Published : 29 Aug 2015 02:48 PM
Last Updated : 29 Aug 2015 02:48 PM

"மோடி செய்வது கிளைமேட் ஆசனம்!"- சுற்றுச்சூழல் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேர்காணல்

அரசியலில் சவாலான சில அமைச்சகங்கள், விஷய ஞானம் உள்ள சிலருக்குச் சில நேரம் கிடைத்துவிடுவதுண்டு. அப்படி ஒரு சவாலான அமைச்சகம், மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஜெய்ராம் ரமேஷுக்குக் கீழ் இந்த அமைச்சகம் 2009-ல் செயல்பட்டது. சுற்றுச்சூழல் சட்டங்கள் சமீபகாலத்தில் ஓரளவுக்காவது கடைப்பிடிக்கப்பட்டன என்றால், அதற்கு ஜெய்ராம் ரமேஷ் இட்ட அடித்தளம்தான் காரணம்.

அந்த அமைச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டதே, அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதற்குச் சான்று. திறமையான ஆட்சியாளர்கள் அடிக்கடி இடமாற்றலுக்கு உள்ளாவது 'அரசியலில் சாதாரண விஷயம்'தானே!

தான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலம் பற்றி 'கிரீன் சிக்னல்ஸ்' எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள அவர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 90-வது பிறந்தநாள் விழாவுக்காகச் சென்னை வந்திருந்தபோது பேசியதிலிருந்து...

நீங்கள் அமைச்சராக இருந்தபோது, பி.டி. கத்திரிக்காய் ஆய்வுகளுக்குத் தடை விதித்தீர்கள். தற்போது பி.டி. பருத்தி பயிர் செய்யப்பட்ட இடங்களில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. நீங்கள் இதை எப்படி அணுகுகிறீர்கள்?

நாட்டில் இன்று 98 சதவீத விவசாயிகள் பி.டி. பருத்தியை விளைவிக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குப் பணம் தேவை. எங்கெல்லாம் பாசன வசதி உள்ளதோ, அங்கெல்லாம் பி.டி. பருத்தி நல்ல லாபத்தைக் கொடுத்தது. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருக்கும் இடங்களில், அதை விளைவித்தார்கள். அங்கே பலன் கிடைக்கவில்லை. அதனால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அங்கே அதிகமாக நடக்கிறது.

2002-ம் ஆண்டு பி.டி. பருத்தி அறிமுகம் செய்யப்பட்டபோது, பருத்தி விளைச்சல் சுமார் 20 சதவீதம் அதிகரித்தது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதையெல்லாம் பயன்படுத்தாதீர்கள் என்று விவசாயிகளைக் கட்டாயப்படுத்துவதற்கு, நாம் கம்யூனிச நாடு கிடையாது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தைக் கொண்டுவந்ததே நீங்கள்தான். 'ஆனால், அது என் மீதே பல நேரங்களில் குற்றம் சுமத்தியிருக்கிறது' என்று உங்கள் புத்தகத்தில் கூறியிருக்கிறீர்கள். அதனுடைய இப்போதைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு மஹான் நிலக்கரி சுரங்க நிறுவனம் தொடர்பானது. ஒரு பக்கம் அந்த நிறுவனம், ‘சுரங்கப் பணிகளில் ஈடுபடுவதற்குத் தேவைப்படும் அனுமதியை ஜெய்ராம் வழங்கவில்லை' என்று குற்றம்சாட்ட, இன்னொரு பக்கம் ‘அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்க நான் முயற்சிக்கிறேன்' என்று பசுமைத் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது.

பசுமைத் தீர்ப்பாயம் என்பது சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்கான ஒரு நீதிமன்றம். அது சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே, நான் கூறி வந்திருக்கிறேன். இப்போதும் அவை அப்படியே இயங்கிவருகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் (ஜி.டி.பி.) பதிலாக ‘தேசியப் பசுமைக் கணக்கு' (கிரீன் நேஷனல் அக்கவுண்ட்ஸ்) கணக்கிடப்பட வேண்டும் என்று கூறிவருகிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம்தானா?

