Last Updated : 30 Jul, 2016 12:42 PM

 

Published : 30 Jul 2016 12:42 PM
Last Updated : 30 Jul 2016 12:42 PM

முன்னத்தி ஏர் 41: ஒன்றின் கழிவு, மற்றொன்றின் உணவு

பொங்கிப் பெருகும் நீரோடைகள், வழிந்தோடும் வாய்க்கால்கள் என்று நீர்வளம் மிகுந்த பகுதியாகக் கரூர் விளங்குவதற்குக் காரணம் காவிரியின் கொடை. அந்த நீர் குடிப்பதற்குப் பயனற்றுப்போனதற்குக் காரணம் தொழிற்புரட்சி தந்த கொடை. நிலவளமும் நீர்வளமும் மிகுந்த பகுதியான கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகில் உள்ள சிற்றூர் நடையனூர். அழகிய இந்த ஊர், சாயத் தொழிற்சாலைகளாலும் காகித ஆலைக் கழிவுகளாலும் மாசுபட்டுக் காணப்படுகிறது. நீர்வளம் கெட்டதுடன் நிலவளமும் குறைந்துவருகிறது. கூடுதலாக வேதி உரங்களும், வேதிப்பூச்சிக்கொல்லிகளும் மிக வேகமாக நிலத்தடி நீரைக் கெடுத்துவருகின்றன. பொதுவாக நீர்வளம் மிக்க பகுதிகளில் பயன்படுத்தப்படும் வேதி உரங்கள் நிலத்தடி நீரில் ஊடுருவி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை உருவாக்கி மற்றவர்களுக்கு வழிகாட்டி வருபவர்கள் நடையனூர் மதியழகன், செங்குட்டுவன் இணையர். இவர்கள் இருவரும் உடன்பிறப்புகள் என்பதுடன் கூட்டுக் குடும்பமாகவும் வாழ்கின்றனர்.

இவர்களது பண்ணை சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அடுக்குமுறை வேளாண் பண்ணை வளர்ந்துள்ளது. ஓரடுக்குத் தென்னை, அடுத்தது தேக்கு, அடுத்து வாழை, அடுத்து கோகோ, அடுத்துக் காய்கறிகள், மூலிகைகள், அடுத்துக் கிழங்குகள் என்று பல அடுக்குகளாகப் பண்ணை உருவாகியுள்ளது. இது தவிரக் கோழி, மாடு, மீன் என்று கால்நடைகளையும் பண்ணையில் இணைத்துள்ளனர்.

எது கழிவு? எது உணவு?

தாளாண்மை பண்ணையத்தின் அடிப்படை விதியான ‘ஒன்றன் கழிவு ஒன்றன் உணவு' என்ற அடிப்படையில் இப்பண்ணையில் பெரும்பாலான கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாகக் கோழிகளின் கழிவு, மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. அத்துடன் அது பூப்புழுக்களாகவும் (maggot) மாற்றப்படுகிறது. இந்தப் புழுக்கள் மீன்களுக்கு உணவாக மாற்றப்படுகின்றன. மீன்கள் வளரும் நீரில் அமினோஅமிலங்கள் அதிகமாக இருக்கும். அந்த நீர் பயிர்களுக்கு மிகவும் சிறந்தது. அதன் காரணமாக, மீன் தொட்டியில் உள்ள நீரைப் பயிர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்தச் சத்து நீரை எடுத்துக்கொண்டு மரங்களும் பயிர்களும் செழித்து வளர்கின்றன. முதலில் உழவு செய்து மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இப்போது, உழவில்லா வேளாண்மைக்குப் பண்ணை மாறிவிட்டது.

உழவில்லா வேளாண்மை

தென்னையிலிருந்து விழும் தேங்காய்களை மட்டும் பொறுக்கி எடுத்துக்கொள்கின்றனர். மீன் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு வளரும் தீவனப் பயிர்கள், மாடுகளுக்கு உணவாகின்றன. மாட்டுச் சாணம் பல இயற்கை வேளாண் இடுபொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அமுதக் கரைசலும் ஆவூட்டமும் (பஞ்சகவ்யம்) தயாராகின்றன.

இவர் தயாரிக்கும் ஆவூட்டம், கோழிகளின் உணவிலும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளின் செரிமானச் சக்தி அதிகரிப்பதுடன் முட்டையின் தரமும் சிறப்பாக உள்ளது என்கிறார் மதியழகன். பல இடங்களில் பண்ணைக் குட்டைகளை அமைத்து நீர்சேகரிப்பு பின்பற்றப்படுகிறது. இப்பகுதி நீர்வளம் மிக்கதாக இருந்தபோதும், நீர் சேகரிப்பில் இவர்கள் கூடுதல் அக்கறை செலுத்துகிறார்கள்.

இப்படித் தாம் பெற்ற அறிவைத் தங்களது சுற்றத்துக்கும் நட்பு வட்டத்துக்கும் எந்தவிதத் தடையும் இன்றி இவர்கள் வழங்கி வருகிறார்கள். இங்குள்ள உழவர்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பை மதியழகன் நடத்திவருகிறார். இதில் இயற்கைவழி உழவர்களும் உள்ளனர். ரசாயனச் சாகுபடி உழவர்களும் உள்ளனர். அவர்களிடம் இயற்கைவழிக்கு மாறும்படி மதியழகன் தொடர்ந்து பேசிவருகிறார். இந்த அமைப்பு உழவர்களுக்கான இடுபொருள்களை மலிவு விலையில் கொடுக்கிறது. அத்துடன் நல்லெண்ணெய் போன்ற பொருட்களைத் தயாரித்து இவர்கள் விற்பனை செய்தும் வருகின்றனர். கரூர் பகுதியில் முன்னத்தி ஏராக மதியழகனும் செங்குட்டுவனும் திகழ்கிறார்கள்.

மதியழகன், செங்குட்டுவன்

(அடுத்த வாரம்: கோழிகளுக்கும் கொடுக்கலாம் பஞ்சகவ்யம்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

மதியழகன்- செங்குட்டுவனைத் தொடர்புகொள்ள: 9442577431

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x