Last Updated : 17 Oct, 2015 10:26 AM

 

Published : 17 Oct 2015 10:26 AM
Last Updated : 17 Oct 2015 10:26 AM

முன்னத்தி ஏர் 5: கால்நடைக் களஞ்சியம் கணேசன்

வேளாண்மையில் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இயற்கைவழி வேளாண்மைக்குக் கால்நடைகள் மிக மிக இன்றியமையாதவை. உழவர்களுக்கு உடனடியானதும் உறுதியானதுமான வருமானம் கால்நடைகளின் மூலமே கிடைக்கும். எனவே, வருமானம் என்று பார்த்தாலும் ஒரு பண்ணைக்குக் கால்நடைகள் அவசியமானவைதான். அதிலும் பண்ணைக் கழிவுகளை வளமான மக்குகளாக மாற்றுவதற்கான சாணம், மோள் (மாட்டுச் சிறுநீர்) போன்றவை கால்நடைகள் மூலம் கிடைக்கும். இதனால் வெளியில் இருந்து பண்ணைக்கான உரங்களை வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

ரசாயனங்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருப்பவை கால்நடைகள். அதிலும் மாடுகள் வேளாண்மைக்கு மிகவும் பொருத்த மானவை. பொதுவாகச் சிறு, குறு உழவர்கள் ஒன்றிரண்டு மாடுகளை வைத்துக்கொள்ளலாம். அதிலும் நமது உள்நாட்டு மாடுகள் மண்ணுக்கு ஏற்றவையாக இருக்கும். இன்றைக்குப் பல கலப்பின மாடுகள் நம்முடைய மண்ணுக்குப் பொருந்தியதாக மாறிவிட்டன. அவற்றைப் பயன் படுத்தலாம் என்றாலும், அவற்றுக்கான பராமரிப்புச் செலவு அதிகம். நாட்டு மாடுகளுக்கான பராமரிப்புச் செலவு குறைவு.

புதிய சர்ச்சை

அத்துடன் திமில் உள்ள மாடுகளுக்கும் திமில் இல்லாத மாடுகளுக்குமான வேறுபாடுகள் பற்றி பல்வேறு சர்ச்சைகள் வரத் தொடங்கிவிட்டன. குறிப்பாக 2000-ம் ஆண்டு ஏ1-பால், ஏ2- பால் என்ற பிரிவு வெளியாகி, அதற்கு ஒரு நியூசிலாந்து நிறுவனம் காப்புரிமையும் பெற்றுக்கொண்டது. இதனால் ஏ2 பால் (திமில் உள்ள மாடுகள் தருவது) பற்றிய கருத்துகள் வெளியாகின. இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் உருவானது. ஏ2 பால் சிறந்தது என்றும் ஏ1 பால் (திமில் இல்லாத மாடுகள் தருவது) உடலுக்குத் தீமை விளைவிக்கும் பீட்டா காசின் (beta-casein) என்ற புரதத்தைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் திடீர் மாற்றத்துக்கு (mutation) உட்பட்டதால் ஏ1 வகைப் பாலைத் தருவதாக மாறிவிட்டதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். இதை நிறுவுவதற்கான சான்றுகள் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் திமில் இல்லாத மாடுகளின் மீது தேவையின்றிக் கடுமையான தாக்குதல்கள் பெருகின. அதனால் திமில் உள்ள மாடுகளுக்கு மிகப் பெரிய சந்தை திறந்துவிடப் பட்டது.

திடீர் கிராக்கி

இந்தியாவிலும் அந்தப் பரப்புரை ஒருவகையான சார்புடன் புறப்பட்டது. இயற்கை வேளாண் அரங்குகளிலும் நாட்டு மாடுகள் என்ற நல்ல கருத்துக்கு “இந்தியத் தேசியம்' என்ற சாயம் பூசப்பட்டது. அதன் பின்னர் ஏ 2 (திமில் உள்ள மாடுகள்) சிறந்தவை என்ற சாயமும் ஏற்றப்பட்டது. எப்படியோ நாட்டு மாடுகள் அல்லது திமில் உள்ள மாடுகள் அல்லது ஏ 2 பால் மாடுகளுக்கான ‘கிராக்கி' அதிகமாகிவிட்டது.

தமிழ்நாட்டு உழவர்கள் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் என்று வட மாநிலங்களுக்குப் படையெடுத்து ஏராளமான பணம் செலவு செய்து வட இந்திய மாடுகளை வாங்கத் தொடங்கினர். இதில் மாட்டின் விலையைவிட போக்குவரத்துச் செலவு அதிகமானது. ரூ. 30 ஆயிரம் மாட்டுக்கு, ரூ. 40 ஆயிரம் போக்குவரத்துச் செலவு ஆனது. இதை மாற்றி உள்ளூரிலேயே குறைந்த விலைக்கு இந்த வகை மாடுகளை உருவாக்கித் தரவேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கி வருபவர்தான் கரூர் கணேசன்.

ஆன்மாவின் தொழில்

தொடக்கத்தில் ஆடை உற்பத்தித் தொழிலில் இருந்தவர் என்றாலும், தனது ஆன்மாவின் தொழிலான வேளாண்மையை விடாமல் செய்துவந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக முழுநேர உழவராக, அதிலும் இயற்கைவழி உழவராக மாறிவிட்டார். அதன் தொடர்ச்சியாகக் கால்நடை வளர்ப்பிலும், அது பற்றி அறிவைப் பெருக்குவதிலும் முனைப்பாக உள்ளார்.

தமிழ்நாட்டின் சிறப்பு அடையாளங் களில் ஒன்றான காங்கேயம் மாடுகளை மேம்படுத்துவதிலும், குறைவான பால் தரும் தமிழ் மாட்டினங்களை கூடுதல் பால் தரும் இனங்களாகப் பெருக்கும் ஆய்விலும் இவர் ஈடுபட்டுள்ளார். பாரம்பரியக் கால்நடைகள் மட்டுமல்லாமல் புதிய வகைக் கால்நடைகள் எது வந்தாலும், அதைப் பற்றிய முழு விளக்கங்களையும் திரட்டி வைத்திருக்கும் தேர்ந்த பண்ணையாளர் இவர்.

கரூர் நகரத்தில் குடியிருக்கும் சி.கணேசன், தன்னுடைய பெரும் பொழுதைப் பண்ணையில்தான் கழிக்கிறார். இவர் ஒரு அறிவியல் பட்டதாரி. நெல், மஞ்சள், தென்னை என்று நுட்பமான பயிர்களைச் செய்துவந்தவர். இப்போது முழு நேரமாகக் கால்நடை ஆய்வில் இறங்கிவிட்டார்.

கால்நடைகளைப் பற்றி இவரிடம் கேட்டுக்கொண்டிருந்தால் மணிக் கணக்கில் பேசுவார். எப்படி ஒரு கால்நடையைத் தேர்வு செய்வது, என்ன மாதிரியான சிறப்புக் கூறுகள் ஒரு மாட்டிடம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு தேர்ந்த பேராசிரியரைப் போல விளக்குகிறார்.

(அடுத்த வாரம்: திப்புவைக் கவர்ந்த காங்கேயம் காளை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
கணேசனைத் தொடர்புகொள்ள: 98652 09217

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x