Published : 02 May 2015 01:47 PM
Last Updated : 02 May 2015 01:47 PM

‘மனிதனின் யுகம்’ எது?- தொழிற்புரட்சியா, அணுகுண்டு வெடிப்பா

அமெரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியர்கள் காலடி எடுத்துவைக்கத் தொடங்கிய பிறகுதான் அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்கள் புது வேகமும் வடிவமும் பெற்றன. எனவே, அவர்கள் குடிபெயர ஆரம்பித்த கி.பி. 1610-வது ஆண்டையே புவிஅறிவியல் ரீதியாக, மனிதனின் யுகமாகக் கருதலாம் என்று புவி அமைப்பியல் குறித்து ஆராயும் புவிஅறிவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக ‘நேச்சர்’ என்ற பருவ இதழில் பதிவு செய்துள்ளனர். ஆனால் மற்றவர்களோ தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தையோ, முதல்முறையாக அணுகுண்டை வெடிக்கச் செய்து சோதனை நடத்திய காலத்திலிருந்தோ மனித யுகம் தொடங்கியதாகக் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றனர்.

தேடல் குழு

நாம் வாழும் பூமியின் தன்மையும் பயன்பாடுகளும் பெரிதும் மாறக் காரணமாக இருந்த செயல் எது என்று ஆராய்ந்து, அதையே மனித யுகம் என்று அறிவிக்கச் சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. கிடைக்கும் ஆதாரங்களைப் பரிசீலித்த பிறகு, ‘மனித யுகம்’ எது என்பதை அடுத்த ஆண்டில் அந்தக் குழு அறிவிக்கும்.

புவியின் வரலாற்றை நிலஅறிவியல் அறிஞர்கள் பல கட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். கண்டங்களின் நிலத் தட்டுகள் பிளவுபட்டு, நகர்ந்து, பிறகு ஒன்றொடொன்று உரசிக்கொண்ட காலத்தையே புவியமைப்பில் ஏற்பட்ட முக்கியக் கட்டமாகக் கொள்வோர் உண்டு. விண்ணிலிருந்து வந்து பூமியின் மீது பெரிய விண்கல் விழுந்த காலத்தையே முக்கிய மாற்றத்துக்கான கட்டமாகக் கொள்ள வேண்டும் என்று கூறி, அதையே மனித யுகமாக அறிவிக்க வேண்டும் என்போரும் உண்டு. பருவநிலையில் முக்கிய மாற்றம் ஏற்படுத்திய காலத்தைத்தான் புவிஅறிவியல் காலத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றம் ஏற்பட்ட காலமாகக் கருத வேண்டும் என்போரும் உண்டு.

புதிய வரையறை

நாம் இன்னும் ஹோலோசீன் காலகட்டத்திலேயே இருக்கிறோம். 11,500 ஆண்டுகளுக்கு முன்னால் பனி யுகம் (ஐஸ் ஏஜ்) முடிவடையத் தொடங்கியது. அப்போதுதான் ஹோலோசீன் காலகட்டம் தொடங்கியது. அதுதான் இப்போதும் தொடர்கிறது. ஆனால், மனிதக் குலம் இந்தப் புவியின் அமைப்பு, தன்மையையே பெரிதும் மாற்றிவிட்டது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். எனவே, புவிஅறிவியல் ரீதியாக இதன் காலத்தை மறுவரையறை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பாறைகளில், படிமங்களில், பனியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படத் தொடங்கியது எப்போது என்பதை அடையாளம் கண்டுவிட்டால், புதிய காலவரையறையும் எளிது என்பது நிபுணர்களின் கருத்து. இந்தப் புவியமைப் பியலே மாறுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்வு அல்லது கட்டம் எது என்பதைத் தீர்மானித்துவிட்டால், இந்த யுகத்தை நிர்ணயிப்பது எளிதாகிவிடும் என்கிறார் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் மஸ்லின். புவிஅறிவியல் கால வகைப்பாட்டின்படி ஒவ்வொரு கட்டத்தையும் தாங்கள் குறித்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பரவிய தாவரங்கள்

ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய பிறகு உலக வர்த்தகம் விரிவடைந்தது. பண்டங்கள் மட்டுமல்லாமல் அறிவியல் தொழில்நுட்பமும் பல்வேறு நாடுகளுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டன. மத்திய அமெரிக்காவில் விளைந்த சோளம் தெற்கு ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் சீனாவுக்கும் கொண்டு செல்லப்பட்டது. தென் அமெரிக்காவில் விளைந்த உருளைக்கிழங்கு பிரிட்டனிலும் சாகுபடியாகத் தொடங்கியது. ஐரோப்பாவிலிருந்து அப்படியே சீனாவுக்குப் பரவியது. கோதுமையும் கரும்பும் வட அமெரிக்கா சென்றன, பிறகு தென் அமெரிக்காவுக்கும் பரவின.

தாவரங்களிலும் சாகுபடிகளிலும் கலப்பு தொடங்கியது. உலகின் ஒரு பகுதியில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்ட தானிய வகைகள் மற்றப் பகுதிகளுக்கும் பரவின. புவியமைப்பியல் ரீதியாக இப்படி அதற்கு முன் நடந்ததில்லை. தொல் காலத்து மகரந்தத் தூள்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள பயிர்களில் காணப்பட்டன.

ஐரோப்பிய மக்கள் மட்டுமல்ல அவர்களுடைய நோய்களும் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சுமார் 5 கோடி பேர் அமெரிக்காவில் நோயால் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

1610 ஏன்?

விவசாய நிலங்கள் பழைய நிலைக்குச் சென்றன. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் விவசாய நிலங்கள், மீண்டும் மழைக் காடுகளாகவும் உலர் காடுகளாகவும் நீண்ட புல்வெளிப் பிரதேசமாகவும் மாறின. அதன்படி, மனித யுகத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கு 1610-வது ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டால் உணர முடியும். அப்போது தாவரங்கள், மரங்களில் ஏற்பட்ட மாற்றத்தை ஆராய்வதன் மூலம் மனித யுகத்தைத் தீர்மானிக்கலாம்.

மற்றொரு ஆண்டு 1964

1940-கள், 1950-கள், 1960-களில் நடந்த அணுகுண்டு வெடிப்பு சோதனைகள் முடிவுக்கு வந்த 1964-வது ஆண்டை அடிப்படையாகக் கொண்டு புவிஅறிவியலில் ஏற்பட்ட மாற்றங்களை அடையாளம் காணலாம் என்றும் சிலர் கூறுவதுண்டு. அணுகுண்டு சோதனைகள் நிகழ்த்தப்பட்டதால் சுற்றுச்சூழலில் அதிக அளவு கதிரியக்கம் வெளியானது. சோதனைகள் நிறுத்தப்பட்டதும் அந்தக் கதிரியக்க விளைவுகள் கணிசமாகக் குறைந்துவிட்டன.

1960-களின் நடுப் பகுதியில் புவியைச் சுற்றியிருந்த பல அம்சங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. உலக மக்கள்தொகை ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்தது. விவசாயத்திலும் தானிய உற்பத்தியிலும் அதுவரை இருந்திராத மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், மாறுதல்கள் எந்த வகையிலும் அந்தக் காலத்துக்குத் தொடர்புடையதாக இல்லை.

கி.பி.1610 என்பது வரலாற்று ரீதியாக முக்கியமானது, ஆனாலும் அப்போது மனித யுகம் தொடங்கியதாக அறிவிக்க மேலும் பல சான்றுகள் தேவைப்படலாம்.

20-வது நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஏராளமான துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால் மனித யுக நிர்ணயத்துக்கு, மேலும் பல அறிகுறிகள் ஆராயப்பட வேண்டியிருக்கும்.

தமிழில்: சாரி

கொலம்பஸின் அமெரிக்க வருகை



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x