Last Updated : 28 Feb, 2015 02:35 PM

 

Published : 28 Feb 2015 02:35 PM
Last Updated : 28 Feb 2015 02:35 PM

வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் வாட்டர் காந்தி

இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது என்று இவருடைய சாதனைப் பட்டியல் நீள்கிறது.

இந்தச் சாதனைகள் தேசிய அளவிலான சாதனைத் தொகுப்பான லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. வறண்ட கிணறுகளையும், ஆழ்குழாய் கிணறுகளையும், நீராதாரங்களையும் உயிர்ப்பிக்கும் எளிய தொழில்நுட்பத்துக்குச் சொந்தக்காரரான இவர் 'வாட்டர் காந்தி' என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

அகலாத நினைவு

இவருடைய அம்மா பல கி.மீ. தூரம் பானைகளைச் சுமந்து சென்று தண்ணீர் சுமந்து வந்த காட்சிகள் பசுமரத்தாணிபோல் இவர் மனதில் பதிந்திருக்கின்றன. இதனால் 25 ஆண்டு காலப் பணிக்குப் பின், நீராதாரங்களைப் புனரமைக்கும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவருகிறார். குடும்பம், வறுமை என்று பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி இச்சாதனைகளை அவரால் நிறைவேற்ற முடிந்திருக்கிறது.

கர்நாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை இவர் வளப்படுத்தியிருக்கிறார். நீர்நிலைகளை உயிர்ப்பிக்கும் திட்டங்களில் ஓராண்டுக்குள் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார். மழைநீரைச் சேகரித்து வளம்பெறும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி அளிக்கும் மகத்தான பணியையும் இவர் செய்துவருகிறார்.

300 ஆண்டுகளில் காலி

தமிழகத் தண்ணீர் தன்னிறைவுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கத் திருநெல்வேலிக்கு வந்திருந்த அவருடன் பேசியபோது, தன்னுடைய மாணவப் பருவத்தில் தண்ணீருக்காகத் தனது குடும்பம் பட்ட வேதனைகளில் இருந்து, தற்போது தண்ணீருக்காகத் தான் மேற்கொண்டிருக்கும் தவம் குறித்து விளக்கினார்:

360 கோடி ஆண்டுகளாக நிலத்தில் சேகரிக்கப்பட்ட தண்ணீரை, வெறும் 300 ஆண்டுகளில் மனிதர்கள் தீர்த்துவிட்டார்கள். மழை நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், நீராதாரங்களை உயிர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தண்ணீருக்காகக் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் மக்கள் படும் பாட்டை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி வருகிறேன். எனது தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்திருக்கிறேன்.

இருப்பதைச் சேமிப்போம்

குடிநீர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே, பயனற்று இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உயிர்ப் பித்துப் பெருமளவு தண்ணீரைப் பெறமுடியும். இதுபோல் வறண் டிருக்கும் ஏரிகளையும் உயிர்ப்பித்து விவசாயத்தைச் செழிக்க வைக்கலாம்.

சாக்கடை கழிவு நீரை அப்படியே நிலத்தில் 20 அடிக்குக் கீழே கொண்டு சென்றுவிட்டால் போதும். மண் அடுக்குகளே அதைச் சுத்திகரித்துவிடும்.

இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையில்லாமலும் இருக்கும் நிலை தற்போது உள்ளது.

இதனால் கிடைக்கும் மழையை நிலத்தடியில் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக அதிகச் செலவில்லாத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வறண்டிருக்கும் நீராதாரங்களை உயிர்ப்பித்துவருகிறேன்.

புதிய முறை

கழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள், பள்ளிகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள் என்னிடம் இருக்கின்றன.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்திருக்கிறேன்.

குடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத் தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்திருக்கிறேன். எனது தொழில்நுட்பங்கள் குறித்து இளம் பொறியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். 'வாட்டர் லிட்ரசி பவுண்டேஷன்' என்ற என்னுடைய அலுவலகத்தைச் சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் அவர்.

தண்ணீரைச் சேகரித்துப் பயன்படுத்தும் வழிமுறைகளை உலகுக்குச் சொல்லும் இவர் வான்மழை போலவே போற்றப்பட வேண்டியவர்தான்.

ஐயப்ப மசாகியைத் தொடர்புகொள்ள: 094483 79497

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x