நாம் இன்று ஜி.டி.பி.யை மட்டுமே கணக்கிட்டு வருகிறோம். ஆனால், அந்த உற்பத்தி அளவை அடைவதற்காக நாம் சுற்றுச்சூழலை எவ்வளவு அழித்திருக்கிறோம் என்பது குறித்துக் கணக்கிடுவதில்லை. அவ்வாறு நாம் இழந்த சுற்றுச்சூழல் வளத்தைக் கணக்கிட வேண்டும். அப்படிச் செய்தால்தான், அந்த வளத்தை நாம் நிர்வகிக்க முடியும். அப்போதுதான், அந்த வளம் காப்பாற்றப்படும். ஆனால், இதற்கு அரசியல் ஆதரவு அத்தியாவசியம்.

நீங்கள் அமைச்சராக இருந்தபோது டாடா குழுமத்துக்கு உதவுவதாகக் கிரீன் பீஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. இப்போது அந்த அமைப்பே தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

மாற்றுக் கருத்து கொண்ட தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால் இன்றுதான், என்.ஜி.ஓ. நிறுவனங்களை என்.ஓ. ஜி.ஓ. (NGO - NO GO), அதாவது, ‘நோ கோ' நிறுவனங்களாக மோடி அரசு மாற்றிவிட்டதே!

மத்திய அரசு, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் நியமித்த ‘உயர்நிலைக் குழு' அறிக்கை சூழலைச் சூறையாடுவதாக அமைந்திருக்கிறதே. இதற்குக் காங்கிரஸிடமிருந்து எந்த எதிர்ப்பும் வந்ததாகத் தெரியவில்லையே?

நம் நாட்டில் இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கான அறிக்கையாகத்தான், அந்தக் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்தினால் பேரழிவுதான் ஏற்படும். ‘இப்படி அறிக்கை வேண்டும்' என்று அந்தக் குழுவுக்கு மத்திய அரசு கட்டளையிட்டது. அப்படியே செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!

பா.ஜ.க. அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயரை ‘சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்' என்று மாற்றியிருப்பதன் மூலம் சூழலியலைப் பாதுகாப்பதில், அதிக அக்கறையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறது. இந்த யோசனை ஏன் காங்கிரஸுக்குத் தோன்றவில்லை?

இப்படி அமைச்சகத்தின் பெயரை மாற்றுவதெல்லாம் ஏமாற்று வேலை. பருவநிலையைச் சமாளிப்பதில் இந்த உலகத்துக்கே வழிகாட்டியாக, இந்தியா இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உள்நாட்டிலோ இயற்கை வளத்தை அழிக்க முயற்சிக்கும் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தின் அறிக்கையைச் செயல்படுத்த நினைக்கிறார். ஒன்று நேராக இருக்க, இன்னொன்று தலைகீழாக இருக்கிறது. இதன்படி, மோடி செய்வது ‘கிளைமேட் ஆசனம்'!

சமீபத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியா அதிகப் பங்கு வகிப்பதாகக் கூறியிருந்தது. அதைச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்தார். உங்கள் கருத்து?

பிரகாஷ் ஜவடேகர் மறுத்தது சரியே! காரணம், இன்று உலக அளவில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியா வெளியிடும் பசுங்குடில் வாயுவின் சதவீதம் 6 சதவீதம் மட்டுமே. 29 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 16 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 11 சதவீதத்துடன் ஐரோப்பிய யூனியன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 5 சதவீதத்துடன் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

ஆனால், சுற்றுச்சூழல் சட்டங்களை மதிக்காமல் காடுகளை எல்லாம் அழிக்கும் நிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டு 15 சதவீதத்துடன் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும். அப்போது அமெரிக்கா வெளியேற்றும் பசுங்குடில் வாயு சதவீதம் குறைந்திருக்கும்.

