பின்னால், இந்தியாவின் பாரம்பரிய மாட்டு இனங்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான பன்னாட்டு சதி என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? இந்தியக் கால்நடை சந்தையைக் கைப்பற்றும் சர்வதேச நடவடிக்கை எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்வது சரியா?

நான் சந்தித்த சில விவசாயிகள், ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் சதித் திட்டம் இருப்பதாகச் சொன்னாலும், யாருடைய பெயரையும் அவர்கள் குறிப்பிடவில்லை. எந்தத் தனிப்பட்ட நிறுவனத்தின் பெயரையும் என் படத்தில் சுட்டிக்காட்டவில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

காளை மாடுகளை வைத்து ஏர் உழுதபோது விவசாயிக்கு டிராக்டர் தேவைப்படவில்லை. சில காளைகள் மட்டும் கோயில் காளைகளாக வலம் வந்தன. ஜல்லிக்கட்டுக்காகவே சில காளை இனங்கள் செழிப்பாக வளர்க்கப்பட்டன. அவற்றில் உயர் ரகத்தைத் தேர்ந்தெடுத்துப் பசுக்களோடு இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். இதனால் ஆரோக்கியமான உள்நாட்டு கன்றுகள் பரவலாகின.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கால்பதித்த ‘பீட்டா’ போன்ற விலங்கு நல அமைப்புகள் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சொல்லி எதிர்க்கிறார்கள். ‘தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென நினைத்தால், மாடுகளைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டியதுதானே, எதற்காக ஜல்லிக்கட்டில் காளைகளைச் சித்திரவதை செய்கிறீர்கள்?’ என இந்தப் படத்துக்கான விமர்சனமாக, எனக்கு டிவீட் செய்திருக்கிறது பீட்டா.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு என்பது சித்திரவதை அல்ல. குடும்ப உறுப்பினர்போலப் பாசத்துடன் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு வளர்க்கும் காளைகளை, எப்படிப் பாதுகாப்பில்லாமல் விவசாயிகள் போட்டியில் ஈடுபடுத்துவார்கள். கடந்த 2009-லிருந்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர் ஆகியோரின் முன்னிலையில், அவர்களுடைய கண்காணிப்பின் கீழ்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதேபோலப் பிரதமரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரும்படி, தமிழக முதல்வர் மனு கொடுத்திருக்கிறார். தமிழக அரசு ஆதரிக்கும் ஒரு பாரம்பரியத்தை, அரசு முன்னிலையில் நடத்தப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்யக் கோருவது யார் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இந்த வீடியோவின் மூலம் என்ன மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா என்னுடைய தொழில். என்னுடைய கருத்துகளை இசை மூலமாகத் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறேன். இந்த வீடியோ வெளியிடப்பட்ட 6 நாட்களுக்குள்ளேயே 12 லட்சத்துக்கும் அதிகமான ஹிட் கிடைத்திருக்கிறது. 60 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்திருக்கிறார்கள். ஆதரவாகப் பலரும் கருத்துகளைத் தெரிவித்துப் பதிவிட்டுவருகிறார்கள். வேறென்ன எனக்கு வேண்டும்?

சரி, நீங்கள் மாடு வளர்த்திருக்கிறீர்களா?

நான் அசல் கிராமத்துப் பையன். கோயம்புத்தூர் அருகேயுள்ள புளியம்பட்டிதான் என் ஊர். தாத்தாவும் அம்மாவும் விவசாயிகள். எங்கள் தோட்டத்திலேயே 30 மாடுகள் இருந்தன. மாட்டின் பாலைக் கறந்து, அங்கேயே குடிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நாளடைவில் மாடுகளின் எண்ணிக்கை குறைவதையும் பார்த்தேன். இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையோடு, அதைப் பொருத்திப் பார்க்கத் தோன்றியது. ஜல்லிக்கட்டைத் தடை செய்யும் முயற்சி பாரம்பரிய மாட்டு இனங்களை அழிக்கும் மிகப் பெரிய திட்டத்துக்கான அடித்தளம் எனத் துறை சார்ந்தவர்களோடு பேசும்போது புரிந்தது. விவசாயிகளின் கையில் யூ டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் எல்லாம் இல்லை. அந்த நவீன சமூக வலைதளத் தொடர்புகள் என்னிடம் இருப்பதால், அவர்களுக்கான குரலாக ஒலிக்க முடிவெடுத்தேன்.

