Last Updated : 11 Mar, 2017 11:22 AM

 

Published : 11 Mar 2017 11:22 AM
Last Updated : 11 Mar 2017 11:22 AM

மொட்டை மாடிக்குப் பச்சைத் தொப்பி போடுங்கள்!

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று தூய்மையாக இருப்பது அவசியம். இவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொண்டால்தான் சுற்றுச்சூழலை, மண்ணை, நிலத்தை ஏன் மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்பது புரியும்.

இந்த ஐம்பூதங்களை நீண்டகாலமாக சரியாகப் பராமரிக்கத் தவறிவருவதன் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்கொள்ள இருக்கிறோம். அவற்றில் விளைநிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுவது மிக முக்கியமானது. பூமியில் எரிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதால், பசுங்குடில் வாயுக்கள் அதிகம் வெளியாகிவருகின்றன. இதனால் பூமி கட்டுமீறி வெப்பமடைந்து, பருவநிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். திடீர் வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் உண்டாகும்.

“இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அது நம்முடைய வீட்டு மொட்டை மாடிக்கு பச்சைத் தொப்பி போடுவதுதான்,” என்கிறார் சென்னையில் மாடித் தோட்டம் என்னும் கருத்தை பரவலாக்கிய முன்னத்தி ஏரான பம்மலைச் சேர்ந்த இந்திரகுமார்.

வெப்பம் குறையும்

துளசியில் தொடங்கி முருங்கைவரை 40-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், கீரை வகைகள், தாவரங்கள் இந்திரகுமாரின் மாடித் தோட்டத்தில் அணிவகுத்திருக்கின்றன. மாடியின் பக்கவாட்டுச் சுவர்களில், குழாய்களில் (இதற்குப் பெயர் செங்குத்து வேளாண்மை - வெர்டிகல் ஃபார்மிங்!), தலைக்கு மேல் கொடிகளில் என எங்கெங்கு காணினும் பச்சைப் போர்வையைப் போர்த்தியிருக்கிறார் இந்திரகுமார்.

ஒவ்வொருவரும் வீட்டு மாடியிலேயே தோட்டம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நிலத்தடி நீரை சேமிப்பது குறித்தும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்திரகுமார் தொடர்ந்து பயிற்சி அளித்துவருகிறார்.

வீட்டில் தோட்டம் போடலாம் என்னும் முடிவோடு இருப்பவர்களுக்கு கீரை, தக்காளி, கருவேப்பிலை, முருங்கை போன்றவற்றை முதலில் பரிந்துரைக்கிறோம். மாடித் தோட்டம் போடுவதன் மூலம் மொட்டை மாடியில் சூரிய வெப்பத்தின் உஷ்ணம் குறையும். தொடர்ச்சியாக வீட்டுக்குள்ளும் வெப்பம் பெருமளவு குறையும் என்று கூறும் இந்திரகுமார் நீர் சேமிப்பு, நீரை சுத்தமாக்குவதற்கான வழிகள், மின்சார சேமிப்பு என சுற்றுச்சூழலை சீரழிக்காமல், இணக்கமாகச் செயல்படுவதற்கான பல விஷயங்களைக் குறித்தும் தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறார்.

நீர் மறுசுழற்சி

வீட்டில் தோட்டம் வைக்கலாமே என்ற உடனேயே… “தண்ணிக்கு எங்க போறது?” என்று இடக்காக சிலரிடமிருந்து கேள்வி வரும். பாத்திரம் கழுவும் நீர், குளிக்கும் நீர் இப்படி நமது வீட்டிலிருந்து வெளியேறும் அதிகம் மாசுபடாத நீரையே தூய்மைப்படுத்தி, மறுசுழற்சி செய்து தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம். என்னுடைய வீட்டில் இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறேன். குளியலறை, சமையலறையிலிருந்து வெளியேறும் நீர் ஒரு தொட்டியில் சேரும். அதிலிருந்து வெளியே சொட்டும் நீர் கல் வாழைச் செடி, சேப்பங்கிழங்குச் செடியில் விழுந்து சுத்திகரிக்கப்பட்டுத் தோட்டத்தில் இருக்கும் மற்ற செடிகளுக்குப் போகும். இதுதவிர, செப்டிக்-டேங்கில் சேரும் கழிவுநீரையும் ஒருவகை பாக்டீரியாவைக் கொண்டு (ஈ.எம்.) சுத்தப்படுத்தி தோட்ட வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தேற்றாங்கொட்டை மகிமை

நல்ல உணவு, நல்ல காற்று, சுத்தமான குடிநீர் இவைதான் உலகின் எந்தப் பகுதியில் வாழும் மனிதருக்கும் அடிப்படைத் தேவை. இதில் உரிய முறையில் நீரை சேமிக்கப் பழகினால் நல்ல உணவும் காற்றும் நம் வசமாகும். நமது முன்னோர்கள் ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு என பல்வேறு வழிகளில் நீரை சேகரித்தனர். ஆற்று நீரை அணைகளிலும், மழை நீரை ஏரி, குளங்களிலும் சேமித்தனர். வறட்சிக் காலத்தில் விவசாயத் தேவைக்கும் குடிநீர் தேவைக்கும் அது பயன்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நீரைச் சுத்தப்படுத்துவதற்கு தேற்றாங்கொட்டையைப் பயன்படுத்துகின்றனர். அகல் விளக்கு, மண்பானை ஓடு போன்றவற்றில் தேற்றாங்கொட்டையை கால் பங்கு நீர்விட்டுக் கரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரைசல் 40 லிட்டர் நீரை சுத்தமாக்கக்கூடியது. அதன் பிறகு அதிலுள்ள கிருமிகளை அகற்றுவதற்கு செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் தண்ணீரை எட்டு மணி நேரத்துக்கு வைத்திருந்து, பிறகு அருந்தலாம். தேற்றாங்கொட்டை எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். நகரத்தில் இப்போது எல்லா வீடுகளிலும் கிடைக்கும் குழாய் நீர், நிலத்தடி நீரை செல்வில்லாமல் இப்படிச் சுத்தம் செய்யலாம்.

