Last Updated : 18 Jun, 2016 12:09 PM

 

Published : 18 Jun 2016 12:09 PM
Last Updated : 18 Jun 2016 12:09 PM

மாநகருக்குத் திரும்பிய மண்பாண்டங்கள்!

சாப்பிடும் உணவுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் போன்றே உணவைத் தயாரிக்கும் கலங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தனர் நமது மூதாதையர்கள். வாழையடி வாழையாக மண் பாண்டத்தில் உணவைச் சமைத்து, அதை வாழை இலையில் இட்டு, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டவர்களின் தொடர்ச்சிதான் நாம். பத்தாண்டுகளுக்கு முன்புவரைகூட, தண்ணீர் பந்தல்களில் பானையில் குடிநீரை வைத்து ஆரோக்கியமாக நம்முடைய தாகம் தீர்த்த இடத்தை, இன்றைக்குப் பிளாஸ்டிக் கேன்களே நிரப்புகின்றன.

ஒரு காலத்தில் உழவுக்கு, தோட்டத்துக்கு, சமையலுக்கு என மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த மண்பாண்டங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகக் கடந்த 11, 12-ம் தேதிகளில் மண்பாண்டப் பொருட்கள் கண்காட்சியை ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் அமைப்புடன் இணைந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் ரேகா, பார்த்தசாரதி, அல்லாடி மகாதேவன் ஆகியோர் சென்னை சேத்துப்பட்டிலிருக்கும் லாமெக் அவென்யூவில் நடத்தினர்.

நேரடி விற்பனை

“களிமண் பொருட்களைச் செய்வதில் ஆறு தலைமுறையாக ஈடுபட்டிருக்கிறது அர்ஜுனனின் குடும்பம். உடல்நலம் குறைந்த நிலையிலும் மண்பாண்டங்களைச் செய்துவருகிறார் களிமண் சிற்பியான அரசு. இவர்களுக்கு உதவும் வகையிலும், மக்களிடையே நாளுக்கு நாள் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்துவருவதாலும், அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் இந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்தோம்” என்கின்றனர் ரேகா, பார்த்தசாரதி தம்பதி.

பூ ஜாடி, பூஜையறையில் வைக்கும் மண் கூடை, செடி வளர்க்கும் விதவிதமான தொட்டிகள், சமையலறையில் பயன்படும் தவா, குழம்புச் சட்டி, சாதம் வடிக்கும் பானை, மண் குவளை, தண்ணீர் வைப்பதற்கு மண் ஜாடி, மண்ணால் செய்யப்பட்ட வீட்டு அலங்காரப் பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், கழுத்தணிகள் எனப் பல பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

இடைத் தரகர்கள் இல்லாததால் கட்டுப்படியாகும் விலைக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோருக்குக் கிடைத்தன. இப்படிப் பலதரப்பட்ட மண்பாண்டப் பொருட்களைப் பலரும் ஆசையோடும் திருப்தியோடும் வாங்கிச் சென்றதில் இருந்தே, இந்தக் கண்காட்சியின் நோக்கம் நிறைவேறியதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

சரிந்த குயவர்கள்

மண்பாண்டங்களில் சமைத்து உண்பதன் மூலம் நம் உடலில் தங்கியிருக்கும் நச்சு எச்சங்கள் நீங்கும். களிமண்ணை உடலில் பூசுவதை ஒரு சிகிச்சையாகவே வெளிநாடுகளில் செய்யப்படுகிறது என்ற சிற்பி அரசு, குழந்தைகளுக்குக் களிமண்ணைக் கொண்டு சிறுசிறு பொம்மைகளைச் செய்வதற்குப் பயிற்சி அளித்தார்.