நானும் சும்மா பேசிக்கொண்டிருக்கக்கூடாது என்பதற்காக, காங்கேயம் காளை ஒன்றை வாங்கியிருக்கிறேன். சென்னையில் வளர்ப்பற்கான சூழல் இல்லாததால் ஊரில் வளர்த்துவருகிறேன்.

பெரும்பாலான பிரபலங்கள் பொதுக் காரியங்களுக்காகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். நீங்கள் அதிலிருந்து மாறுபட வேண்டுமென நினைக்கிறீர்களா?

‘ஹிப்ஹாப் தமிழா‘ என்கிற பெயரை நான் வைத்துக்கொண்டதே பொதுப் பிரச்சினைகளைப் பேசத்தான். 2011-ல் ‘எழுவோம் வா’ என்கிற பாடலின் மூலம் ‘ஹிப்ஹாப் தமிழன்‘ ஆல்பத்தை மத்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழல் சீர்கேடு, சாதிப் பிரச்சினை போன்றவற்றை மையக் கருவாகக் கொண்டு ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறேன். என்னுடைய சினிமா புகழுக்கும் ‘டக்கரு டக்கரு’ முயற்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

‘டக்கரு டக்கரு’ படத்தின் முதல் பாதியைக் குறும்படப் பாணியிலும் பிற்பாதியை ஆவணப்படமாகவும் எடுத்தது ஏன்?

எப்போதுமே என்னுடைய தனிப் பாடல்களைக் குறும்படமாகத்தான் தயாரித்துவருகிறேன். அதே பாணியில்தான் ‘டக்கரு டக்கரை’யும் உருவாக்கினேன். அதேவேளையில் ஜல்லிக்கட்டு தொடர்பாகக் கடந்த ஐந்து மாதங்களாக நான் சந்தித்த மனிதர்கள் முன்வைத்த வாதம், இந்த முயற்சிக்கு அர்த்தம் சேர்க்கும் என நினைத்ததால் சேர்த்தேன்.

உங்களுடைய முயற்சிக்கு ஒரு புறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் கிளம்புவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘இசையமைக்கும் வேலையை மட்டும் நீ செய்தால் நல்லது’ எனப் பீட்டா என்னை விமர்சித்திருக்கிறது. இது யாருக்கும் சமூக அக்கறை இருக்கக்கூடாது எனச் சொல்வதுபோல இருக்கிறது. சாஃப்ட்வேர் இன்ஜினீயர் எதற்காக ஓட்டுப்போட வேண்டும் எனக் கேட்பது எவ்வளவு அபத்தமோ, அதே போலத்தான் என்னுடைய செயல்பாட்டைக் கண்டிப்பதும்.

திரைப்பட இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, அடிப்படையில் நான் சுதந்திர இசைக் கலைஞன். கடந்த ஆண்டுகூடச் சாதிக் கலவரத்தை விமர்சித்து ‘வாடி புள்ள வாடி’ என்கிற பாடலை வெளியிட்டேன். சமூக நடப்பு குறித்த எனது கருத்துகளைத் தொடர்ந்து இசை மூலமாக வெளிப்படுத்திவருகிறேன். ஒரு இசையமைப்பாளர் விவசாயிகளைப் பற்றி பேசக்கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், வெளி நாட்டினருக்கு இந்தியாவில் என்ன வேலை என்கிற கேள்வி எனக்கு எழுகிறது.

‘டக்கரு டக்கரு’ மியூசிக் வீடியோவைக் காண: >http://bit.ly/29ty4io

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x