நீர் சேமிப்பு சூட்சுமம்

சமதளத்திலிருந்து உயர்த்தப்பட்ட இடத்தில் நீரைச் சேமிப்பதற்குப் பயன்படும் அமைப்பு ஏரி. சமதளத்திலிருந்து பள்ளத்தில் நீரை சேமிப்பதற்கு உதவுவது குளம். குளம், ஏரிகளை எல்லாம் பிளாட் போட்டு விற்றுவிட்ட நிலையில், உயர்ந்த ஏரிகளின் உட்புறத்தில் குளங்களை அமைக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பல ஏரிகளின் உள்ளே இப்படி குளங்களை அமைக்கும்பட்சத்தில், மழை நீர் முழுமையாக சேமிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

அதேபோல், சமதளங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் வழிகாண வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எளிய வழி மரங்கள், தாவரங்களை வளர்ப்பதுதான். வீட்டில் கிணறு இருக்கும்பட்சத்தில் தகுந்த மழைநீர் சேகரிப்புப் பாதையை உருவாக்கி, மழை நீரை கிணற்றில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இதன்மூலம் மாடித் தோட்டம் மட்டுமல்லாமல், நமக்குத் தேவையான தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படாது.

உரம் தயாரிப்பு

நீரை மறுசுழற்சி செய்வதுபோலவே மற்ற பொருட்களையும் மறுசுழற்சி செய்யலாம். வீட்டில் மீதமாகும் சமையலறைக் கழிவு, தோட்டக் கழிவு, பழம், காய்கறிக் கழிவு போன்றவற்றை ஒரு தொட்டியில் சேமித்துக்கொண்டே வர வேண்டும். இதன்மீது சாணப் பொடியை லேசாகத் தூவிவர வேண்டும். நாளடைவில் இதிலிருந்து உருவாகும் புழுக்கள், கழிவை உண்டு பல்கிப் பெருகி உரமாக மாறும். மாடித் தோட்டமாக இருந்தாலும் சரி, பண்ணைத் தோட்டமாக இருந்தாலும் சரி, உங்களுக்குத் தேவையான உரத்தை நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.

மீன் அமினோ அமிலம்

மற்றொரு சிறந்த உரம் மீன் அமினோ அமிலம். இதைத் தயாரிக்க மீன் கழிவைச் சேமித்து, அதனுடன் சம அளவுக்கு வெல்லத்தைச் சேர்த்து வைக்க வேண்டும். 40 நாட்களுக்குக் காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். 41-வது நாளில் மீன் பாகுக் கரைசல் தயாராகிவிடும். இந்த மீன் பாகுக் கரைசலுடன் 50 மடங்கு தண்ணீர் சேர்த்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இப்படித் தெளிப்பதன் மூலம் பயிர், காய்கறி வளர்ச்சியில் அபரிமிதமான பலன் கிடைக்கும். மீன் பாகுக் கரைசலை நீர் சேர்க்காமல் அப்படியே தெளித்தால் பயிர் வாடிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

கழிவு மேலாண்மை

உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால், அங்கு உருவாகும் கழிவை மறுசுழற்சி செய்து உரமாக்கலாம். தேங்காய்மட்டை போன்றவற்றைக் குப்பை என்று வெளியில் எறிந்துவிடாமல், தோட்டத்திலேயே மூடாக்காகப் பரப்பி வைக்கலாம். இதன்மூலம் நிலத்தின் ஈரப்பதம் காப்பாற்றப்படும். நிலத்தடி நீரும் சேமிக்கப்படும்.

இப்படி வீட்டில் உருவாகும் (பிளாஸ்டிக் அல்லாத) கழிவுகளை வெவ்வேறு வகைகளில் மறுசுழற்சி செய்து தோட்டத்துக்குப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டுக்கு வெளியே குப்பை செல்வதைத் தவிர்க்கலாம். வீட்டுத் தோட்டத்தையும் சிறப்பாக வளர்க்கலாம். இப்படிச் செய்வதால் குப்பைகளை எரிக்கும் வேலை தேவையில்லை; காற்றும் மாசுபடாது. ஒரு வீட்டில் மாடி தோட்டம் வைப்பதன் மூலம் அந்த வீட்டிலிருந்து வெளியேறும் குப்பை கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிடும். எல்லோர் வீட்டிலும் மாடித் தோட்டம் மலர்ந்தால், குப்பைகள் இல்லா நகரம் உள்ளங்கை நெல்லிக்கனி என்பதில் சந்தேகமில்லை.

இந்திரகுமார் - தொடர்புக்கு: 9941007057

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x