Last Updated : 01 Apr, 2017 10:20 AM

 

Published : 01 Apr 2017 10:20 AM
Last Updated : 01 Apr 2017 10:20 AM

வாசிப்பை வசப்படுத்துவோம்: இயற்கையாக வாழ முடியாதா என்ன?

‘பூமியின் மீது மெள்ள நட!' மிகவும் மென்மையாக இருக்கிறதல்லவா இந்த வரி? ஆனால், அது ஒரு வாழ்க்கை முறை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். நம் வாழ்க்கை முறை அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் விக்ரம் சோனி.

‘நேச்சுரலி' எனும் புத்தக அட்டையில் இடம்பெற்றிருக்கும் இந்த வரி, புத்தகம் சொல்ல வரும் விஷயத்துக்கு மேலும் அழகூட்டுகிறது. இந்தப் பூமியில், இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.

காடு காத்தவர்

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சோனி. அங்கிருந்து ஓய்வுபெற்ற பிறகும் இயற்பியல், இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான களங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். அவர் எழுதி, ‘ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புத்தகம்தான் ‘நேச்சுரலி'. பேராசிரியர், எழுத்தாளர் என்பதைத் தாண்டி, விக்ரம் சோனிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. டெல்லியில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதற்காக இவரும் இவரது நண்பர்களும் இணைந்து தொடுத்த பொதுநல வழக்குதான், சுற்றுச்சூழல் தொடர்பாக நாட்டில் தொடரப்பட்ட முதல் பொதுநல வழக்கு.

இந்தப் புத்தகத்தின் அறிமுக நிகழ்வுக்காகச் சமீபத்தில் சென்னையில் உள்ள ‘எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை'க்கு வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து...

சித்தாந்தத்தில் அடங்காத இயற்கை

“இமயமலையில் உள்ள குமாவுன் பகுதியில், காடுகளும் மலைகளும் அடர்ந்த நைனிடால் எனும் ஊரில் நான் பிறந்தேன். எனது தந்தை வன அலுவலர். அவருடன் காடுகளில் பல கல் தொலைவுக்கு அலைந்திருக்கிறேன். அப்போது நான் பெற்ற அனுபவங்கள், வாழ்நாள் முழுவதும் என்னை இயற்கை மீதான பிடிப்புடன் இருக்கப் பணித்தன.

இயற்கையின் இயங்கியல் முற்றிலும் வேறானது. அதில் எல்லா உயிர்களுக்கும் பங்குண்டு. ஆனால் மனிதனோ, தான் மட்டுமே உயர்ந்தவன், தனக்கு மட்டுமே பூமி சொந்தம் என்பதுபோல அகங்காரமாக நடந்துகொள்கிறான். அதனால் இயற்கையின் இயங்கியலின் சமநிலை சீர்குலைந்தது. அதனால் நாம் நிறைய பேரழிவுகளைக் கடந்து வந்திருக்கிறோம். மீண்டும் அந்தச் சமநிலையைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒரு புதிய வாழ்வியல் முறையை நாம் கைக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அதை எப்படிச் செய்வது என்று யோசித்த கணத்தில்தான் இந்தப் புத்தகம் உருப்பெற்றது.

கார்ல் மார்க்ஸ் சொன்ன இயங்கியல் பொருள்முதல்வாதமோ அல்லது ஜான் மேனார்டு கீன்ஸ், ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோர் சொன்ன ‘தாராளச் சந்தை' சிந்தனையோ... இப்படி எந்தச் சித்தாந்தச் சிமிழுக்குள்ளும் நமது பூமி அடங்கிவிடவில்லை.

வெள்ள வடிகால்களின் தேவை

“ஒரு சின்னப் பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள். இரண்டு கண்ணாடிக் குடுவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றில் நீரையும் இன்னொன்றில் மணலையும் நிரப்புங்கள். இப்போது, குடுவையில் உள்ள நீரை, மணல் உள்ள குடுவையில் ஊற்றுங்கள். என்ன தெரிகிறது? நீர்க் குடுவையிலிருந்த பெருமளவு நீரை, மணல் உறிஞ்சியிருக்கும். ஆம், மணல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மை கொண்டது.