டிசம்பரில் பாரிஸ் நகரத்தில் நடக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதக் கூட்டத்தில் இந்தியா எவ்வாறு செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில் வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவுக்கு அதிக ஆபத்துகள் இருக்கின்றன. முதலாவதாக, நாம் பருவ மழையை நம்பியிருக்கிறோம். இரண்டாவதாக, இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகிக்கொண்டேவருகின்றன. மூன்றாவதாக, நமது பொருளாதார வளர்ச்சிக்காகக் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து வருகிறோம். நான்காவதாக, நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து வருகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு இந்த நான்கின் மீதும் இருக்கும். அப்போது நம்மால் எதிர்கொள்ள முடியாத விளைவுகள் ஏற்படும்.

இந்நிலையில் தற்போது எல்லோரின் கண்களும் இந்தியாவின் மீதுதான் இருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் தாங்கள் வெளியிடும் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் குறைத்துவிடுவோம் என்று சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் அறிவித்துள்ளன.

இந்தியா தனது நிலை குறித்து, இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதக் கூட்டத்தில், இந்தியா மூன்று அறிவிப்புகளைச் செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஒன்று, கோபன்ஹேகன் கூட்டத்தில் பசுங்குடில் வாயுவை 25 சதவீதமாக 2020-ம் ஆண்டுக்குள் குறைப்போம் என்று இந்தியா முடிவெடுத்தது. 2020 எனும் அந்தக் கால அளவை நீட்டிப்போம் என்று இந்தியா அறிவிக்கலாம்.

இரண்டாவது, 2022-ம் ஆண்டுக்குள் மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவை அதிகரிப்போம் என்று அறிவிக்கும். இன்று இந்த எரிசக்தி 30 கிகாவாட் அளவில் இருக்கிறது. இதை 2022-ம் ஆண்டுக்குள் 195 கிகாவாட் ஆக உயர்த்துவோம் என்று அறிவிக்கும்.

மூன்றாவதாக, நமது எரிபொருள் சிக்கனத்தை 25 சதவீதமாக அதிகரிப்போம் என்று அறிவிக்கும்.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைக் குறைப்போம் என்பதை மட்டும் இந்தியா இப்போதைக்கு அறிவிக்காது.

காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 'emergency clause' பிரிவின் கீழ் நில உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெறாமல் நிலத்தை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எவையெல்லாம் 'எமர்ஜென்ஸி' என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதைப் பா.ஜ.க. தவறாகக் கையாளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களின்போதும், ராணுவத் திட்டங்களுக்காகவும் என இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே 'எமர்ஜென்ஸி' பிரிவைப் பயன்படுத்தி நிலம் கையகப்படுத்த வழிவகை இருந்தது.

ஆனால், பா.ஜ.க. கொண்டுவரும் சட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காகக்கூட மேற்கண்ட பிரிவைப் பயன்படுத்தி நிலத்தை அபகரிக்கலாம். இது 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பவும் கொண்டுவரும் முயற்சி. ஆனால் இப்போதுதான் அவர்கள் (பா.ஜ.க.) ‘யூ டர்ன்' அடித்து நிற்கிறார்களே. அதனால் புதிதாகக் கொண்டுவரும் மசோதாவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

உணவு உற்பத்தியில் நாம் எப்போது தன்னிறைவு அடைவோம்?

தன்னிறைவு அடைவதை விடுங்கள். நிச்சயமாக உணவை முன்பைவிட அதிகளவு பெருக்கி யிருக்கிறோம். ஆனால், அதை முறையாக விநியோகிப்பதில்தான் பிரச்சினை. அதைக் களைந்தாலே நாட்டில் வறுமையை ஓரளவு சமாளித்துவிட முடியும்!

‘எந்த அமைச்சகத்துக்குப் பொறுப்பேற்றாலும் அங்கு முதலில் கண்ணாடிக் கதவுகளை வைப்பேன்’, என்று உங்கள் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதே அளவு வெளிப்படைத்தன்மையை நீங்கள் காட்டியிருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக! என்னுடைய அமைச்சரவை காலத்தில் நான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கண்ணாடிக் கதவுகள், இப்போது எதுவும் தெரியாத மரக் கதவுகளாகி விட்டன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x