Last Updated : 13 Feb, 2016 12:01 PM

 

Published : 13 Feb 2016 12:01 PM
Last Updated : 13 Feb 2016 12:01 PM

முன்னத்தி ஏர் 19: வருமானம் குன்றாத அடிசில் சோலை

திணையியல் என்ற இன்றைய சூழலியல் அறிவியல், காடுகளைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கிறது. வெப்பமண்டலக் காடுகளை (tropical forests), மழைக் காடுகள் (rain forests), பருவக் காடுகள் (monsoon forest) முட்காடுகள் (thorn forest) என்று பல வகைகளில் பிரிக்கின்றனர். இத்தகைய பிரிவுகள் காடுகளின் அமைவிடத்தைப் பொறுத்து அழைக்கப்படுகின்றன.

பருவக் காடுகள் கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு மழைக்காலத்தில் துளிர்க்கின்றன. இதனால் மண்ணில் வளம் பெருகுகிறது. இத்தகைய தன்மை கொண்ட காடுகளை இலையுதிர்க் காடுகள் என்று கூறுவார்கள். ஆனால், இந்தப் பெயர் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள காடுகளையே குறிக்கும். தென் அரைக்கோளப் பகுதியிலுள்ள காடுகளை மழைக் காடுகள் என்றோ, ஈரக் காடுகள் என்றோதான் அறிவியலாளர்கள் குறிக்கின்றனர். இந்தப் பெயரை முதலில் வழங்கியவர் ஏ.எஃப்.டபிள்யு. சிம்பர் என்ற ஜெர்மானிய அறிஞர்.

சோலைக் காடுகள்

வெப்பமண்டல மழைக் காடுகளின் ஒரு பிரிவைச் சோலைக் காடுகள் என்று குறிக்கின்றனர். தமிழகத்தின் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளைச் சோலைக் காடுகள் (shola forest) என்று அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்தச் சோலைக் காடுகள் தமக்கெனத் தனியான சிறப்புத்தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன. இவை அடுக்கு முறையில் அமைந்துள்ளன. கலித்தொகையில் கபிலர் இதைப் பதிவு செய்துள்ளதைப் பார்த்தோம்.

அடுக்குமுறைச் சாகுபடியின் மற்றொரு சிறப்பு இதன் மண்வளப் பாதுகாப்பு. இங்கு எப்போதும் தரை மூடப்பட்டிருக்கும், வெயிலும் நேரடியாக மண்ணைத் தாக்காது. இதனால் எண்ணற்ற நுண்ணுயிர்கள் மண்ணில் பெருகி வளரும். இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும். இதனால் ஒரு வலிமையான உணவு தொடரி (food chain) உருவாகும்.

அணிநிழற்காடு

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்' என்று திருக்குறள் குறிக்கிறது.

சோலைக் காடுகளைத்தான் திருவள்ளுவர் அணிநிழற்காடு என்கிறார். ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக அடுக்குமுறையில் அணியாக அமைந்து, ஒன்றின் நிழல் மற்றொன்றின் மீது விழும் வகையில் இக்காடுகள் அமைந்திருக்கின்றன. இவ்வாறு பகுதி நிழலில் வாழும் மரவடைகளை (flora), காடுகளில் இயற்கை தானாகவே தேர்வு செய்கிறது.

பொதுவாக மழை பெய்யும்போது செம்மண் நிலமெனில் நீர் சிவப்பாகவும், கரிசல் நிலமெனில் பால்போன்ற நிறத்திலும் ஓடும். நிலத்திலுள்ள மேல்மண் கரைந்து செல்வதே இதற்குக் காரணம். இதை மண்ணரிமானம் (soil erosion) என்று அறிவியல் கூறுகிறது. இந்த மேல்மண்தான் அனைத்துப் பயிரினங்களும் வாழ்வதற்கான ஆதாரமாகத் திகழ்கிறது. வளமான மேல்மண் உருவாக நான்கு கோடி ஆண்டுகளுக்கு மேலாகும் என்கின்றனர். இந்த மண் அழிந்துபோவது நல்லதன்று. இதைப் பாதுகாப்பதே, சூழலியல் பாதுகாப்பின் முதன்மைச் செயல்பாடாக இருக்க வேண்டும்.

மண் அரிமானம் இல்லாத இடத்தில் விழும் நீர் நிறமற்று இருக்கும். இதைத்தான் திருவள்ளுவர் 'மணி நீர்' என்கிறார். மணி நீர் உருவாவதற்கு வேண்டியது, அணிநிழற்காடு என்ற சோலைக் காடாகும். அணிநிழற்காடு உள்ள இடத்தில் மழைத்துளி மண்ணைத் துளைக்காது, வெயில் தரையைத் தொடாது. அங்கே வளமான மண்ணும், செழிப்பான மலையும், மாசற்ற மணியான நீரும் உறுதியாக இருக்கும். இதுவே ஒரு நாட்டின் அரணாக இருக்கும்.

தொடர் வருமானம்

சீவகசிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளத்தைக் குறிக்க வரும்போது தமிழக அணிநிழற்காடுதான் திருத்தக்கத் தேவருக்கு நினைவில் ஓடியுள்ளது.

“காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து

தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங்கதம் என்று இசையில் திசை போயதுண்டே''

என்று தென்னை (தெங்கு), பாக்கு (கமுகு), பலா (வருக்கை), மா, வாழை என்ற ஒருவகையான அடுக்குமுறையை விளக்குகிறது இப்பாடல்.

ராபர்ட் ஃகார்ட் என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர், இந்தத் தொழில்நுட்பத்தை மிக முன்னேறிய தொழில்நுட்பமாகப் பதிவு செய்கிறார். இத்தகைய முறையில் ஒரு பண்ணையை உருவாக்கும்போது நாளும் ஒரு வருமானம், கிழமைக்கு ஒரு வருமானம், மாதம் ஒரு வருமானம், ஆண்டுக்கு ஒரு வருமானம் என்று தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். பண்ணையாளனின் உழைப்பு குறைந்துகொண்டே வரும். இப்படி யாக உணவு தரும் ஒரு காட்டை ‘அடிசில் சோலை’ என்கிறோம்.

(அடுத்த வாரம்: ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர் )

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x