ஆற்றங்கரையோரம் பாருங்கள். அதன் இரண்டு புறங்களிலும் மணல் இருக்கும். அவைதான் வெள்ள வடிகால்கள். இந்த மணலுக்கு அடியில் குறைந்தபட்சம் 40 அடி ஆழம்வரை நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆற்றின் நீளம், வெள்ள வடிகால்களின் அகலம் ஆகியவற்றின் அடிப்படையில், மணலுக்குள் சேமிக்கப்படும் நீரின் அளவும் மாறுபடும்.

வருடத்திற்குச் சுமார் 1,300 மில்லிமீட்டர் மழையைப் பெறும் தமிழகம் போன்ற மாநிலங்களில் இப்படியான வெள்ள வடிகால்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை முறையாகப் பாதுகாத்தால் ஒவ்வொரு தமிழரும் இயற்கை ‘மினரல் வாட்டர்' அருந்த முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக, மணல் கொள்ளையால் அப்படியான வெள்ள வடிகால்களைத் தமிழகம் இழந்துவருகிறது.

கழிவு பூமிக்குக் கேடு

1920-களில் தாமஸ் மிட்ஜ்லி எனும் வேதியியலாளர் முக்கியமான இரண்டு கண்டுபிடிப்புகளைச் செய்தார். ஒன்று, வாகனங்களின் இன்ஜினில் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கப் பெட்ரோலுடன் ஈயத்தைச் சேர்த்தது. இன்னொன்று, குளிர்சாதனப் பெட்டிகளில் குளோரோ ஃபுளூரோ கார்பன் எனும் வாயுவைச் சேர்த்தது. இந்த இரண்டு கண்டுபிடிப்புகள் தந்த கழிவுகள்தான் ஓசோனில் துளை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இப்படியான கண்டு பிடிப்புகளை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது, ‘இது பூமியின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதா?' எனும் கேள்வியை நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா?

தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டுவந்து கொட்டும் இந்தக் கழிவுகள் காற்றை, மண்ணை, நீரை, திறந்தவெளியை, காடுகளை, கடலை, உயிர்களை எப்படியெல்லாம் சிதைக்கின்றன? மனிதனின் உருவாக்கங்கள் எல்லாம் கழிவுகளையே தருகின்றன. ஆனால் இயற்கையைப் பாருங்கள். அது உருவாக்கும் எதுவொன்றும் கழிவு இல்லை. முக்கியமாக, நச்சுக் கழிவுகள் இல்லை. அப்படியே கழிவுகள் ஏற்பட்டாலும், அவற்றை உணவாக்கிக் கொள்ள இன்னொரு உயிரினத்தை, உணவுச் சங்கிலியில் இணைத்துவிடுகிறது இயற்கை. காலம்காலமாக உயிரினச் சுழற்சிச் சக்கரம் இப்படித்தான் சுழன்றுவருகிறது. ஆனால் மனிதன் உருவாக்கிய கழிவுகளால், எத்தனையோ உயிரினங்களை நாம் இழந்திருக்கிறோம்; இழந்து வருகிறோம். லண்டனில் உள்ள உயிரியல் சங்கம், ‘2006-ம் ஆண்டில் 29 சதவீத உயிரினங்களை இழந்தோம். 2015-ல் அந்த எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்திருக்கிறது' என்று எச்சரிக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?

புத்தரைப் பின்பற்றுவோம்

“இதுவரையில் இந்தப் பூமியில் தோன்றிய மிகச் சிறந்த சூழலியலாளர், விஞ்ஞானி யார் என்று என்னைக் கேட்டால், நான் கௌதமப் புத்தரைத்தான் சொல்வேன். சுயம், சமூகம், பிரபஞ்சம் எனும் மூன்று நிலைகளில் இயற்கையோடு இணைந்து வாழப் புத்தர் நமக்கான வழியைக் காட்டுகிறார்.

சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது, சமூகம் என்ற நிலையில் ஏற்றத்தாழ்வுகள் கடந்து அனைவரையும் சமமாக நடத்துவது, பிரபஞ்சம் எனும் நிலையில் அனைத்து உயிர்களிலும் தன்னைக் காண்பது ஆகிய வழிகளைப் பின்பற்றினால் இந்தப் பூமி இன்னும் பல காலம் தழைத்திருக்கும். சுருக்கமாக ‘பூமியின் மீது மெள்ள மெள்ள நடை பயில்வோம்!'’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x