“மண்பாண்டப் பொருட்களைப் பற்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்துவருகிறேன். மண்பாண்டம் செய்வதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. உழவுக்கு, தோட்ட வேலைகளுக்காகச் செய்யப்படும் பாண்டங்களுக்கு, களிமண்ணை மிதிப்பது ஒரு விதம். சமையல் பாத்திரங்கள் செய்வதற்கு, களிமண்ணை மிதிப்பது வேறொரு விதம். மண்ணை மிதித்துப் பதப்படுத்துவதிலேயே நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் சமூகத்தினர் அதிகம் இருந்தனர். எனக்குத் தெரிந்தவரை, திருநெல்வேலி பக்கத்திலிருக்கும் கூனியூரில் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஏறக்குறைய 3 ஆயிரம் குடும்பங்கள் இருந்தன. இன்றைக்கு அவை 300 குடும்பங்களாகிவிட்டன. அவர்களுக்கு உதவும் நோக்கில் மண்பாண்டங்களை வாங்கி விற்பனை செய்துவருகிறேன்” என்கிறார் இயற்கை விவசாயப் பண்ணை வைத்திருக்கும் அல்லாடி மகாதேவன்.

எல்லோரும் வனையலாம்

சுழன்றுகொண்டிருக்கும் சக்கரத்தில் வைக்கப்படும் களிமண் எப்படிப் பாண்டமாக உருப்பெறுகிறது என்பதை அருகிலிருந்து பார்ப்பதற்கும், நம்முடைய கைகளின் மூலமாகவே சிறிய பொருட்களை உருவாக்குவது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். அந்த வகையில் கண்காட்சிக்கு வந்திருந்த எல்லோருடைய கனவையும் அர்ஜுனன் (தொடர்புக்கு: 97868 07849) நனவாக்கினார்.

பலருக்கும் அகல் விளக்கை வனைவது எளிதாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய கைகளைச் சேர்த்துச் செய்த அகல் விளக்கை ரொம்பவும் பாதுகாப்பாகக் காயவைத்து எடுத்துச் சென்றது, அந்தத் தொழில் மீட்கப்பட்டுவிடும் என்னும் நம்பிக்கையை அளித்தது. அர்ஜுனன் போன்ற குயவர்களைப் பள்ளிகளுக்கு அழைத்து மண்பாண்டம் செய்யும் கலையைப் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்களுக்குப் பானை வனையும் பயிற்சியையும் வழங்கலாம்.

களிமண்ணைக் கொண்டு அணிகலன்கள் செய்யும் பயிற்சி, களிமண் பாண்டங்களுக்கு வண்ணம் பூசும் பயிற்சி மருத்துவ ஆலோசனை போன்றவையும் இந்தக் கண்காட்சியில் வந்திருந்தவர்களுக்குக் கிடைத்தது.

வீட்டிலேயே தயாரிக்கலாம் குப்பையிலிருந்து எரு

வீட்டிலிருந்து தரம் பிரிக்காமல் வெளியேற்றப்படும் குப்பை நீர்நிலை ஓரங்களில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் நீர்நிலைகள் அசுத்தமாகின்றன. இதைத் தவிர்க்க, வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கினார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சாய்மீனாட்சி.

உங்களிடம் இருக்கும் மண்பாண்டக் கலனில் சிறிது மண்ணைப் பரப்பி, அதன்மீது மட்கும் கழிவுகள், தாள், மரத் தூள், காபித் தூள், டீத் தூள், புளித்த தயிர், மீதமாகும் உணவு, ஊசி போன சாம்பார் போன்ற உணவு வகைகள், காய்ந்த சருகுகள், இலை தழைகள், காய்கறி, பழத் தோல்கள் போன்றவற்றைப் பாண்டம் நிறையும்வரை போட்டுக்கொண்டே வரவேண்டும்.

வாரத்துக்கு ஒரு முறை, நீர் அதிகம் இருந்தால், மரத்தூள், சாம்பல் போன்றவற்றைப் போடலாம். அந்தக் கலனில் 40 முதல் 45 நாட்களில் எரு உருவாகிவிடும். இந்த எருவோடு மண் சேர்த்து, தொட்டிகளில் செடி வளர்க்கலாம். வீட்டிலேயே தயாராகும் இந்த எருவின் மூலம் மிகவும் ஊட்டமான காய்கறிகள் தோட்டத்திலேயே வளர்க்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x