Last Updated : 06 Dec, 2014 02:30 PM

 

Published : 06 Dec 2014 02:30 PM
Last Updated : 06 Dec 2014 02:30 PM

வறண்ட பகுதியில் தென்னஞ்சோலை: சாதித்த உடுமலை விவசாயி

தென்னை சாகுபடியில் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி ஜீரோ பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருவாய் ஈட்டி சாதித்திருக்கிறார் உடுமலை விவசாயி ஜி.செல்வராஜ் (55).

திருப்பூர் மாவட்டம், உடுமலை - பொள்ளாச்சி சாலையில் உள்ளது அந்தியூர் கிராமம். மெக்கானிக்கல் டிப்ளமோ படித்துவிட்டு, ஜவுளித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் செல்வராஜ். அதில் நஷ்டம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து விவசாயத்துக்குத் திரும்பினார்.

வீழ்ந்த தென்னைகளைத் தன்னுடைய சகோதரர்கள் ஜி.வேலாயுதசாமி, ஜி.நாராயணசாமி துணையுடன் இயற்கை வேளாண்மையின் மூலம் கம்பீரமாக நிமிர வைத்தார் இவர்.

முன்னுதாரணம்

பாரம்பரிய வேளாண் முறையிலிருந்து அங்கக முறைக்கு மாறப் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது விவசாயிகளின் மன உறுதி. இப்படி மாறும் தறுவாயில் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அங்கக வேளாண்மையில் புதிதாகக் கால் பதிக்க நினைக்கும் விவசாயிகளுக்கு அந்த இடையூறுகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் ஜி.செல்வராஜ்.

“சில ஆண்டுகளாகப் போதுமான மழை இல்லாததால், எங்கள் பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகளும், தனியார் காற்றாலை பண்ணைகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு நகரங்களில் குடியேறிவிட்டனர். எங்களது தென்னை மரங்களும் தண்ணீர் இன்றி காயத் தொடங்கின. 2002-ல் ஒரு மரத்தில் ஆண்டுக்கு 7 காய்கள் மட்டுமே காய்த்தன. பல்வேறு சிக்கல்கள் வந்தபோதும் ஒரு சொட்டு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகூடப் பயன்படுத்தக் கூடாது என்ற உறுதியோடு, அங்கக வேளாண்மையில் கவனம் செலுத்தினோம். இன்றைக்கு ஒரு தென்னை ஆண்டுக்கு 110 காய்களைத் தருகிறது.

இந்த விளைச்சல் படிப்படியாகக் கிடைத்தது. ஆயிரம் தென்னைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால், இதற்கான முதலீடோ எதுவுமில்லை” என்று செல்வராஜ் பெருமிதத்துடன் கூறுகிறார். அருகில் உள்ள தோப்புகள் வறண்டு காட்சியளிக்கும் நிலையில், இவரது தென்னந்தோப்பு சோலைவனமாக இருப்பதைக் காணும்போதே, அதை உணர முடிகிறது. சரி, எப்படி இதைச் சாதித்தார்?

அழிவைத் தடுக்க முடியும்

“இன்றைய நிலையில் ஒரு தென்னையிலிருந்து 150 காய்கள் கிடைக்கின்றன என்றால், அதில் 90 காய்கள் விளைச்சலுக்கும், பராமரிப்புக்குமே செலவாகிவிடுகின்றன. பின் எப்படி இதில் லாபம் சம்பாதிக்க முடியும்?

இதுவே இத்தொழிலின் அழிவுக்கு முதல் காரணம்" என்கிறார் செல்வராஜ். காட்டைச் சுத்தப்படுத்து வதற்காகப் பயன்படுத்தப்படும் டிராக்டர் மூலம் உழுதால், சொட்டுநீர் கருவிகள், பைப்புகள் சேதமடையும். அதை மாற்றுவதற்குத் தனியாகச் செலவு செய்ய வேண்டும். களை எடுத்தல், களைக் கொல்லிக்குச் செலவு, தொழுவுரம், உரம், பொட்டாசியம், சுமைக் கூலி, உரிகூலி என வியாபாரிகள்கூட விவசாயிகளைச் சுரண்டும் நிலை. இதுவே தென்னை விவசாயத்தின் தோல்விக்குக் காரணம்.

கழிவே உரம்

இவர்களது தோப்பில் கிடைக்கும் மட்டைகள், பாளை, தேங்காய் மட்டைகள், செடிகள் என எதையும் விற்பதில்லை. 4 தென்னைகளுக்கு நடுவே ஒரு ஸ்பிரிங்ளச் அமைத்து, அதன் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள். ஸ்பிரிங்ளரைச் சுற்றிலும் தேங்காய் நார், பாளை ஆகியவற்றுடன் மண் புழுக்கள், அதற்கு மேல் தென்னை மட்டைகளைப் போட்டு மூடி வைத்துவிடுகிறார்கள். இவர்களது தோப்பில் உழுவதில்லை. களை எடுப்பதில்லை. அதற்கான ஆள் கூலி, டிராக்டர் செலவில்லை.

உரம், பூச்சிக்கொல்லிச் செலவும் இல்லை. 5 பசு மாடுகள் மூலம் கிடைக்கும் சாணம், கோமயமே உரமாகிறது. இவர்களே பஞ்சகவ்யா தயாரித்து மரங்களுக்கு இடுகிறார்கள்.

இவர்களது அங்கக வேளாண்மையைக் கேள்விப்பட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்பட உயர் அதிகாரிகள், விவசாயிகள், வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் என இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோப்பைப் பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளனர். இவரது விவசாய அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 99768 07692 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x